முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்! | தினகரன்

முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்!

ந்திய மக்கள் சினிமா மோகத்துக்குள் கட்டுண்டு போய்க் கிடக்கிறார்கள் என்பது புதிய செய்தியல்ல. தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும்பாலான மக்கள் சினிமா மோகத்துக்குள் ஊறிப் போனவர்கள் என்று கூறுவதே பொருத்தம்.

இவ்வாறான சினிமா பாதிப்பு காரணமாகவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் மனம் கவர்ந்த சினிமா நடிகர்களால் மிக இலகுவாக அரசியல் அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொள்ள முடிகின்றது.

எமது அயலில் உள்ள தமிழ்நாட்டிலும் கூட மக்களின் சினிமா மோகம் காரணமாக முதலமைச்சர்களும், அமைச்சர்களும் உருவாகியிருக்கின்றார்கள்.

இந்திய சினிமாவுக்கும் அரசியலுக்கும் இடையேயான இவ்வாறான நெருங்கிய தொடர்பு குறித்து சுருங்கக் கூறுவதாயின், இதனை 'அறியாமையின் விளைவு' எனலாம்.

சினிமாவில் வருகின்ற தங்களது மனம் கவர்ந்த நடிகரோ அல்லது நடிகையோ அவர்களது நிஜ வாழ்விலும் சினிமாப் பாத்திரத்தையொத்த விழுமியப் பண்புகளைக் கடைப்பிடிப்பவர்களென அங்குள்ள சாதாரண ரசிகர்கள் அப்பாவித்தனமாக நம்பி விடுகின்றனர். இந்த நம்பிக்கையில் பிறந்த அபிமானம் காரணமாக அந்த நடிகருக்கே அடிமையாகிப் போய், தேர்தலில் வாக்குகளையும் அள்ளிக் குவித்து அவர்களை வெற்றிவாகை சூட வைக்கின்றனர்.

இந்தியாவில் பகுத்தறிவின் பிறப்பிடமாகக் கருதக் கூடிய தமிழ்நாட்டிலேயே மக்கள் இவ்வாறான சினிமா மோகத்தில் கட்டுண்டு போய்க் கிடக்கின்றனரென்றால் அந்நாட்டின் ஏனைய மாநிலங்களைப் பற்றிக் கூற வேண்டிய அவசியம் கிடையாது.

இதுவரை காலமும் சினிமாப் பாதிப்பானது அரசியலுக்குள் மாத்திரமே பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தது எனலாம். ஏனெனில் தமிழ் சினிமாக்களைப் பொறுத்தவரை கதாநாயகன் அல்லது கதாநாயகியை அனைத்து நற்புண்புகளும் நிறைந்த ஒரு பாத்திரமாகவே திரைப்படங்கள் காண்பித்து வந்தன. எனவேதான் சினிமாவில் வருகின்ற நற்பண்புகள் நிறைந்த கதாபாத்திரங்களை நம்பி அவர்களை அரசியலுக்கும் மக்கள் தெரிவு செய்து வந்தனர்.

இன்றைய தமிழ் சினிமாக்கள் அரசியலுக்குள் செல்வாக்குச் செலுத்துவதில் இருந்து படிப்படியாக விலகி, சமூகத்தினுள் பெரும் தாக்கங்களை செலுத்தும்படியாக வரலாற்றுப் பிறழ்வொன்று ஏற்பட்டு வருவதைக் காண முடிகின்றது.

இன்றைய தமிழ் சினிமாவின் கதாநாயகப் பாத்திரங்களில் பலரை எடுத்துக் கொள்வோமானால், அவர்கள் விழுமியப் பண்புகளைப் பிரதிபலிப்பவர்களாக சித்திரிக்கப்படுவதில்லை. அவர்கள் நடுத்தெருவில் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்தி விட்டு, கண்டபடி புலம்புவார்கள்; சிகரெட் பிடிப்பார்கள்; தமது விரோதிகளை அடித்து நொருக்கி பெரும் வன்முறையில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறான வன்முறைக் கதாபாத்திரங்களே இளம் பெண்களுக்குப் பிடித்துப் போவதாக இன்றைய சினிமா வரையறை செய்து வைத்திருக்கிறது. வன்முறைக்குப் பின்னரே சினிமாவில் காதல் தொடங்குகின்றது.

