Friday, April 19, 2024
Home » பொ. கருணாகரமூர்த்தி எழுதிய பாய்மரத்தில் ஒரு பறவை நாவல்

பொ. கருணாகரமூர்த்தி எழுதிய பாய்மரத்தில் ஒரு பறவை நாவல்

by mahesh
December 23, 2023 8:48 am 0 comment

ஜேர்மனிய வாழ்வியலின் அசலான எழுத்து

எண்பதுகளில் இலங்கையிலிருந்து புகலிடம்தேடி மக்கள் குடிபெயர்ந்தபோது, அதற்கெதிராக மிகக் கடூரமான கண்டனங்கள் இலங்கையிலிருந்து எழுந்தன. புலப்பெயர்வு என்பதே இழிவானதாகக் கருதப்பட்டது.

‘பிரச்சினைக்குப் பயந்து, பிறந்த நாட்டையும் வாழ்ந்த வீட்டையும் இனசனங்களையும் விட்டுப் பிறதேசம் ஓடும் காகக்கூட்டத்தைப் பற்றி நினைத்தால் நான் அடிக்கடி பச்சாதாபப்படுவதுண்டு’ என்று டொமினிக் ஜீவா எழுதினார்.

‘புலம்பெயர் எழுத்தாளர்களே! எங்கள் அவலங்களை உங்கள் இருப்புக்காகப் பயன்படுத்தாதீர்கள்’ என்று செங்கைஆழியான் பிரகடனம் செய்தார்.

‘பாரிஸ் விமான நிலையத்தில் வந்திறங்கும் அகதிகள் கூட்டத்தில் என்னைத் தேடாதே!’ என்ற தொனியில் இன்னுமொருவர் கவி பாடினார்.

உண்மையாகவே உயிர் அச்சுறுத்தல் நிலவிய சூழலில் தாய்நாட்டைத் துறந்துபோன ஒருவர், மிக நீண்ட காலமாகக் குற்ற உணர்விலேயே காலத்தைக்கடத்திக் கொண்டிருந்தார். இலங்கையில் உள்ள ஐரோப்பியத் தூதரகம் ஒன்றிற்குச் சென்று, ஒழுங்காய் ஆவணங்கள் சமர்ப்பித்து, விசா பெறமுடிந்த போர்க்காலக்கவி ஒன்று, தான் ஒருபோதும் அகதி அந்தஸ்து கோரப்போவதில்லை என்று அறிக்கையிட்டது.

எண்பதில் தொகைதொகையாக இலங்கைத் தமிழர்கள் லண்டனில் வந்து குவிந்தபோது, ஏற்கெனவே பிரித்தானியக் குடிகளாக உலா வந்த தமிழ்ப் பெருங்குடிகள், புதிதாக வந்திறங்கிய தமிழர்களை இழிவாக நோக்கினர்.

இங்கையிலிருந்து ஐரோப்பியச் சுற்றுலாவிற்கு வந்த எழுத்தாளர்கள், தங்களுக்குக் களத்தில் வேலை இருக்கிறது என்றும் தாங்கள் இங்கே நிற்கமுடியாது என்றும் கூறிச் சென்றனர்.

கனடா சென்ற ஈழத்து அரசியல் அவதானி ஒருவர் புலம்பெயர் சமூகம் என்ன செய்யவேண்டும் என்று நல்லுரை நல்கியபின்னர், தனது தாயகக்கடமையைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கென மறுநாளே தான் தாயகம் செல்லவிருப்பதாக மேடையில் அறிவிப்புச் செய்தார்.

வெவ்வேறு வடிவங்களில் அகதி வாழ்வை இழித்தும், நிராகரித்தும் எழும் குரல்களே இவை. ஆனால், புலம்பெயர் தமிழ்ச் சமூகம் இன்று உலக அரங்கில் வலிமைமிக்க சமூகமாக வேர்பிடித்துள்ளது. இலங்கையில் ஒருபோதுமே கால்பதித்திராத இலங்கைத்தமிழ்ச் சமூகத்தின் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் உருவாகியுள்ளனர். தங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர், தங்கள் தந்தையின் மொழிபேசுபவர் என்று அந்தப்பிள்ளைகள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

‘சொற்றுணை வேதியன் சோதி வானவன்’ என்ற தேவாரத்தை ஆங்கிலத்தில் எழுதிவைத்துப் பாடும் தலைமுறை இது.

