தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு | தினகரன்

தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கை தொடர்பில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. அந்த வகையில் கடந்த ஞாயிறன்று ஹற்றன் நகரிலும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றமை தெரிந்ததே.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த பல மாதங்களாக வேலைப் பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டங்கள், சட்டப்படி வேலை உள்ளிட்ட பலவித தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர். குறிப்பாக கொழும்பிலும், வடகிழக்கிலும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. அத்தோடு ஹற்றன் மல்லிகைப்பூ சந்தியில் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றும் நடாத்தப்பட்டது.

அதேநேரம் முன்னொரு போதும் இல்லாத வகையில், 'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கை நியாயமானது. அது வழங்கப்பட வேண்டிய ஒன்று' என்று வெகுஜன அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்பும் வகையில் வித்தியாசமான நடவடிக்கையொன்று இம்முறை முன்னெடுக்கப்பட்டது.

அதாவது கிளிநொச்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் (வயது 40) என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து துவிச்சக்கர வண்டிச் சவாரியை ஆரம்பித்தார். நாட்டிலுள்ள 23 மாவட்டங்களுக்கும் இக்கோரிக்கையை எடுத்துச் சென்ற இவர், கடந்த 23 நாட்களில் 2125 கிலோ மீற்றர் தூரம் துவிச்சக்கர வண்டியில் பயணித்து கடந்த 04 ஆம் திகதி மீண்டும் கிளிநொச்சியை அடைந்திருக்கிறார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கையும் கூட இம்முறைதான் முன்னெடுக்கப்பட்டது. அதேநேரம், சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தோட்டத்துரைமார் சம்மேளனத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தின. ஆனாலும் துரைமார் சம்மேளனம் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு இணங்காது இழுபறி நிலை நீடித்து வந்தது.

இவ்வாறான நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் இத்தொழில் துறையில் தாக்கம் ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் துரைமார் சம்மேளனத்துக்கும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சம்பள உயர்வு ஒப்பந்தம் அலரி மாளிகையில் வைத்து ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் சார்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கமும் கையெழுத்திட்டன. தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட மறுத்து விட்டது.

இந்த உடன்படிக்கையின்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 700ரூபாவும், 50 ரூபா கொடுப்பனவாகவும் வழங்கப்படவுள்ளது. ஆனால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கை நிறைவேற்றப்படாமைக்கு அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியான அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அந்தப் பின்புலத்தில் பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவுசெலவுத் திட்டத்தினூடாக நாளொன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவாகப் பெற்றுக் கொடுக்கப்பட இணக்கம் காணப்பட்டது.

இது தமக்கு ஒரு ஆறுதலாக அமையுமென பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கருதியுள்ளனர். அதன்படி வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். ஆனால் நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஐம்பது ரூபா கொடுப்பனவு தொடர்பில் அறிவிக்கப்படவில்லை. 'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கொடுப்பனவு தொடர்பில் தேயிலை சபையுடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும்' என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்தார். ஆனால் இவ்வறிவிப்பு வெளியான சொற்ப நேரத்தில், 'அமைச்சர் திகாம்பரம் தோட்டத் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவு அமைச்சரவை பத்திரமொன்றின் மூலம் வழங்கப்படுமென பிரதமர் உறுதியளித்துள்ளார். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பொதுவாக வரவுசெலவுத் திட்டத்தினூடாக தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியாது. மாறாக அது தொடர்பிலான ஆலோசனைகளைத்தான் அரசாங்கத்தினால் வழங்கலாம். அதனால்தான் ஐம்பது ரூபா கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

இன்றைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அந்த சம்பள அதிகரிப்பு நியாயமானதாக அமைய வேண்டும். தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதிலும் தமது கோரிக்கைக்கு ஏற்ப நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப் பெறவில்லை என்ற மனக்குறையால், அவர்கள் வேண்டாவெறுப்புடனேயே தற்போது தொழிலுக்கு செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.

உண்மையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டின் தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு உச்ச பங்களிப்பை நல்கி வருகின்றனர். அதனால் அம்மக்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் அவர்களது வாழ்வாதாரத்துக்கு போதுமானதாக அமைய வேண்டும். அதுவே நியாயமானது. அது அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும்.

ஆகவே பெருந்தொட்ட மக்களின் சம்பள கோரிக்கை தொடர்பில் மனிதாபிமான கண்ணோட்டத்தில் அணுகி, நியாயபூர்வமான சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுப்பதே ஏற்புடையதாகும்.


Add new comment

Or log in with...