மட்டக்களப்பு கல்விக் கல்லூரியின் குறைகள் விரைவில் தீரும் அறிகுறி | தினகரன்

மட்டக்களப்பு கல்விக் கல்லூரியின் குறைகள் விரைவில் தீரும் அறிகுறி

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் வருகையினால் உருவாகியுள்ள நம்பிக்ைக

கல்விக் கல்லூரிகள் ஒரு சமூகத்திற்குத் தேவையான ஆசிரியர்களை உருவாக்குபவை ஆகும். அந்தப் பெரும் பணியைச் செய்கின்ற கல்விக் கல்லூரிகள் இடர்பாடுகளின்றியும் குறைபாடுகளின்றியும் செவ்வனே இயங்க வேண்டும். அப்போதுதான் அவற்றால் உருவாக்கப்படும் ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்களாக உருவாக முடியும்.

மட்டக்களப்பு கல்விக் கல்லுாரி 1995 ம் ஆண்டு தனது பணியை ஆரம்பித்து இன்று இரண்டு தசாப்தங்களைக் கடந்து நிற்கிறது. இன்று அதன் பயிலுனர்களின் எண்ணிக்கை 432 ஆகும். இன்னும் 385 பேர் புதி தாக உள்வாங்கப்பட இருக்கின்றனர். இதில் 2ம் வருடத்திற்கான 'கட்டுறு' பயிற்சிக்கு 208 பேர் சென்று விடுவார்கள். அப்போது பயிலுனர்களின் எண்ணிக்கை 609 பேராக மாறும். இத்தனைக்கும் இது பல இடர்பாடுகளைத் தாங்கியபடி செயற்படுகிறது. இதன் நான்காவது பீடாதிபதியாக கே. புண்ணியமூர்த்தி பணியாற்றி வருகிறார்.

அவர் இதன் தேவைகளை நிறைவு செய்து. கல்விசார் உத்தியோகத்தர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் இருக்கின்ற குறைபாடுகளை அல்லது வசதியீனங்களை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கில் உள்ளார்.அவர் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து கல்விக் கல்லுாரியின் தேவைகளை எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் கல்விக் கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தார்.அவருக்கு அக்கல்லுாரிச் சமூகத்தினர், பழைய மாணவர்கள் சிறந்த வரவேற்பளித்திருந்தனர்.

கல்விக் கல்லூரிக்கு உள்வாங்கப்படும் பயிலுனர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அங்குள்ள தங்குமிட வசதிகள் போதுமானதாக இல்லை. அங்குள்ள வசதிகள் 176 பேருக்கே போதுமானவை. அந்த நிலையில் 609 பயிலுனர்களுக்கு கல்வியும் தங்குமிட வசதியும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இக்கல்விக் கல்லூரி தள்ளப்பட்டுள்ளது. தற்போது இருக்கின்ற வசதிகளுக்கு மத்தியில் இன்னும் இரு மடங்கு மாணவர்களை சேர்ப்பதால் அவர்களுடைய சௌகரியம் பாதிக்கப்படும்.

குளியலறை, கழிப்பறை, படுக்கை, சுகாதார வசதிகள் என்ற ரீதியில் பார்த்தால் அங்கு அதிக வசதியீனங்கள் தென்படும். இவ்வளவு எண்ணிக்கையினருக்கு நீர்வசதி வழங்க ஒரேயொரு குழாய்க் கிணறே இருக்கிறது. இந்த வசதியீனங்களை தாங்கிக் கொண்டு எப்படி அவர்களால் கற்க முடியும் என்பது கேள்விக்குறி.

மாணவர்களின் உணவு அறையின் கொள்ளளவு சிறியது.50 பேர் மாத்திரமே அங்கு உணவு உட்கொள்ள முடியும். எப்படி 609 பேரைச் சமாளிப்பது? ஒரு தொகுதியினர் சாப்பிட்டு முடியும் வரை இன்னொரு தொகுதியினர் காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

அது மட்டுமின்றி கட்டாக்காலி மாடுகள் உள் நுழைவதை தடுக்க சுற்றுமதில் கட்டப்படுவதோடு உள்ளக வீதிகள் திருத்தமாக நிர்மாணிக்கப்படவும் வேண்டும்.

கல்விச் செயற்பாட்டில் உள்ள குறைபாடுகள்:

இலங்கையில் தமிழ்மொழி மூல மாணவர்களுக்கான தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கு உள்ள தேசிய கல்விக்கல்லூரி இது மாத்திரமே ஆகும். அப்படியிருந்தும் அதற்கான பிரதான தொழில்நுட்ப ஆய்வுகூடமொன்று இங்கு இல்லாதிருப்பது வருந்தத்தக்க விடயம். இது பயிலுனர்களுக்கு பூரணமான கல்வியூட்டுவதற்கு பிரதான தடையாக இருக்கிறது.

'நாடகமும் அரங்கியலும்' என்ற கற்கை நெறி இங்கே இருக்கிறது. இந்தப் பாடநெறிக்கான முறையான கற்கைக்கென பொருத்தமான விசாலமான அரங்கு இங்கு இல்லை.

விளையாட்டு மைதானம் ஒன்று நவீன வசதிகளுடன் அவசியமானது. இங்கு 'சுகாதாரமும் உடற்கல்வியும்' என்ற கற்கை நெறி இருக்கிறது. நவீன வசதிகளற்ற சிறிய மைதானமொன்றை வைத்துக் கொண்டு பயிலுனர்களுக்கு இத்துறையில் கல்வியூட்ட முடியாதிருக்கிறது.

நிர்வாகப்பொறிமுறை குறைபாடு:

இது ஒரு கல்விக்கல்லூரி. தலைமைக் காரியாலயங்களிலிருந்து அடிக்கடி உத்தியோகத்தர்கள் கடமை ரீதியில் மட்டக்களப்புக்கு வருகை தருவது வழக்கம், இவர்கள் ஹோட்டல்களில் தங்குவதால் அதிக செலவை சந்திக்கிறார்கள். இதனைத் தவிர்க்க இங்கு ஒரு விடுதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

32 ஏக்கர் விஸ்தீரணமான இதன் காணியை சுத்தம் செய்து நிர்வகிக்க தற்போதைய ஆளணி போதாதிருக்கிறது. அது அதிகரிக்கப்பட வேண்டும்

வழங்கப்பட்ட ஆளணிப்பொறிமுறையினுாடாகப் பார்க்கும் போது 27 வகையான பதவிகளில் 19 பதவிகள் வெற்றிடமாக இருக்கின்றன. இங்கே குறிப்பிட்ட 27 பதவிகளிலும் 57 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அநேக விரிவுரையாளர்கள் தங்களுக்கு நேரசூசிப்படி பாடமில்லாத வேளைகளில் அமர்ந்து தங்களது பாடங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு முழுமையான தளபாட வசதிகளுடனான அறையொன்று மிக அவசியமானது.

இவைகளை நேரில் பார்வையிட்டுத் தெரிந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பெரும்பாலான குறைகளை உடனடியாக தீர்த்துத் தருவதாகவும் பிரதான குறைபாடான தங்கமிட வசதிக்கான மாடிக் கட்டடங்களை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் வாக்குறுதி அளித்ததோடு காலக்கிரமத்தில் இக்கல்விக் கல்லுாரி வினைத்திறன் கொண்டதாக மாறும் என்றும் கூறினார்.-

எஸ். தவபாலன்
(புளியந்தீவு குறூப் நிருபர்)-


Add new comment

Or log in with...