லண்டனில் ஒரு பஸ் தரிப்பிடத்தில் இணுவிலுக்குப் போவதற்காக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை அடையாளங்கண்டு, அவரைப் பத்திரமாக அவரது வீட்டிற்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார் ஒரு சமாரியன்.

தனது மண்ணிலேயே வேரூன்றியவர், ஆழ்ந்து வேரோடிய ஆலமரத்தைப் போன்றவர். அந்த இடத்தைவிட்டுப் பெயர்ந்ததும் அவர் தூசியாகிப் போகிறார். தங்கள் அரசியல் எல்லைக்குள் யாரும் வந்துவிடாமல், அரசு ஆயிரம் எல்லைத் தடுப்புகளைப் போட்டிருக்கும் நிலையில், அதனை மீறி அந்த நாட்டிற்குள் நுழைந்திருக்கும் கிரிமினல்தான் ஓர் அகதியானவன்.

இலங்கைலிருந்து புலம்பெயர்ந்து, வெளிநாடுகளில் அகதிகளாகப் பயணிக்கும் அவலங்கள் நம் நினவடுக்குகளில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றன. அந்தத் துயரவலிகளைச் சுமந்தவர்கள் அவற்றைப் பதிவு செய்யாமலே போய்விட்டார்கள். அகதி வாழ்வினை, முள்ளிவாய்க்கால் அவலங்களைப் புகைப்படங்களில் பார்த்துக் கவிதை எழுதிக் கொண்டிருப்பவர்கள் பெருகிவிட்டனர்.

நான்கு தசாப்தங்களுக்கு மேல் ஜெர்மனியில் வாழ்ந்து, பெர்லின் வாழ்வின் ஒவ்வொரு அடுக்கினையும் அனுபவித்தறிந்து, பொ.கருணாகரமூர்த்தி தந்திருக்கும் ‘பெர்லின் இரவுகள்’ அவர் புகலிட இலக்கியத்திற்குத் தந்திருக்கும் அருங்கொடையாகும்.

1973 இலேயே ஸ்ரீசோமாஸ்கந்தாக் கல்லூரியின் மாணவர் தமிழ் அவையின் ‘புதுவை’ மலரில் தனது ‘ஏழை’ என்ற சிறுகதைக்கூடாகக் கால் பதித்தாராயினும், சீரிய எழுத்துலகில் அறியப்பட்ட எழுத்தாளராக மூன்று தசாப்தங்களைக் கடந்திருக்கிறார். தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களின் அணிக்குள் முன்வரிசையில் இருப்பவர் கருணாகரமூர்த்தி. இவரின் புனைவுகளை, எழுத்துகளைக்கடந்து தமிழில் புகலிட இலக்கியம் பற்றிப் பேசுவதற்கில்லை. புகலிட எழுத்துகள் பெரிதும் முளைவிடாத காலப்பகுதியிலிருந்து, ‘கலைஞன்’ சிறுகதையிலிருந்து, ‘அகதி உருவாகும் நேரம்’ என்ற நாவலுக்கூடாக அவருடைய எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற வகையில், அவரின் கதை சொல்லும் ஆற்றலையும் எழுத்து வளத்தையும் கண்டு வியந்திருக்கிறேன். அவரின் புனைவாற்றலுக்குச் சிறந்த சாட்சியமாக ‘பாய்மரத்தில் ஒரு பறவை’ என்ற இந்தத் தொகுப்பு அமைந்திருக்கிறது.

