நீதித்துறையினர் மீதான உயிர் அச்சுறுத்தல்கள் | தினகரன்

நீதித்துறையினர் மீதான உயிர் அச்சுறுத்தல்கள்

மன்னார் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் தொனியில் இரண்டு சந்தேகநபர்கள் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். போலி ஆவணங்களைக்காட்டி மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியுடன் தங்களுக்கு நட்பு ரீதியிலான உறவு இருப்பதாக நீதிபதியின் மெய்ப்பாதுகாவலருடன் இவர்கள் உரையாடியுள்ளனர். அவர்களின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதைத் தெரிந்து கொண்ட மெய்பாதுகாவலர்கள் விபரமறிய முற்பட்ட போது அவர்கள் கடும் தொனியில் கதைத்து நீதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் வார்த்தைகளை பயன்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டேபோது மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நீதித்துறையினரின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவே நோக்க முடிகிறது. நீதிமன்ற வளாகப் பகுதிக்குள்ளேயே இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவது நீதிபதிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்டோருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஒரு சூழ்நிலையில் இவ்வாறான உயிர் அச்சுறுத்தல்கள் கேள்விக்குறியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்துபெரும் அவதானம் தேவைப்படுகின்றது.

மன்னார் நீதிமன்ற நீதிபதியொருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பது இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னர் மன்னார் மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் அவர்களை படுகொலை செய்யும் முயற்சியொன்று மேற்கொள்ள முற்பட்ட போது அவரது மெய்ப்பாதுகாவலர் கொல்லப்பட்ட சம்பவத்தை மறந்துவிட முடியாது. அது குறித்த விசாரணைகள் முடிவுறாத நிலையில் இப்போது மற்றொரு சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்ற போதும் இவர்கள் வெளியே இருந்து வந்தவர்களா என்பதில் கூட சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நீதித்துறை மீதான நம்பகத்தன்மைக்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளதொரு சூழ்நிலையில் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது கவலை தரக்கூடியதொன்றாகும். 2015க்குப் பின்னர் நீதித்துறையை சுயாதீனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. முன்னர் நாட்டில் நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து காணப்பட்டனர். பரந்துபட்ட ரீதியில் நீதித்துறை நம்பிக்கை இழக்கப்பட்டிருந்தது. இதில் நேரடி அரசியல் தலையீடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரதம நீதியரசர் பதவியிலிருந்த ஷிராணி பண்டாரநாயக்கா மீது அன்று முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் கறுப்புப் புள்ளியை ஏற்படுத்தியிருந்தது. இதில் நேரடி அரசியல் தலையீடு இடம்பெற்றதை வெளிப்படையாகவே காண முடிந்தது. எந்த விதக்காரணமுமின்றி அவரது பதவி பறிக்கப்பட்டதன் காரணமாக அவ்விடயம் சர்வதேச மட்டத்தில் கூட பேசுபொருளாக மாறிப்போயிருந்தது. அன்றைய கால கட்டத்தில் மீயுயர் நீதிமன்ற வளாகப் பகுதியிலே பெரும் அடாவடித்தனங்கள் இடம்பெற்றன. ஏவிவிடப்பட்ட காடையர் கூட்டம் கத்தி, பொல்லு, ஆயுதங்கள் சகிதம் மேற்கொள்ளப்பட்ட அட்டகாசம் காரணமாக நீதிமன்ற வளாகப் பகுதி அல்லோலகல்லோலப்பட்டது.

பிரதம நீதியரசரை கடமைக்கு வராமல் தடுக்கும் விதத்தில் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அன்றைய ஆளும்கட்சி அரசியல்வாதிகள் பலர் நேரடியாக தலையிட்டிருந்ததை பகிரங்கமாகவே காண முடிந்தது. எந்தவிதக் காரணமுமின்றி அவரது பதவி பறிக்கப்பட்டது. அரசியல் சார்புத்தன்மை கொண்ட ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இந்த முறைகேடான நடவடிக்கை நீதித்துறை வரலாற்றை கறைபடியச் செய்ததாகவே பதியப்பெற்றுள்ளது.

அது மட்டுமல்ல நீதிபதி ஒருவர் படுகொலை செயயப்பட்ட சம்பவத்தையும் நாம் மறந்துவிட முடியாது. இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் பாரிய குற்றச் செயலுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுகின்றபோதிலும் இன்னமும் அது குறித்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே செல்வதை காண முடிகின்றது. இது நீதித்துறைக்கு ஏற்படுத்தப்படுகின்ற களங்கமாக நோக்கப்பட வேண்டியுள்ளது. நீதித்துறையின் சுயாதீனம் பற்றிப் பேசிக்கொண்டே அதனைப் பாதுகாப்பதில் அசிரத்தை காட்டுவதை அங்கீகரிக்க முடியாது.

நீதிபதிகள் மாத்திரமல்ல நீதித்துறைசார்ந்த வேறு பலரும் கூட இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருப்பதை மறுக்க முடியாது. பல சட்டத்தரணிகள் மீதும் கூட கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படடுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி ரவிராஜ் அவர்கள் தலைநகரில் நடுத்தெருவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். அதுகுறித்த வழக்கு இன்றளவும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. சிரேஷ்ட ஊடகவியலாளரான சட்டத்தரணி லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன. வழக்கு இன்னமும் தொடர்கிறது.

இவ்வாறு நீதித்துறை மீதான அச்சுறுத்தல்கள் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தேய்பிறை போன்று காலம் கடத்தப்படுமானால் அவற்றுக்கான நீதி குறித்த எதிர்பார்ப்புக்கள் கேள்விக்குறியாக்கப்படுவதாகவே மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் பலவற்றுடன் நேரடி அரசியல் தொடர்புபட்டிருப்பதைக்கூட பகிரங்கமாகவே காண முடிகின்றது. இது நீதித்துறைக்கு ஏற்படுததப்படுகின்ற களங்கமாகவே நோக்க வேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாத காலகட்டத்தில் கூட வட கிழக்கிலும் நாட்டின் ஏனைய சில பகுதகிளிலும் கூட நீதித்துறை சார்ந்த பலர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு கட்சி அரசியலும் ஒரு காரணமாக இருக்கலாம். அதற்காக அதனை அங்கீகரிக்க முடியாது. மன்னார் சம்பவத்தை எடுத்து நோக்கும் போது இவ்விடயம் அனுமார்வால் போன்று நீடித்துக் கொண்டே பொகின்றது. சட்டம் ஒரு இருட்டறை என்ற கூற்று தொடர்ந்தும் மெய்ப்பிக்ககப்படுவதாகக் கொள்ள வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இனிமேலும் இது விடயத்தில் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. நீதித்துறையைப் பாதுகாப்பதில் காத்திரமான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். நீதியமைச்சும், அரசாங்கமும் நீதிக்கட்டமைப்பை பாதுகாப்பதற்கு உறுதியபான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறையை சுயாதீனப்படுத்தியது போன்று நீதித்துறை சார்தோரின் செயற்பாடுகளுக்கும், அவர்களது உயிர்ப்பாதுகாப்புக்கும் பலம் சேர்க்கும் முயற்சிகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றோம். மற்றொரு சம்பவம் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படக்கூடாது என்பதில் உத்தரவாதம் தேவை என்பதை மறந்துவிடக் கூடாது.


Add new comment

Or log in with...