தமிழர் தரப்பின் அரசியல் அறம் இனத்திற்கு ஏற்படுத்திய பாதிப்பு! | தினகரன்

தமிழர் தரப்பின் அரசியல் அறம் இனத்திற்கு ஏற்படுத்திய பாதிப்பு!

நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அன்றைய நிலைப்பாடும், இன்றைய நிலைப்பாடும் முற்றிலும் வேறுபட்டவையாகும்.

2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அரசாங்கம் மீது அழுத்தத்தையும் செல்வாக்கையும் பிரயோகிக்கக் கூடியதொரு சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்கியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதுமே அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அலங்கரித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக விளங்கியதே தவிர, அரசாங்கத்தின் அத்தனை நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தனது ஆதரவைத் தெரிவித்து வந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான நிபந்தனையற்ற ஆதரவு காரணமாக வடக்கு – கிழக்கில் இருந்து முன்னைய காலங்களில் எதிர்நோக்கிய அரசியல் எதிர்ப்பென்பது அரசுக்கு இருக்கவேயில்லை. அதாவது அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கில் இணக்கப்போக்குடன் செயல் திட்டங்களை முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது.

இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் முன்னொரு போதுமே இவ்வாறு எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் எந்தவொரு அரசாங்கமும் ஆட்சி செய்ததில்லை என்றே கூற வேண்டும்.

ஒருபுறம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், மறுபுறத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தக் கூடிய ஒருவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விளங்கினார். சிறுபான்மை இனத்தின் அரசியல் கட்சியென்ற வகையில் இலங்கையின் அரசியலில் மூன்றரை வருட காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்திருந்த மிகப் பெரும் அதிர்ஷ்டமென்றுதான் இதனைக் கூற வேண்டும்.

இருந்த போதிலும், குறிப்பிட்ட அந்த மூன்றரை வருட காலப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியபடி, தன்னை நம்பியிருந்த மக்களுக்காக குறிப்பிட்டுக் கூறும்படியாக எதனையாவது நிறைவேற்றி முடித்திருக்கின்றதா என்ற முக்கிய வினாவொன்று இவ்விடத்தில் எழுகின்றது.

இவ்வாறான வினாவொன்றையே 2015ஜனவரி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளில் இருந்து இன்று வரை தமிழ் மக்கள் பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கேட்பதற்கு வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அவ்வினாவில் நியாயமும் இருக்கின்றது.

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதோ அல்லது, இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தரக் கூடிய புதிய அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதென்பதோ ஒருபுறம் இருக்கட்டும்... உத்தேச அரசியலமைப்பைப் பொறுத்தவரை தென்னிலங்கை அரசியலில் இணக்கத்துக்கு வர முடியாதபடி சிக்கல்கள் இருக்கின்றன.

ஆனாலும் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் ஏனைய தலையாய பிரச்சினைகளை மூன்றரை வருட காலத்தில், அரசுடனான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தீர்த்து வைக்க முடியாமல் போனது ஏன்? அல்லது இப்பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதில் தமிழ்க் கூட்டமைப்பு அத்தனை காலமும் அலட்சியமாக இருந்தது ஏன்?

தமிழ் மக்களின் சலுகைகளையும், இருப்பையும் அங்கு தக்க வைத்துக் கொள்வதிலாவது தமிழ்க் கூட்டமைப்பு கவனம் செலுத்தத் தவறியது ஏன்?

இவ்வாறான வினாக்களையே பலரும் வினவுகின்றனர். இவ்வாறான வினாக்களுக்கு தமிழ்க் கூட்டமைப்பின் தலைமை இதுவரை அளித்துள்ள பதில்களில் தமிழ் மக்கள் திருப்தி கொள்ளவில்லையென்பதையும் இவ்விடத்தில் கூறுவது முக்கியமாகும்.

தமிழர் தரப்புகள் இவ்வாறு தமிழ்க் கூட்டமைப்பை விமர்சித்து வருகின்ற நிலையில், சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல் தரப்புகளில் இருந்தும் இவ்வாறான வினாக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதை சமீப தினங்களாக அவதானிக்க முடிந்தது.

‘முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற பொருளில் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர் ஒருவர் உரையாற்றியிருந்ததாக சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. அதாவது சிறுபான்மைக் கட்சிகள் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தியபடி அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்று தமது இனத்துக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே அந்த முஸ்லிம் அமைச்சரது உரையின் உள்ளார்ந்த அர்த்தமாகும்.

இந்த உரையின் இரண்டொரு தினங்களுக்குப் பின்னர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இதே போன்றதொரு கருத்தை யாழ்ப்பாணத்தில் வைத்து வெளியிட்டிருந்தார். ‘தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் இணைய வேண்டும்’ என்று அழைப்பு விடுத்திருந்தார் சம்பிக்க ரணவக்க.

இவ்விரு அமைச்சர்களின் கருத்துடன் உடன்படுவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சிக்கல்கள் உள்ளனவென்பது உண்மை. வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் அடிப்படைத் தேவையான அரசியல் தீர்வை முன்வைத்து தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, பதவிகள், சலுகைகளுக்காகவுமோ அல்லது தனது இனத்துக்கு சேவையாற்றும் நோக்கிலோ சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு அரசுடன் இணைந்து கொள்வதென்பது நியாயப்படுத்த முடியாததாகும். தமிழ்க் கூட்டமைப்பின் அவ்வாறான அரசியல் சந்தர்ப்பவாதத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கப் போவதுவுமில்லை. இவ்விடயத்தைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப்பிடிப்பை எவராலுமே கேள்விக்கு உட்படுத்தவும் முடியாது. அரசியலைப் பொறுத்தவரை சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி வளைந்து கொடுப்பது அறமும் அல்ல!

தமிழ்த் தரப்புக்களின் இந்த ‘அரசியல் அறம்’ என்பது மற்றொரு புறத்தில் அவர்களது இனத்துக்கான பலவீனமாகவும் முடிகின்றது. அரசியல் அதிகாரத்துக்காக மட்டுமே போராடிப் போராடி இறுதியில் தனது இனத்தின் அத்தனை வாய்ப்புகளையும் சலுகைகளையும் பறிகொடுத்தது மட்டுமே தமிழ் அரசியல் தரப்புகள் கண்ட பலன்!

அரசியல் உரிமைகளுக்காக கொள்கைப் பிடிப்புடன் சாத்விக முறையில் போராடுவது தமிழ்த் தரப்புகளின் தவறல்ல. ஆனாலும் தனது இனத்தின் வசமுள்ள உரிமைகள், வாய்ப்புகள் பறிபோவதைப் பார்த்தபடி அலட்சியமாக இருப்பது தமிழ் அரசியல் தரப்புகளுக்கு அழகல்ல!     


Add new comment

Or log in with...