இவவாறான குழு வன்முறையானது இளம் பெண்களைக் கவரக் கூடிய இலகுவான மார்க்கமென்று இன்றைய எமது இளைஞர்களும் நம்புகின்றார்கள். இதன் பாதிப்பினாலேயே தமிழ்நாட்டில் இன்றெல்லாம் வன்முறை சுபாவம் கொண்ட இளைஞர் முழுக்கள் ஆங்காங்கே தாராளமாகப் பெருகி விட்டன.

அதன் தாக்கமானது இலங்கையிலுள்ள தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் படிப்படியாக ஊடுருவத் தொடங்கியிருப்பதுதான் இன்றுள்ள ஆபத்தான விடயம்!

தங்களது மனம் கவர்ந்த நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, புதிய திரைப்படங்களின் வரவை அமர்க்களமாகக் கொண்டாடுவது போன்ற பத்தாம்பசலித்தனமான செயல்களெல்லாம் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களிலும் ஆங்காங்கே இடம்பெற்றிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன.

அதுமாத்திரமன்றி, தமிழ் சினிமாப் பாணியில் வன்முறை சுபாவம் கொண்ட இளைஞர் குழுக்களும் தோன்றியிருப்பதாக அறிய முடிகின்றது. வடக்கில் வன்முறையில் ஈடுபட்ட ‘ஆவா குழு’ என்பதும் இவ்வாறு சினிமா மோகத்தில் இருந்து பரிணாமம் பெற்று வந்த ஒன்றுதான்!

ஆவா குழுவின் ஆரம்ப கால செயற்பாடுகளை ஒத்த பாணியில் மட்டக்களப்பு பிரதேசத்திலும் இப்போது குழுவொன்று முளைத்திருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியிலேயே இவ்வாறான வன்முறைக் கும்பலொன்றின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்விளைஞர்கள் தங்களை ‘கபாலி குழு’ என்று அழைத்துக் கொள்வதாகவும் அக்கிராமத்து மக்கள் கூறுகின்றனர். ‘கபாலி குழு’ என்று இவர்கள் தங்களது குழுவுக்குப் பெயர் சூட்டிக் கொண்டிருப்பதால், இதுவும் சினிமாவினால் உண்டான பாதிப்புதான் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்ற போது, அக்கூட்டத்தில் பங்கேற்ற மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் இப்பிரச்சினையை அங்கு பிரஸ்தாபித்தார். இவ்விடயத்தில் பொலிஸார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, அப்பகுதி மக்களின் பீதியைப் போக்க வேண்டுமென்று சிறிநேசன் கேட்டுக் கொண்டார்.

வீதியில் செல்லும் பெண்களிடம் சேஷ்டைகளில் ஈடுபடுதல், வீடுகளை உடைத்துக் கொள்ளையிடுதல், வீதியில் செல்வோரை மிரட்டுதல் போன்ற பல்வேறு அட்டகாசங்களில் இவ்விளைஞர் குழு ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதியதொரு வன்முறைக்கான ஆரம்பமாகவே இக்குழுவைப் பார்க்க முடிகின்றது. வடக்கிலும் ஆரம்பத்தில் இவ்வாறுதான் ‘ஆவா’ குழுவினர் அட்டகாசங்களை ஆரம்பித்தனர். ஆரம்பத்திலேயே பொலிஸார் இக்கும்பலைத் தேடிப் பிடித்து கைது செய்திருப்பின் இத்தனை வன்முறைகளையும் தவிர்த்திருக்க முடியும். வன்முறைகள் குறித்து அலட்சியமாக இருந்ததாலேயே இத்தனை பீதிக்கு மக்கள் உள்ளாக வேண்டியிருந்தது.

மட்டக்களப்பில் புதிதாகத் தோன்றியிருக்கும் கபாலி குழு குறித்தும் பொலிஸார் அலட்சியமாக இருக்க முடியாது. வன்முறைக் குழுக்கள் கட்டுமீறித் தலையெடுத்தால் நிலைமை விபரீதமாகி விடலாம். முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டியது இது!


Add new comment

Or log in with...