இன்று தேசங்களின் எல்லைகள் மாற்றமுற்று வருகின்றன. பௌதிக எல்லைகள் கொண்ட, மாறாத, மூடுண்ட, அயல் பிராந்தியங்களிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளும் அரண்களுடன் கூடிய எல்லைகளாக அவற்றை நாம் இன்று காண்பதற்கில்லை. எல்லை என்றால் எது? என்று

நாம் கேட்பதற்கில்லை. சமூகரீதியில் எல்லைகள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன? என்பதே சரியான கேள்விகளாக அமையும் என்கிறார்கள் எல்லைகள் பற்றிய ஆய்வறிஞர்கள். எல்லைகள் என்பன வரைபடங்களிலும் அட்லஸிலும் பொறிக்கப்பட்ட, உறைந்துபோன வெறும் எல்லைக்கோடுகளாக அல்லாமல், நிலைமாறும் வலயங்களாக மாறிவருகின்றன. கருத்துகளும், மனிதர்களும், பண்டங்களும், மூலதனமும் எளிதாக நுழையவல்லனவாக எல்லைகள் நெகிழ்ந்துள்ளன.

‘எல்லைகளற்ற உலகம்’ என்ற கண்ணோட்டம் வலுப்பெற்று வருகிறது. அதேநேரம் இன மோதல்கள் வன்முறைக் கிளர்ச்சிகளாக வெடித்து தனித்தனி தேசங்களாக புதிய தேசங்களும் எல்லைகளும் உலக வரைபடத்தில் தோற்றம் காட்டுகின்றன. எல்லைகள் சிதைவதும் புதிய எல்லைகள் உருப்பெறுவதும் (Debordering and Rebordering) இன்றைய தேச எல்லைகளின் நிர்ணயத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன.

‘பாய்மரத்தில் ஒரு பறவை’ என்ற கதையில் கதைநாயகன் சுதாஸ் இலங்கையிலிருந்து புறப்பட்டு மத்திய கிழக்கிலிருந்து துருக்கி, கிரீஸ், செர்பியா என்று கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கூடாக, பத்து நாடுகளையாவது எந்தப் பயண ஆவணமுமில்லாமல் பயணிக்கிறான். பெரும்பாலான தமிழ் அகதிகள் விமான வழிப்பயணத்தில் தங்கள் பயணத்தை ஆரம்பித்திருந்தாலும், தரைப்பயணத்தில் பெருங் கஷ்டத்திற்கூடாகவே தங்கள் இலக்கினை அடைந்திருக்கிறார்கள். தமிழ் அகதிகளில் பலர் தங்களின் நீண்ட வழிப்பயணத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். கடல்வழிப் பயணத்தில் கப்பல் கவிழ்ந்து கணக்கற்ற தமிழ் அகதிகள் மரணித்துள்ளனர்.

ஐரோப்பியக்கரையை அடைய தமிழ் அகதிகள் பட்டிருக்கும் பாட்டின் ஒரு பகுதியினை ‘ஒரு பாய்மரத்துப்பறவை’ ஒரு case study ஆகவே தந்திருக்கிறது. எண்பதுகளில் புலம்பெயர்ந்தவர்கள் அவற்றிற்கான பணத்தைத் திரட்டவும், பயண ஏஜென்சிகளை அணுகவும் போலிக்கடவுச் சீட்டுகளைத் தயாரிக்கவும், போலி விசாக்களை உருவாக்கவும் உலகின் வெவ்வேறு விமான நிலையங்களைத் தேர்ந்து பயணிக்கவும் மேற்கொண்டிருக்கும் புலம்பெயர் பயண அனுபவங்கள் புகலிட சரித்திரத்தில் இன்றும் முழுமைப்படுத்தப்படாத அத்தியாயங்கள் ஆகும்.

கருணாகரமூர்த்தி தனது கதை நிகழ்வில் நிலத்தோற்றத்தை மிகத்துல்லியமாக, விஸ்தாரமாக விபரிப்பவர். ஒரு தேவாலயத்தை, பெருங் கட்டடத்தை, ஒரு சிலையை விபரிப்பதாயின் நேரமெடுத்து அவை குறித்த தகவல்களை, விபரங்களைத் தேடித் தொகுத்துக் கொள்பவர். அவற்றுக்கான உழைப்பை நல்கத் தயங்காதவர்.

(தொடரும்)

மு.நித்தியானந்தன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT