இளைய சமுதாயத்துக்கு வலுவூட்டும் பட்ஜட் - 2019 | தினகரன்

இளைய சமுதாயத்துக்கு வலுவூட்டும் பட்ஜட் - 2019

இளைஞர், யுவதிகள் அரசாங்க உத்தியோகங்கள் மீது மேலும் ஆர்வமாக இருப்பதைத்  தூண்டும் வகையில் அரச ஊழியர்களுக்கான 2500ரூபா கொடுப்பனவு அமைந்திருப்பதாக சிலர் விமர்சனங்களை  முன்வைக்கின்றனர். மறுபக்கத்தில் தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பு   தொடர்பான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படாமையானது தனியார் துறையிலுள்ள  வேலைவாய்ப்புக்களை விட அரச வேலைவாய்ப்புக்கள் மீது மக்களை ஈர்ப்பதாக அமைந்துள்ளது என்பதும் முக்கிய விடயம்.        

தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகிய பின்னர் அமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 2018ஆம் ஆண்டு வருட இறுதியில் ஏற்பட்ட ஆட்சிக் குழப்பம் காரணமாக 2019ஆம் ஆண்டுக்கான முழுமையான வரவுசெலவுத் திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்க முடியாது போனது. இதற்கமைய கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்கம் தனது முழுமையான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்தது.

நிதியமைச்சர் என்ற ரீதியில் இம்முறையும் மங்கள சமரவீர வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்தார். 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கான வருடமாக அமையவிருப்பதால் வாக்குகளை இலக்கு வைத்து வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் இந்த விடயம் கருத்தாடல்களுக்கு உட்படுத்தப்பட்டது. எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த வரவுசெலவுத் திட்டத்தை ஒட்டுமொத்தமாக நோக்கும் போது தேர்தலை இலக்கு வைத்ததொன்றாகத் தெரியவில்லை.

வரவுசெலவுத் திட்டம் மீதான இராண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் துறைசார் நிபுணர்கள் அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்ட யோசனைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். கடந்த வருட நீலப் பொருளாதாரம் என்ற தொனிப்பொருளில் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போதும் இம்முறை தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான பல்வேறு யோசனைகள் மற்றும் கடன் திட்டங்களைக் கொண்டதாக வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வரவுசெலவு திட்டமொன்றை முன்வைத்தால் அதில் மக்களுக்கான நிவாரணங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். விலை குறைப்புக்கள் காணப்பட வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகவும், கலாசாரமாகவும் மாறி விட்டது. மாறாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டங்களின் நடைமுறைச் சாத்தியங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

அரசாங்கத்தினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையிலும், இத்திட்டத்தின் ஊடாக மேலும் பல இளம் தொழில்முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக புதிதாகத் திருமணம் முடித்த ஜோடிகளுக்கு வீட்டுக் கனவை நனவாக்கும் நோக்கில் வீட்டுக் கடன் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

'ஹோம் சுவீட் ஹோம்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இத்திட்டத்தில் 6வீத வட்டியே அறவிடப்படும். 10பில்லியன் ரூபா கடன்களை 25வருடங்களில் செலுத்தி முடிக்க முடியும்.

இது மாத்திரமன்றி, பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெற்ற போதும் உள்நுழைய முடியாது போகும் மாணவர்கள் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு வட்டியற்ற கடனொன்றையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தை சுபீட்சமாக்கும் நோக்கில் இக்கடன் அறிமுகப்படுத்தப்படுவதுடன், 1.1மில்லியன் ரூபா கடன் வழங்கப்படவிருக்கிறது.

12வருடங்களில் இதனை மீளச்செலுத்தி முடிக்க முடியும். குறிப்பாக இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது மற்றும் புத்தாக்க சிந்தனைகளை நடைமுறைக்குக் கொண்டு வரக் கூடிய திறன் அடிப்படையிலான சந்தையைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதைக் காண முடிகிறது.

அரசாங்கம் முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாக, க.பொத. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை உலகில் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படுவது அமைந்துள்ளது.

உயர்தரப் பரீட்சையில் உள்ள ஐந்து பாடவிதானங்களில் முதலாவது மாணவர்களாகத் தெரிவு செய்யப்படுபவர்களும், ஒன்பது மாகாணங்களில் முதலாவது இடத்தில் வருபவர்களும் தெரிவு செய்யப்பட்டு உலகில் புகழ் பூழ்த்த பல்கலைக்கழகங்களான ஒக்ஸ்பேர்ட், ஹவார்ட் மற்றும் எம்.ஐ.ரி போன்ற பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த வருடம் அதிகரிக்கப்படவுள்ளது. இவ்வாறு அனுப்பப்படும் மாணவர்கள் தமது பட்டக் கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர் 10வருடங்கள் இலங்கைக்கு வந்து சேவையாற்ற வேண்டும் என்பதே இதன் பிரதான நிபந்தனையாகும்.

இதுபோன்று எதிர்கால சந்ததியினரை சிறந்த பாதையில் இட்டுச் செல்லும் பல்வேறு வேலைத் திட்டங்களைக் கொண்டதாக வரவுசெலவுத் திட்டத்தைக் குறிப்பிட முடியும்.

காணாமல் போனோர் விவகாரம் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேசத்திலும் எதிரொலித்து வரும் நிலையில், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தது 6000ரூபாவை கொடுப்பனவாக வழங்கவும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பான ஆணைக்குழுவை அமைப்பதற்கு பாராளுமன்றம் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், வரவுசெலவுத் திட்டத்திலும் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

தனியார் துறையினர் மற்றும் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு யோசனைகளை முன்வைத்திருக்கும் அரசாங்கம், அரசாங்க ஊழியர்களின் கொடுப்பனவை மேலும் 2500ரூபாவால் அதிகரித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் 10ஆயிரத்துக்கும் அதிகமான சம்பள அதிகரிப்பு அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதும், வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் யுவதிகள் அரசாங்க உத்தியோகங்கள் மீது மேலும் ஆர்வமாக இருப்பதைத் தூண்டும் வகையில் இந்த யோசனை அமைந்திருப்பதாக சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். மறுபக்கத்தில் தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்புத் தொடர்பான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படாமையானது தனியார் துறையிலுள்ள வேலைவாய்ப்புக்களை விட அரசாங்க வேலைவாய்ப்புக்கள் மீது மக்களை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த நிலைமைய மாற்றுவதற்கான வேலைத் திட்டங்களும் படிப்படியாக முன்வைக்கப்பட வேண்டும்.

எதுவாக இருந்தாலும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்கள் சமாந்தரமாக முன்னெடுக்கப்படுவதன் ஊடாகவே வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைக்க முடியும்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெறுமனே குறுகிய நோக்கம் கொண்டதாக இல்லாமல் நடைமுறைச்சாத்தியமானதாகவும் அமைவதே காலத்தின் தேவையாகும்.

(சாரங்கன்) 


Add new comment

Or log in with...