மக்களின் சுபிட்சத்திற்கு வழிகோலும் பட்ஜட் | தினகரன்

மக்களின் சுபிட்சத்திற்கு வழிகோலும் பட்ஜட்

சுதந்திர இலங்கையின் 73வது வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடியதைத் தொடர்ந்து, நாட்டின் 24வது நிதியமைச்சர் என்ற வகையில் அமைச்சர் சமரவீர, ஆளும் கட்சியினரின் பலத்த மகிழ்ச்சிக் கரகோஷத்துக்கு மத்தியில் இவ்வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.

இந்த வரவு செலவுத் திட்டம் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், அதே வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நாட்டின் தேசிய அரசியலில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றம் காரணமாக வரவு செலவுத் திட்டத்துக்காக இடைக்கால கணக்கு அறிக்கையே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. என்றாலும் நாட்டின் எல்லா மட்டங்களைச் சேர்ந்த மக்களதும் பலத்த எதிர்பார்ப்புக்கள் நிலவிய சந்தர்ப்பத்தில் ஐ. தே. முன்னணி அரசாங்கத்தின் 05 வது வரவு செலவுத் திட்டமாக விளங்கும் இவ்வரவு செலவுத் திட்டத்தை அமைச்சர் சமரவீர முன்வைத்திருக்கிறார்.

சாதாரண மக்களை வலுப்படுத்துவதையும், வறுமையை ஒழித்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும், சகல மக்களதும் அடிப்படைக் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட சகல விடயங்களை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ள இவ்வரவு செலவுத் திட்டம் கம்பெரலிய திட்டம், 'ஹோம் சுவீட் ஹோம்' திட்டம் உள்ளிட்ட பல விஷேட திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகளையும் முன்மொழிந்துள்ளது.

அதாவது மக்களின் நலன்களை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ள இவ்வரவு செலவுத் திட்டத்தில் மக்களது நலன்களுக்கு கெடுதல்களை ஏற்படுத்தக் கூடிய மதுவகைகள், சிகரெட் உள்ளிட்ட புகையிலை உற்பத்திகளுக்கான விலைகளும், வரிகளும் மற்றும் கசினோ நிலையங்களுக்கான கட்டணம் 100 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் இவ்வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு ஜுலை மாதம் முதல் ரூ. 2500 மேலதிகக் கொடுப்பனவு வழங்கவும், ஓய்வூதியக்காரர்களின் சம்பளக் கொடுப்பனவு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சமுர்த்தித் திட்டத்தின் கீழ் மேலும் 06 இலட்சம் குறைந்த வருமானம் பெறுவோரை உள்வாங்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்காக 1800 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய உத்தேசித்துள்ள அரசாங்கம், சிறுநீரக நோயாளர்கள் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 5000 கொடுப்பனவு வழங்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் 10 இலட்சம் பேருக்கு மலசலகூட வசதி இல்லாதுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் மாத்திரம் 35 ஆயிரம் குடும்பங்களுக்கு இவ்வசதிகள் இல்லாதிருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் மலசலகூட வசதியைக் கொண்டிராத குடும்பங்களுக்கு அவ்வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கென 04 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திருமணம் செய்து கொள்ளும் இளம் தம்பதியினருக்கு ‘ஹோம் சுவீட் ஹோம்'--------------- என்ற புதிய திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 மில்லியன் ரூபா வரையும் 6% குறைந்த வட்டி வீதத்தில் கடன் பெற்றுக்கொடுக்கப்பட உள்ளது. இக்கடன் பெறுவோர் 25 வருட காலப் பகுதியில் இக்கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை இவ்வாறிருக்க, பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவென 32 ஆயிரம் மில்லியன் ரூபாவும், சுகாதார அடிப்படை வசதிகளை மேம்படுத்தவென 24,750 மில்லியன் ரூபாவும் கூட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் நாட்டில் வருடமொன்றுக்கு சுமார் 03 இலட்சம் மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவர்களில் சுமார் 35 ஆயிரம் பேர்தான் பல்கலைக்கழக நுழைவைப் பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறான நிலையில், ஏனைய மாணவர்களின் நலன்களில் கவனம் செலுத்தியுள்ள இவ்வரவு செலவுத் திட்டம், அம்மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு ரூ. 1.1 மில்லியன் வரை கடன் வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

அதேநேரம், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் மேம்படுத்தவென 1000 சொகுசு பஸ் வண்டிகளை சேவையில் இணைப்பதற்கான திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டிலுள்ள கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யவென 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடக்கில் 10 பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்கவும், வடக்கில் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதற்கான வளங்களை அதிகரிக்கவும், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் இலங்கை தேயிலை சபையுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவை மாத்திரமல்லாமல் நாட்டின் சமூக, பொருளாதர, உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட சகல விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்ட ஒரு வரவு செலவுத் திட்டமாகவே இந்த வரவு செலவுத் திட்டம் காணப்படுகின்றது. குறிப்பாக நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் உட்டகட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளதும் மேம்பாட்டையும் அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டுள்ள இவ்வரவு செலவுத் திட்டத்திற்கு கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஆதரவு நல்கப்பட வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அது நாட்டு மக்களுக்கு செய்யும் நன்மையாகவே அமையும். அதன் ஊடாக இவ்வரவு செலவுத்திட்டத்தின் பிரதிபலன்கள் மக்களைச் சென்றடையும்.


Add new comment

Or log in with...