இலஞ்சம், ஊழல் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு திட்டம் | தினகரன்

இலஞ்சம், ஊழல் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு திட்டம்

நாட்டில் புரையோடிப் போயிருக்கும் இலஞ்சம், ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்பதற்கானதொரு காத்திரமான வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவிருப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்திருக்கின்றார்.

கடந்த காலங்களில் இலஞ்சத்தையும், ஊழல் மோசடிகளையும் ஒழிப்பதற்கான பல்வேறுபட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து அவற்றிலிருந்து தப்புவது மட்டுமன்றி இலஞ்சம், ஊழல் மோசடிகள் தொடர்ந்தவண்ணமே காணப்பட்டன. இன்றளவும் கூட ஊழல் மோசடிகளும், இலஞ்சமும் இடம்பெற்றவாறே உள்ளன. சின்னஞ்சிறிய விடயமானாலும் பெரிய விவகாரமானாலும் இலஞ்சமின்றி அவற்றை வெற்றிகொள்ள முடியாத நிலையையே பார்த்து வருகின்றோம். இதனைத் தடுப்பதற்கு எத்தனையோ வழிகளை முன்னெடுத்தாலும் அவை சாத்தியப்படாத போக்கையே காணமுடிகிறது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீண்டகாலமாக நாட்டில் இயங்கி வருகின்றது. முறைப்பாடுகளும் குவிந்தவண்ணமே உள்ளன. விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத இக்கட்டான நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வேலியே பயிரை மேயும் நிலையையே வெளிப்படையாக காணமுடிகிறது. இந்த விடயத்தில் புதிய உபாயங்கள் கண்டறியப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழலை முற்றாக ஒழிப்பதற்கு முறையான கொள்கைத்திட்ட மொன்றின் அவசியம் உணரப்பட்ட நிலையிலேயே அரசாங்கம் சரியானதொரு கொள்கைத் திட்டத்தை வகுப்பதற்கு திட்டமிட்டு 2017ல் தேசிய செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்குமாறு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைகுழுவுக்கு பொறுப்புச் சாட்டியது. அதனடிப்படையில் தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வருடங்களை இதற்காக செலவிட்டு நுணுக்கமாக ஆராய்ந்து இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழு பொதுநிருவாக அமைச்சுடன் இணைந்து மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு செயற்பாட்டுத் திட்டத்தை தயாரித்திருப்பதாக ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்திருக்கின்றார். நாடளாவிய ரீதியில் 50க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசனைகள், பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தேசிய செயற்பாட்டுத் திட்டம் கடந்த மாதம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திடமிருந்தும் காத்திரமான ஆலோசனைகள் பெறப்பட்டதன் பின்னரே திட்டம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய செயற்பாட்டுத்திட்டம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளன. சட்டம் கடுமையாக்கப்படுவதும் செற்பாட்டுத் திட்டம் வகுக்கப்படுவதும் இந்த விடயத்தில் நிரந்தரமான தீர்வைக்கொண்டு வரும் என எதிர்பார்க்க முடியாது. எமது நாட்டில் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளைச் சேர்ப்பது முதல் பாரிய தொழில் முயற்சிகளை முன்னெடுப்பது வரையிலான சகல விடயங்களிலும் இலஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. பல இடங்களிலும் உள்ளக மோசடிகள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்தச் சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமானால் உறுதியான நடவடிக்கை அவசியமானதாகும்.

எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் இலஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க முடியாத சவாலுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலையே காண்பட்டது. ஒவ்வொரு அரசும் ஊழலை ஒழிக்கப் பல்வேறு திட்டங்களையும் வகுத்தது. இதற்கான பிரதான காரணி அரசியல் தலையீடாகும். முதலில் கையாளப்பட வேண்டிய விடயம் அனைத்து விடயங்களிலுமிருந்து அரசியல் தலையீட்டை முற்றாக அப்புறப்படுத்துவதாகும். கட்சி அரசியல் விடயத்தில் நாம் ஒரு தரப்பை மட்டும் குற்றம் சுமத்தவில்லை சகல அரசியல் கட்சிகளுக்குள்ளும் இது ஊடுருவிப்போயுள்ளது.

அரசியல் தலையீட்டிலிருந்து விடுபடாதவரை இந்த ஒழுக்கக்கேட்டை இல்லாதொழிக்க முடியாது என்பதை நாம் உறுதிபடத் தெரிவிக்கின்றோம். இந்த நாட்டில் வாழும் மக்கள் எந்தக் காரியத்தையும் அரசியல்வாதிகளையும், அரச அதிகாரிகளையும் முறைப்படி கவனித்தால் காரியம் கைகூடிவிடும் என்ற மனோபாவத்துடனேயே காணப்படுகின்றனர்.

பொதுவாக கிராம சபை உறுப்பினர், கிராமசேவை அதிகாரி உட்பட அதி உயர் மட்டத்தில் பதவி வகிப்பவர்கள் அனைவர் மீதும் இந்த சந்தேகம் உள்ளது.

முதலில் இந்த நிலையிலிருந்து நாம் மாற வேண்டும். மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சகல தேவைகளையும், வசதி வாய்ப்புகளையும் அனைத்து மக்களும் சமமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசின் திட்டம் அமையப்பெற்றால் இந்த அவலத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடியதாக இருக்கும்.

இலஞ்சம் ஊழல் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை வலிமைப்படுத்தும் நோக்கிலேயே இந்த தேசிய செயற்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வரவேற்கத்தக்க விடயமே. எதிர்வரும் 18 ஆம் திகதி இதனை வெளியிடும் போது மக்களை அறிவுறுத்தும் நடவடிக்கையும் மிக முக்கியமானதென்பதை மறந்துவிடக்கூடாது. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் மீதான அறிவுறுத்தல்களும் கடுமையாக்கப்பட வேண்டும். தவறிழைக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டப்படக்கூடாது.

எவரானாலும் பாரபட்சம் பாராது தண்டிக்கப்பட வேண்டும். யாரையும் பாதுகாக்க முற்படக்கூடாது. சட்டங்களை வகுப்பதால் மட்டும் ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது. சட்டம் ஒழுங்காகப் பேணப்படுவதில் உறுதியான நிலைப்பாடு பேணப்படவேண்டும். புதிய செயற்பாட்டுத்திட்டமாவது சரியான பயனைக் கொண்டதாக அமையும் விதத்தில் செற்படுத்துவதே மிக முக்கியமானதாகும்.


Add new comment

Or log in with...