Friday, March 29, 2024
Home » ரூ.736 மில்லியன் செலவில் மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு தடுப்பு வேலைத்திட்டம்

ரூ.736 மில்லியன் செலவில் மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு தடுப்பு வேலைத்திட்டம்

by Gayan Abeykoon
December 28, 2023 1:20 am 0 comment

மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கி வரும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பிரதேசங்களில் மண்சரிவை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக 736 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவ கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இத்திட்டத்துக்கு 736 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மாத்தளை மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் மண்சரிவு மற்றும் பாரிய கற்பாறைகள் உருண்டு விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பிரதேசங்கள் மாத்தளை மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றுள் மிகவும் அச்சுறுத்தலான பத்து பிரதேசங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களில் ஏற்படும் மண்சரிவை தடுத்து நிறுத்துவதற்கான கட்டுமான பணிகள் 2024 ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதற்கமைய யட்டவத்த வல்பொல கிராம சேவகர் பிரிவிற்கு 37 மில்லியன் ரூபா நிதியும் மாத்தளை தொடந்தெனிய பிரதேசத்துக்கு 63 மில்லியன் ரூபா நிதியும் மாத்தளை ஹரஸ்கம பிரதேசத்திற்கு 30 மில்லியன் ரூபா நிதியும் மாத்தளை வடகொட பிரதேசத்திற்கு 79 மில்லியன் ரூபா நிதியும் ரத்தொட்ட பொது விளையாட்டு மைதான பகுதிக்கு 118 மில்லியன் ரூபா நிதியும் லக்கல ஹெட்டன் வல பிரதேசத்திற்கு 53 மில்லியன் ரூபா நிதியும் உக்குவளை பலகடுவ பிரதேசத்திற்கு 36 மில்லியன் ரூபா நிதியும் உல்பத்த பிடி பிரதேசத்திற்கு 207 மில்லியன் ரூபா நிதியும் இத்திட்டத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இப்பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படும் கட்டுமான பணிகள் மூலம் சுமார் 110 வீடுகள் மண்சரிவிலிருந்து பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன, அனர்த்த முகாமைத்துவ காரியாலய பணிப்பாளர் சமிந்த அமரவீர உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

(மாத்தளை சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT