மகளிரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்கள் தேவை | தினகரன்

மகளிரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்கள் தேவை

இன்றைய உலகில் பெண்கள் பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து வரும் நிலையில் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

வீட்டுக்குள் அடங்கிப் போயிருந்த பெண்கள் சமுதாயம் இன்று விழிப்படைந்துள்ளது. நியூயோர்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்கள் முன்னெடுத்த உரிமைப் போராட்டம் உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. அவர்கள் மனஉறுதியுடன் மேற்கொண்ட போராட்டம் பல புரட்சிகளை தோற்றுவித்திருக்கின்றது. அடிமைகளாகப் பார்க்கப்பட்ட பெண்கள் சமுதாயம் இன்று சமமான நிலைக்கு வந்துள்ளது.அன்றைய பெண் அடிமைத்தனம் இன்று உடைத்தெறியப்பட்டுள்ளது.

பொருளாதார விடுதலைதான் பெண்விடுதலையின் ஆரம்பப்படி எனலாம். இன்று கல்வி,தொழில் துறைகளில் பெண்கள் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கின்றனர். ஆனால் இந்த உயர்வெல்லாம் பெண்களுக்கு இன்னுமே பூரணமாக உரிய இடத்தை இன்னும் வழங்கவில்லை.

பெண்ணடிமைத்தனம் உடைத்தெறியப்பட்ட போதிலும், பெண்கள் இன்றும் கூட பலத்த சவால்களை எதிர்கொள்ளவே செய்கின்றனர். பெண் மீட்சிக்காக, விடுதலைக்காக உரிமைப் போராட்டம் நடத்திய, போர்க் குரல் எழுப்பிய, உயிர்த் தியாகங்களைச் செய்த எத்தனையோ வீரமங்கையர்களை உலக வரலாற்றில் நாம் பார்க்க முடிகின்றது. எனினும் அவர்களது போராட்டங்களும், தியாகங்களும் பெண்களுக்கு இன்னுமே முழுமையான மீட்சியைத் தரவில்லை. பொருளாதார விடுதலை, அடிமைத்தனம் தொழில்வாய்ப்புகள் என பல விடயங்களில் பெண்கள் வெற்றி இலக்கை எட்டி வருகின்ற போதிலும், பெண்கள் மீதான வன்முறைகளும் துன்புறுத்தல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளதை வெளிப்படையாகவே காண முடிகிறது.

இவ்வாறு உலக வரலாற்றை திருப்பிப் போட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பெண்கள் எத்தனை பேர்? அவர்கள் அனைவரும் செய்த தியாகங்கள், சாதனைகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய நாளாக இன்றைய நாளைக் கொள்ள வேண்டியுள்ளது. பெண்களுக்கான சமஉரிமைக்காக எத்தனையோ வீராங்கனைகள் போர்க்கொடி ஏந்திய போதிலும் சமுதாய ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பெண்கள் முடக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அன்றாடம் காணக் கூடியதாகவே உள்ளது.

எமது நாட்டில் பெண்களுக்கென தனியான மகளிர் விவகார அமைச்சு இருக்கவே செய்கின்றது. மகளிர் பாதுகாப்புத் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதன் அவசியத்தையும், பெண்கள் மீதான வன்முறைகளையும், துன்புறுத்தல்களையும் முற்றாக ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் அமைச்சர் சந்திராணி பண்டார வலியுறுத்தியிருக்கின்றார். ஒருபுறத்தில் மகளிர்க்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகின்ற போதிலும், மறுபுறம் பெண்கள் மீதான அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள், வன்முறைகள் பரவலாகவே இடம்பெற்றுக் கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அண்மித்த காலம் வரையில் கிராமியச் சூழலில் காணப்பட்ட பெண்கள் எதிர்கொண்ட வீட்டு வன்முறைகள் இப்போது குறைந்து கொண்டே போவதைக் காண முடிகிறது. வீட்டு வேலைக்காரிகள் என்ற பட்டம் இல்லாதொழிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது. ஒரு காலத்தில் மலையக தோட்டப்புறங்களிலிருந்து பெண்கள் வீட்டு வேலைக்காக அணியணியாக வெளியேறிக் கொண்டிருந்த நிலைமை இன்று மாற்றம் கண்டு வருகிறது. ஆனாலும் மலையகப் பெண்கள் வீட்டு வேலைக்காக அனுப்பப்படும் நிலைமை முற்றாகவே மாற்றம் பெற வேண்டும்.

பெண்கள் மீதான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறைந்து விட்டதாக கருத முடியாதுள்ளது. ஒன்றை வெற்றிகொள்ளும் போது மற்றொன்று தலைதூக்குவதைக் காண முடிகிறது. பெண்கள் மீதான இந்த பாலியல் வன்முறைகளுக்கு மிதமிஞ்சிய போதைப்பொருள் பாவனையும் ஒரு காரணமெனக் கொள்ளலாம். வலுவான சட்டச்சூழல் முன்னெடுக்கப்பட முடிந்தால் இந்தப் பேராபத்திலிருந்து பெண்கள் சமூகத்தை மீட்டெடுக்கக் கூடியதாக இருக்கும். நாட்டில் சிறுவர், பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுவதை தடுக்க பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் பரந்துபட்ட ரீதியில் அவை தொடர்வது கவலை தரக்கூடிய விடயமாகும். இந்த விடயத்தில் சட்டம் மேலும் இறுக்கமாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இலங்கையின் சனத்தொகையில் 52 சதவீதமாக உள்ள பெண்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு வழங்குகின்ற பங்களிப்பு போன்று சமூகமேம்பாட்டுக்கான பங்களிப்பும் மிக அவசியமான தொன்றாகும். இதற்குரிய வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கல்வி, தொழில்நுட்ப முன்னேற்றங்களில் பெண்களை கூடுமானவரை ஈடுபடுத்துதல் மிகமுக்கியமானதாகும். அரசியல் பங்களிப்பிலும் பெண்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை தேர்தல்கள் செயலகம் வலியுறுத்தியுள்ளது. உள்ளூராட்சி, மாகாண சபைகளுக்கே இந்த விதி காணப்படுகின்றது. பாராளுமன்றத்திலும் இது அவசியமானதாகும் இன்று பாராளுமன்றத்தில் 13 பேரே பெண்கள் உள்ளனர். 225 உறுப்பினர்களைக் கொண்ட சபைக்கு குறைந்தது 50 பெண்களாவது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் போது நிதியமைச்சர் அறிவித்திருக்கும் யோசனை பாராட்டத்தக்கதாகும். அரச, தனியார் நிறுவனங்களில் உள்ள பணிப்பாளர் சபைகளுக்கு 30 சதவீதம் பெண்கள் நியமிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. பங்குச் சந்தைக்கும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. 2020 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கான காரணத்தை அந்தச் சபைகள் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பெண்களின் முன்னேற்றத்திற்கு எத்தனையோ திட்டங்கள் உள்ள போதிலும் பெண்களின் வாழ்க்கைத் தரம் குறிப்பிடத்தக்களவு முன்னேறவில்லை. இவ்விடயத்தில் எமது சமூகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.


Add new comment

Or log in with...