போதைவஸ்து பாவனை சமூகத்தில் இருந்து முற்றாக களையப்பட வேண்டும் | தினகரன்

போதைவஸ்து பாவனை சமூகத்தில் இருந்து முற்றாக களையப்பட வேண்டும்

இன்று இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பெறும் சவாலாக போதைப் பொருள் பாவனை மாறி வருகிறது. போதைப் பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள தரவுகளின்படி 2016 ஆம் ஆண்டு போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் கைதானோர் தொகை சுமார் 80,000 பேர். அவர்களில் 35 வீதத்தினர் ஹெரோயின் வைத்திருந்ததாகவும், 60% (சுமார் 48,000) பேர் கஞ்சா தொடர்பாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மேல் மாகாணத்தில் 60 வீதத்தினரும் கொழும்பில் 43 வீதத்தினரும் கைதாகியுள்ளனர், சனத்தொகையில் ஒரு இலட்சம் பேருக்கு சுமார் 250 நபர்கள் கைதாகும் நிலையில் அதுபோன்று எத்தனை வீதத்தினர் கைதாகாமல் தப்பித்துக் கொள்கின்றார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இலங்கையில் பல பாரிய குற்றச் செயல்களிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது 35 வருடங்களுக்கு முன்னரே நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அது நிறைவேற்றப்படாமல் ஆயுட்கால சிறைத் தண்டனையாக மாறிவிடுகிறது.

அண்மைக் காலமாக இலங்கையின் சகல பிரதேசங்களிலும் அதிகரித்து வரும் போதைவஸ்து வர்த்தகம் மற்றும் பாவனையை ஒழிப்பதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,போதைவஸ்து ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியூடாக பல்வேறு தேசிய நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நாடு முழுவதும் சுற்றிவளைப்புக்களை துரிதப்படுத்தி அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்காது போதைவஸ்து வர்த்தகர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுகின்றனர். பெரும் தொகை போதைப்பொருளும் கைப்பற்றப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019 பெப்ருவரி வரை சுமார் 5000 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றிய பொலிசார் சுமார் 52892 நபர்களை கைது செய்துள்ளனர். அதே காலப் பகுதியில் சுமார் 1000 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியதோடு 40,000 நபர்களையும் கைது செய்துள்ளனர்.

அண்மையில் துபாயில் கைதான போதைவஸ்து வர்த்தகத்தின் முக்கிய புள்ளி எனக் கருதப்படும் மாகந்துற மதுஷ் மற்றும் அவரது சகாக்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் பலரை இலங்கை பொலிசார் கைது செய்து வருகின்றனர். நாளுக்குநாள் அது குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணமிருப்பது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எந்தவொரு வியாபாரத்திற்கும் அதற்குரிய சந்தைகள் கட்டாயமாகும். போதைவஸ்து சந்தைப் படுத்துவோர் குறிப்பாக கட்டிளம் பருவத்தில் உள்ள பதின்ம வயதினரையே இலக்கு வைக்கின்றனர்.

பதின்ம வயதினர் பாடசாலை பருவத்தில் இருப்பவர்கள் ஆதலால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விதவிதமான வழிவகைகளில் போதைப் பழக்கங்களை அறிமுகப் படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. மென்பானங்கள், இனிப்பு வகைகள், டொபி, ​ெசாக்கலேட், ஸ்டிக்கர் வகைகள், சிகரட் வகைகள் மருந்து மாத்திரைகள் என பல்வேறு

வடிவங்களில் மாணவர்கள் போதைப் பழக்க வழக்கங்களிற்கு அடிமைகளாக்கப்படுகின்றனர்.

போதையற்ற தேசம் ஜனாதிபதி செயலணி இலங்கையில் பாடசாலைகளில் மேற்கொண்ட கணிப்பீட்டின்படி சுமார் 13 வீதமான பாடசாலை மாணவர்கள் ஏதேனுமொரு போதை பாவனையில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு, தேசிய புகையிலை மற்றும் அல்கொஹோல் அதிகாரசபை, மருத்துவ சபை ஆகியவற்றின் தரவுகள் மூலம் அறிய வந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இலங்கை பொலிஸ் திணைக்கள போதைவஸ்து ஒழிப்பு பிரிவின் தகவலின்படி போதைவஸ்து பாவனை பல பாரிய குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு காரணமாகிறது. உரிய வேளைக்கு பாவனைக்கு போதைவஸ்து கொள்வனவு செய்ய பணம் இல்லாத பொழுது திருட்டு, கொள்ளையிடல், மிரட்டிப் பணம் பறித்தல், வீட்டில் வன்முறைகளை மேற்கொள்ளுதல், கொலைகளை செய்தல் என பல குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றமை முறைப்பாடுகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதேவேளை பல குடும்பத்தினர் விடயங்கள் வெளிவருவதனை விரும்புவதில்லையாதலால் முறையீடுகள் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்கின்றனர். அதேபோன்றே போதைவஸ்து பாவனைகளில் உள்ளோர் பாலியல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டிருக்கின்றமையை கடந்த காலங்களில் ஊடகங்கள் வாயிலாக அறிய வந்துள்ளது.

மது மற்றும் புகைத்தல் பழக்கமுள்ளவர்கள் அபாயகரமான போதைவஸ்து பாவனைக்கு இலகுவாக உள்வாங்கப்படுகிறார்கள். ஜனாதிபதி உருவாக்கியுள்ள 'போதைப் பொருளற்ற தேசம்' என்ற வேலைத் திட்டத்தின் கீழ் 'கிராமங்களை கட்டி எழுப்புவோம்' வேலைத்திட்டம் நாடு முழுவதும் துரிதப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மதுபானம், புகையிலை மீதான வரிகளினூடாக இலங்கை அரசுக்கு வருடாந்தம் 143,000 கோடி (143 பில்லியன்) ரூபா வருவாய் கிடைக்கின்ற அதேவேளை புகைத்தல் மற்றும் மதுபான பாவனைகளால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகள், நோய்களைக் குணப்படுத்த அரசிற்கு 212,000 கோடி ரூபா (212 பில்லியன் ரூபாய்கள்) செலவாகின்றன.

இலங்கை சனத்தொகையில் சுமார் 40 வீதமானோர் மதுபாவனை பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அது தொடர்பான நோய்களால் வருடாந்தம் சுமார் 7500 பேர் இறக்கின்றனர். அந்த வகையில் அதேவேளை சனத்தொகையில் சுமார் 30வீதமானோர் புகைக்கின்றனர்.எனவே போதை தரும் பொருட்களின் பாவனையை மக்கள் மத்தியில் இருந்து ஒழிக்க அனைவரும் கடுமையாக பாடுபட வேண்டும்.

ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்


Add new comment

Or log in with...