Thursday, March 28, 2024
Home » மாணவர்களை இலக்கு வைத்த 4,000 வர்த்தகர் இதுவரை கைது
‘யுக்திய’ போதைப்பொருள் சுற்றிவளைப்பு

மாணவர்களை இலக்கு வைத்த 4,000 வர்த்தகர் இதுவரை கைது

by mahesh
December 23, 2023 7:02 am 0 comment

நாட்டிலிருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரம் பேர், பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்துள்ளதாக, பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்த சிறந்த செயற்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. பாதாளக்குழு செயற்பாடுகளையும் போதைப்பொருள் பாவனையையும் முற்றாக அழிப்பதற்கு நாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு வடக்கு சமூக பொலிஸ் குழு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “உங்களின் குடும்பங்களை இல்லாமல் ஒழிக்கும் போதைப்பொருளை முற்றாக அழிக்கும் வேலைத்திட்டமே இதுவாகும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ள போதைப்பொருள் நகரங்கள் முதல் சிறு பிரதேசங்கள் வரையில் பரவியுள்ளது. அவற்றை முற்றாக சமூகத்தில் இருந்து அழிக்க வேண்டும்.எனவே இந்த சிறந்த செயற்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. பாதாளக்குழு செயற்பாடுகளையும் போதைப்பொருள் பாவனையையும் முற்றாக அழிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதற்காக சிறந்த திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். எதிர்காலத்திலும் செயல்படுத்துவோம்.

சில பிரதேசங்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்வது யாரென்பது குற்றப்புலனாய்வு பிரிவினர் எமக்கு அறிவித்துள்ளனர். எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படாத மற்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை சீர்குலைக்கின்றது. இந்த பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு போதைப் பொருட்களை இறக்குமதி செய்யும் தரப்பினரை இலக்கு வைத்தே மேற்கொள்கிறோம். மேற்கொள்ளப்பட்டுள்ள ஒவ்வொரு சுற்றிவளைப்புகளின் போதும் மிக முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் போதைப்பொருள் விற்பனை செய்யும் தரப்பினரும் உள்ளடங்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரம் பேர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்துள்ளனர். இவர்களை கைது செய்து அவர்களிடமிருக்கும் சொத்துகளையும் கைப்பற்றும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT