பெருந்தோட்ட மக்களின் சுபீட்சத்திற்கு தடைக்கல்! | தினகரன்

பெருந்தோட்ட மக்களின் சுபீட்சத்திற்கு தடைக்கல்!

இலங்கையின் மலையக பெருந்தோட்டப் பிரதேசங்களில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் சுமார் இரண்டு நூற்றாண்டு கால வரலாற்றை இந்நாட்டில் கொண்டுள்ளனர். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களாவர்.

இலங்கையும் இந்தியாவும் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த போது இலங்கையிலிருந்த பிரித்தானியரின் பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவே இந்த மக்கள் பிரித்தானியரால் அழைத்து வரப்பட்டனர்.

பிரித்தானியரின் தேயிலை, கோப்பி, இறப்பர் உள்ளிட்ட பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்காக அழைத்து வரப்பட்ட இந்த மக்கள் ஆரம்ப காலம் முதல் கொத்தடிமைகள் போல் வேலைவாங்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த மக்கள் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளாகியுள்ள போதிலும், அவர்களில் பெரும்பகுதியினர் இன்னும் இந்நாட்டின் ஏனைய சமூகத்தினருக்கு சமமான முன்னேற்றத்தை அடையாத மக்கள் கூட்டமாகவே உள்ளனர். இதற்கு இந்நாடு சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஆடசியாளர்கள் முன்னெடுத்த தவறான கொள்கைகளும் ஒரு காரணம்தான்.

இந்த மலையக பெருந்தோட்ட மக்களின் உழைப்பு இந்நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றி வருகின்றது. அதாவது இந்நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் பெருந்தோட்டத் துறையே பல தசாப்தங்களாக முன்னணி வகிக்கின்றது. இருந்த போதிலும் அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியமோ அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளோ உரிய முறையில் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றது. அண்மையில் கூட ஆயிரம் ரூபா நாள் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து மேற்கொண்ட தொழிற்சங்கப் போராட்டத்திற்குஅவர்களுக்கு திருப்தியான பதில் கிடைக்கப் பெறவில்லை. அதனால் முதலாளிமார் சம்மேளனத்திற்கு மேலதிகமாக அரசாங்கம் தலையிட்டு நாளுக்கு ஐம்பது ரூபாபடி சம்பள உயர்வை வழங்க முன்வந்திருக்கின்றது.

இம்மக்கள் பொருளாதார ரீதியில் பின்னடைவுக்கும் வறுமைக்கும் உட்பட்டவர்களாகவே உள்ளனர். இதற்கு அவர்கள் மத்தியில் கசிப்பு பழக்கம் முக்கிய காரணியாக விளங்குகின்றது. இப்பழக்கம் அவர்களது சமூக, பொருளாதார சுபீட்சத்திற்கும் தடையாகவே அமைந்திருக்கின்றது.

அதேநேரம் பெருந்தோட்ட மக்கள் இப்பழக்கத்திற்குள் திட்டமிட்ட அடிப்படையில் தள்ளிவிடப்படுவதாக குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மைகளும் இருக்கமுடியும். ஏனெனில் இலங்கையில் கசிப்பு உற்பத்தியும் அதன் பாவனையும் முற்றிலும் சட்டவிரோதமான செயற்பாடுகளாகும். அந்த வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுபவர்களும் அதனைப் பாவிப்பவர்களும் கலால் திணைக்கள உத்தியோகததர்களாலும், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினராலும் அடிக்கடி கைது செய்யப்பட்டு நீதியின் முன்பாக ஆஜர்படுத்தப்படுகின்றனர். இதனை ஊடகங்கள் அவ்வப்போது செய்திகளாக வெளியிடுகின்றன.

ஆனால், இந்நாட்டில் கசிப்பு பாவனை அதிகளவில் காணப்படும் பிரதேசங்களில் ஒன்றாக மலையகப் பகுதி விளங்கிய போதிலும் அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுபவர்களோ அவற்றை விற்பனை செய்பவர்களோ கைது செய்யப்படுவதாகவுமில்லை. அதற்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவருவதுமில்லை. மலையக பெருந்தோட்டப் பிரதேசங்களில் கசிப்பு பாவனை திட்டமிட்ட அடிப்படையில் ஊக்குவிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழ இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறான சூழலில் சகவாழ்வு, தேசிய மொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, 'மலையகப் பெருந்தோட்ட மக்கள் கசிப்பு பாவனையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரியதோடு 'அம்மக்கள் திட்டமிட்ட அடிப்படையில் கசிப்பு பாவனைக்குள் தள்ளிவிடப்படுகின்றனர்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது உண்மையில் பல்வேறு மட்டங்களதும் கவனத்தை ஈர்த்துள்ள கோரிக்கையாக உள்ளது. கசிப்பு பாவனையானது சமூக கலாசார சீரழிவுகளுக்கு மாத்திரமல்லாமல் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளுக்கும் பெரும் பங்களிக்கக் கூடியதாகும். குறிப்பாக உடல் உள ரீதியான பாதிப்புகளுக்கு கசிப்பு அளிக்கின்ற பங்களிப்பு சில சந்தர்ப்பங்களில் உயிராபத்துக்கும் வித்திடுகின்றன.

இதன் விளைவாக கசிப்பு பாவனை காரணமாக சமூக ரீதியிலும் ஆரோக்கிய ரீதியிலும் பலவிதமான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள பெருந்தோட்ட மக்களை கசிப்பு பாவனையிலிருந்து விடுவிப்பதற்காகப் பல்வேறு விதமான அறிவூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இப்பணியில் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஆனாலும் மலையக பெருந்தோட்ட மக்களில் பெரும்பகுதியினர் கசிப்பு பாவனைப் பழக்கத்திலிருந்து இன்னும் விடுபடாதவர்களாகவே உள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான நிலைமையல்ல. இந்நிலையிலிருந்து மலையகப் பெருந்தோட்ட மக்கள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களும் இந்நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களுக்கு சமமான முன்னேற்றத்தை அடைந்த மக்களாக மாறவேண்டும். அதற்கு ஆரோக்கியமான திட்டங்களை வகுத்து செயற்படுத்துவது மிகவும் அவசியம்.

இவ்வாறான சூழ்நிலையில் அமைச்சர் மனோ கணேசன் மலையக மக்கள் மத்தியில் காணப்படும் கசிப்பு பாவனையை ஒழித்துக் கட்டுவதற்காக முன்வைத்திருக்கும் யோசனை வரவேற்கத்தக்கதாகும். இந்த யோசனையின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது மலையக பெருந்தோட்ட மக்கள் கசிப்பு பாவனையிலிருந்து விடுபடும் காலம் வெகுதூரத்தில் இருக்காது. அவர்களது சமூகப் பொருளாதார வாழ்விலும் அது மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். அத்தோடு அம்மக்கள் ஒளிமயமான வாழ்வுக் காலத்தை பெற்றுக் கொள்வதற்கும் கசிப்பு பழக்கத்திலிருந்து விடுபடுவது பக்கத்துணையாகவும் அமையும்.


Add new comment

Or log in with...