வடக்கு, கிழக்கு தமிழ் மாணவரின் கல்வித்துறையில் திடீர் வீழ்ச்சி | தினகரன்

வடக்கு, கிழக்கு தமிழ் மாணவரின் கல்வித்துறையில் திடீர் வீழ்ச்சி

முப்பது வருட காலம் யுத்தம் சூழ்ந்திருந்த வேளையில், தமிழ் மாணவரின் கல்வி சீரழிந்து போனது. அன்றைய சிறுவர் பராயத்தினர் இன்று உயர் தரத்துக்கு வந்ததும் கல்வியை தொலைத்து நிற்கின்றனர்

தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் கல்விச் சமூகமும் விழிப்படைய வேண்டிய அவசர கால கட்டம் இது

உலகில் கல்வியை இலவசமாக வழங்கி வருகின்ற நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதுடன், எமது நாட்டில் உள்ள கல்வி செயற்பாட்டு கொள்கைகளும் உயர்ந்த தரத்தில் இருக்கின்றன. இந்த உயர் கல்வித் தர உயர்ச்சிக்குப் பின்னால் ஆசிரியர் சமூகம் இருந்து வருகின்றது.

இன்று வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் கல்விப்  பின்னடைவுக்கு திட்டமிட்ட மறைமுகமான சதி முயற்சியும் ஒரு காரணம் என அம்பாறை மாவட்ட  தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் கூறி இருந்தமை இவ்விரு மாகாண புத்திஜீவிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது இம்மாகாணங்களில் மாணவர்களின் கல்வி அடைவு மட்டம் மிகக் கடுமையாக சடுதியாக ஏன் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இவற்றை மீளக்கட்டியெழுப்ப எவ்வாறான நடவடிக்கைகளை விரைவாக செய்ய வேண்டும் என்ற கட்டாயத்துக்கு கற்றோர் சமூகம் வந்துள்ளது.   

முப்பது வருடங்களுக்கு மேலான யுத்தம் வடக்கு, கிழக்கு கல்வி நிலையை வீழ்ச்சியடையச் செய்து விட்டது. வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் முதன்நிலை கல்வியியலாளர்கள் பலர் தமது உயிரை மட்டும் பாதுகாத்தால் போதும் என்ற நிலையில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று விட்டனர். வடக்கு, கிழக்கு தமிழர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு மிக பிரதானமான அக, புற வளங்கள் யாவும்  திட்டமிட்ட முறையில் அழித்தொழிக்கப்பட்டன. கல்விக் கூடங்கள் அகதி முகாம்களாகவும் இராணுவ முகாம்களாகவும் செயற்பட்டதையெல்லாம் இலகுவில் மறந்து விட முடியாது. இவ்வாறான இக்கட்டான நிலையிலேயே  தமிழ் சமூகம் இருந்து வந்தது.

இன்றைய காலத்தில் முப்பது நாற்பது வயதையுடைய ஆண், பெண் சமூகம் சரியான தொழில்வாய்ப்புகள் இன்றி வறுமையில் வாடும் நிலையினை காண முடிகின்றது. இப்பருவத்தினர்  அன்று தமது கல்வி நடவடிக்ைககளை முன்னெடுத்துச்  செல்ல முடியாத நிலை இருந்துள்ளதை இங்கு கூற வேண்டிய தேவை இல்லை.

அன்றைய  காலகட்டத்தில் நடந்தவை யாவற்றையும் நாடும் உலகமும் நன்கறியும்.தமிழ் மாணவர்கள் வீட்டை விட்டு வெளியேறவே முடியாமல் அச்சத்தினால் வீட்டில் முடங்கிக் கிடந்தனர். அப்பாவி மாணவர்களின் கல்வியைக் குழப்பும் வகையில் வேண்டுமென்றே இடையூறுகள் செய்யப்பட்டன. இம்மாணவர்களின் கல்வி திட்டமிட்டுத் தடுக்கப்பட்டது. இதுவே இன்று தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும்  சமூக பின்னகர்வுக்கு பிரதான காரணமாக இன்று அமைந்து விட்டதாக புத்திஜீவிகளால் நோக்கப்படுகின்றது.  

தமிழ் சமூகம் கடந்த கால யுத்தத்தினால் இழந்தவற்றை மீளவும் அடைய  வேண்டுமாக இருந்தால் கல்வி நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  இதற்கு தமிழ்ப் பிரதேசப் பாடசாலைகளில் கல்வி கற்பித்தலுடன் தொடர்புடைய ஆசிரிய  சமூகம் அர்ப்பணிப்புடன் செயற்படுவது மிக அவசியமாகும். தற்கால வடக்கு, கிழக்கில்  ஆசிரியர்களின் பணி நன்கு உணரப்பட்டுள்ளது. ஜப்பான், ஜேர்மனி போன்ற யுத்தம்   இடம்பெற்று அழிவடைந்த நாடுகளின் அபிவிருத்தி முன்னேற்றங்களில்  ஆசிரியர்களின் மகத்தான பங்களிப்பு இருந்துள்ளது அவதானிக்க  வேண்டியதொன்றாகும்.  

எமது நாட்டில் கல்வியைத் தொடர்வதற்கு பல வசதிகளை அரசும்,  தனியார் கல்வி நிலையங்களும் செய்துள்ளன. சிறிய தொழிலில் இருந்து கொண்டே  உயர் பட்டங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு நமது கல்வித் திட்டத்தில்  உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு  கல்வியினை இடைநடுவில் நிறுத்திய இளவயது சமூகம் நன்கு  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் புத்திஜீவிகளின் கருத்தாகும். கல்வியியலாளர்களும் சமூக  ஆர்வலர்களும் முன்னின்று உழைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு  சமூகம் இன்று உள்ளது.  

அடுத்ததாக இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்குள் பிரவேசிக்க ஆங்கிலமொழி மிக அவசியமாகும். மொழி என்பது மனிதர்களின் ஆளுமையின் வெளிப்பாடு என்று  சொல்லலாம். ஆங்கில மொழிக் கொள்கையும் பயன்பாடும் ஆங்கிலேயர்களின்  ஆட்சிக் காலத்தில் பிரதானமானதாக இருந்துள்ளது. ஆங்கிலமொழி கற்றவர்களுக்கே  அன்று அரச உத்தியோகம் வழங்கப்பட்டது.  

சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த அரசுகள் ஆங்கில மொழிக்குப் பதிலாக  இரு மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்தியதனால் மூன்றாம் மொழி அவசியமற்றுப்  போயிற்று. ஆனால் இன்று உலக நடப்புகளுடன் நாடு நெருக வேண்டுமாக இருந்தால் ஆங்கில மொழி அவசியமாகின்றது. எனவே வடக்கு,கிழக்கு மக்கள் ஆங்கில மொழியில்  பாண்டித்தியம் அடைவது கட்டாயமாகும். இதுவும் சமுதாய முன்னேற்றத்திற்கு  ஒரு படி எனலாம்.

இன்று கல்வி என்பது வியாபாரப் பொருளாகி விட்டது. பணத்தை வைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே கல்வியில் முன்னேற முடியும் என்ற நிலைமை காணப்படுகின்றது. ஆசிரிய சமூகம் கூட கல்வியை விலைபேசும் காலத்திற்கு வந்துள்ளது எனலாம். பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக  ரியூட்டரிக் கல்வி பிரபல்யம் அடைந்து விட்டது. நகரம், கிராமம் என்ற  நிலைக்கு அப்பால் சந்துபொந்து எல்லா இடங்களிலும் ரியூட்டரிகள் உருவாக்கம்  பெற்றுள்ளன. அந்த ரியூட்டரிகளில் சுமார் 75தொடக்கம் 100மாணவர்கள் வரை  கற்றலில் ஈடுபட்டுள்ளார். ஆசிரியர் ஒலிபெருக்கி வாயிலாக கற்பித்தலை  மேற்கொள்கின்றார். இங்கு பணம் ஒன்றே குறியாக இருக்கின்ற போதிலும், இங்கு  கற்றால் மட்டுமே பரீட்சையில் சித்தி பெற முடியும் என்ற மாயையில் மாணவர் சமூகம்  உள்ளது. இந்த மாயையை மாணவர்களின் மனங்களில் பதிய வைத்தவர்கள்  சமூகவிரோதிகள் என்றால் அது மிகையாகாது.  

அன்றைய யுத்தம் காரணமாக தற்போது வறுமையில் வாழும் தமிழ்  சமூகத்திலுள்ள பிள்ளைகளால் பெரும் பணம் கொடுத்து படிக்கும் நிலைமை உள்ளதா என எண்ணுவார்  இன்று எவருமில்லை. எத்தனையே பிள்ளைகள் கல்வியை இடைநடுவில் கைவிடுவதற்கு கல்வி  ஏற்றத்தாழ்வும், தாழ்வு மனப்பாங்குமே காரணம் என சொல்லமுடியும். கல்வி  கற்பதற்கான அகபுற சூழ்நிலைகளை இன்றைய அரசியல்வாதிகளும் புலம்பெயர்  சமூகமும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இன்று புலம்பெயர் சமூகம் கல்வி  வளர்ச்சிக்கான நடவடிக்கையை வடக்கு, கிழக்கில் ஆரம்பித்திருப்பது வரவேற்கப்படுவதுடன் எதிர்காலத்திலும் இந்தச் சேவை தொடர வேண்டும் என்பதே சமூகநலன் விரும்பிகளின் விருப்பமாகும். இத ற்கு இங்குள்ள கல்வியலாளர்கள் சமூகநலன் சார்ந்தவர்கள் அக்கறை காட்ட வேண்டும்.  

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள்  பிரதேச அபிவிருத்தி வேலைகளுக்கு அப்பால் எதிர்காலச் சந்ததியின் கல்வி நடவடிக்கையில்  தீவிர கவனம் செலுத்துவது அவசியம். அரசியலில் தமக்கு இருக்கின்ற செல்வாக்கினை,  அதிகாரத்தினை கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று தமிழ் சமூகத்திற்கு அவர்கள் வழங்க  வேண்டும். இதன் மூலமே அழிந்து போயுள்ள தமிழ்க் கல்வியினை விட்ட இடத்திலிருந்து  மீளத் தொடரக் கூடிய நிலைமை உருவாகும். இதனூடாக மீண்டும் ஆசியாவில் சிறந்த கல்விச் சமூகமாக  தமிழ்ச் சமூகம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதுதான் கல்வியியலாளர்களின் எண்ணம்.

ஆர். நடராஜன்
(பனங்காடு தினகரன் நிருபர்)

Add new comment

Or log in with...