Friday, March 29, 2024
Home » அதிவேக நெடுஞ்சாலை பணிகளிலிருந்து STF ஐ நீக்குவது பற்றி கவனம்!

அதிவேக நெடுஞ்சாலை பணிகளிலிருந்து STF ஐ நீக்குவது பற்றி கவனம்!

- ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் விரைவில் வேலைத்திட்டம்

by Rizwan Segu Mohideen
December 25, 2023 11:41 am 0 comment

நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் மற்றும் அது குறித்த பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களை அந்தப் பணிகளில் இருந்து நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் (22) நடந்த கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டது.

இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்கும், அதன்போது செயல்படவும் குற்றங்களைத் தடுப்பதற்கும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பணிகளிலிருந்து விசேட அதிரடிப் படையினரை நீக்கி, அந்த பணிகளை முன்னெடுப்பதற்கான மாற்றுவழி தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

இதற்காக முன்வைக்கப்பட்ட பல்வேறு யோசனைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், இந்த பணிகளைப் பொறுப்புடன், உரிய வகையில் முன்னெடுப்பதற்கும், இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முகாமைத்துவம் செய்யக்கூடியதுமான சரியான வேலைத்திட்டம் ஒன்றை பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் விரைவில் உருவாக்குமாறு சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT