வீதி விபத்துக்களை குறைப்பதில் அதிக விழிப்புணர்வு அவசியம் | தினகரன்

வீதி விபத்துக்களை குறைப்பதில் அதிக விழிப்புணர்வு அவசியம்

வாகன விபத்துக்கள் தற்போது பெரிதும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் வீதி போக்குவரத்து அதிகரித்து,வாகன விபத்துக்களும் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. இதனை சர்வதேச நிறுவனங்களும் உறுதிப்படுத்தி உள்ளன.

அந்த வகையில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீதிப் போக்குவரத்துகளின் போது ஏற்படுகின்ற வாகன விபத்துக்கள் காரணமாக வருடமொன்றுக்கு 13.5 இலட்சம் மக்கள் உயிரிழப்பதாகவும், அவர்களில் பெரும் பகுதியினர் வளமான இளவயதினர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீதிப் போக்குவரத்து வாகன விபத்துக்கள் குறிப்பாக வளர்முக நாடுகளுக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளன. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.

இந்நாட்டில் இடம்பெற்று வருகின்ற வாகன விபத்துக்களின்படி நாளொன்றுக்கு 6 முதல் 8 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் பதிவுகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை குறைந்தது ஒரு வாகன விபத்து இடம்பெறுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்டில் 2011 ஆம் ஆண்டில் 2011 ஆகக் காணப்பட்ட வாகன விபத்துக்கள், 2018ம் ஆண்டு நிறைவடையும்போது 2500க்கு மேல் அதிகரித்துக் காணப்பட்டன. இதன்படி வீதிப் போக்குவரத்து வாகன விபத்து உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதை இப்புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது.

இவ்வாகன விபத்துக்களால் இடம்பெறுகின்ற உயிரிழப்புக்களை விடவும் மூன்று நான்கு மடங்குக்கும் மேற்பட்டோருக்கு காயங்களும் ஏற்படவே செய்கின்றன. இவ்வாறு காயங்களுக்கு உள்ளாவோருக்கு சிகிச்சை அளிக்கவென அரசு கோடிக்கணக்கான ரூபாவை செலவிடுகின்றது. அதேநேரம் இவ்விபத்துக்களால் காயங்களுக்கு உள்ளானோரில் குறிப்பிடத்தக்க அளவிலானோர் ஒன்றில் நிரந்தர ஊனங்களுக்கு உள்ளாகின்றனர் அல்லது விசேட தேவையடைவர்களாக மாறி விடுகின்றனர்.

இவ்வாறு சமூக, ஆ​ேராக்கியப் பிரச்சினையாக வீதிப் போக்குவரத்து வாகன விபத்துக்கள் மாறியுள்ளன. ஆனால் இவ்விபத்துக்களையும், அவற்றினால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் மற்றும் காயங்களையும் ஒன்றில் தவிர்த்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும். அதற்கு வாகனத்தைச் செலுத்துபவர்கள் அல்லது வாகன சாரதிகள் பொறுப்பு மிக்கவர்களாக மாற வேண்டும்.

வீதிப் போக்குரவத்து வாகன விபத்துக்கள் அதிகரித்துக் காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையாக உள்ளன. குறிப்பாக வீதிப்போக்குவரத்து சட்ட ஒழுங்குகளை மதியாமை, அவற்றை மீறிச் செயற்படுதல், முன்பாக செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல வேண்டும் என்ற மனப்பான்மையுடன் வாகனத்தைச் செலுத்துதல், வாகனங்களில் ரேடியோ, தொலைக்காட்சி என்பவற்றின் ஒலியை அளவுக்கதிகமாக உயர்த்துதல், தூக்கமின்றி இரண்டு, மூன்று நாட்கள் தொடராக வாகனம் செலுத்துதல், சில சாரதிகள் போதைப் பொருட்களைப் பாவித்த நிலையில் வாகனம் செலுத்துதல், கையடக்க தொலைபேசியைப் பாவித்தல் போன்றன அவற்றில் சுட்டிக்காட்டத்தக்க காரணங்களாக விளங்குகின்றன.

அதேவேளை பாதசாரிகளும் வீதிச்சட்டங்களை மதியாது செயற்படுவதும் வீதி விபத்துக்களுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் இன்றைய காலகட்டத்தில் இந்நாட்டில் வாகன விபத்துக்கள் இடம்பெறாத நாளே கிடையாது என்ற துரதிர்ஷ்டகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது பெரும் துரதிர்ஷ்டகர நிலைமையாகும்.

இந்நிலைமை தொடர்பில் எல்லா மட்டங்களிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதனால் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் அவசியம் குறித்து பரவலாக உணரப்பட்டுள்ளது.

வாகனம் செலுத்துபவர்கள் பொறுப்பு மிக்கவர்களாக உருவாக வேண்டும். அவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அதாவது வாகன சாரதி வாகனத்துடன் வீதிக்கு வரும்போது தாம் உயிர்களுடனும் உயிர்களுக்கு மத்தியிலும் வாகனத்தைச் செலுத்துகின்றேன். அதனால் எந்தவொரு உயிருக்கும் பாதிப்போ பங்கமோ ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கும் இலக்கும் கொண்டவர்களாக அவர்கள் அவதானத்து-டன் செயற்பட வேண்டும். அதற்கான உறுதிப்பாட்டையும், மனவலிமையும் சாரதிகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பொறுப்புமிக்க வாகன சாரதிகளை உருவாக்கும் போது வீதி வாகன விபத்துக்களைப் பெரிதும் குறைத்துக் கொள்ளலாம். இதன் நிமித்தம் வாகன சாரதிகளுக்கு வீதிபோக்குவரத்து சட்ட திட்டங்கள், அவற்றின் ஒழுங்குகள் குறித்தும் அவற்றை மீறிச் செற்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அடிக்கடி அறிவூட்டப்பட வேண்டும். இது தொடர்பில் பாடசாலை மட்டம் முதலே அறிவூட்டுவது சிறந்ததென கருதும் நிலைமை பரவலாக ஏற்பட்டுள்ளது.

ஆகவே இன்று பெரும் சமூகப் பிரச்சினையாக மாறியுள்ள வீதிவிபத்துக்களை தவிர்த்துக் கொள்வதை அல்லது கட்டுப்படுத்திக் கொள்வதை நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அறிவூட்டலுடன் மேற்கொள்ள வேண்டும். அப்போது வீதி வாகனப் போக்குவரத்து விபத்துக்களைப் பெரிதும் குறைத்துக் கொள்ளலாம். அதுவே இன்றைய அவசர தேவையாகும்.


Add new comment

Or log in with...