சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டத்தில் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் | தினகரன்

சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டத்தில் நாடு அடைந்துள்ள முன்னேற்றம்

இலங்கையில் சிறுநீரகப் பாதிப்பு என்பது அண்மைக் காலம் வரை பெரிதும் அதிகரித்துக் காணப்பட்டது. இது தொடர்பில் நாட்டில் எல்லா மட்டங்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அதனால் சிறுநீரக பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார். அந்தளவுக்கு இந்நாட்டில் சிறுநீரகப் பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இப்பாதிப்புக்கு ஒருவர் உள்ளானால் அவருக்கு சிகிச்சையும், அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் அவரது பராமரிப்பில் இருப்பவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதும் மிகவும் அவசியமானது. ஏனெனில் இப்பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களில் பெரும்பாலான குடும்பங்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டு விடுவர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஜனாதிபதி சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதையும், அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதையும் இப்பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுவதையும் நோக்காகக் கொண்டு இந்த செயலணியை ஆரம்பித்தார்.

இச்செயலணியை ஆரம்பித்த ஜனாதிபதி, 'சிறுநீரகப் பாதிப்பை ஒழிக்கும் நடவடிக்கையை தனியே அரசாங்கத்தினால் மாத்திரம் மேற்கொள்ள முடியாது. அதற்கு அரசியல்வாதிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட எல்லா மட்டத்தினரும் ஒத்துழைப்பு நல்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த வகையில், அதுவரைக்கும் முன்னெடுக்கப்பட்ட சிறுநீரகப் பாதிப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும் சிகிச்சை ஒழுங்குகளிலும் நிவாரண முன்னெடுப்புகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் பரந்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன.இதன் பாதிப்பு அச்சுறுத்தல்களை பெரிதும் எதிர்கொண்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. இத்திட்டங்கள் மிகவும் சிறப்பான முறையில் கடந்த இரு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சூழலில், தேசிய சிறுநீரக நிதியத்தின் 628 மில்லியன் ரூபா செலவில் கண்டி பொது வைத்தியசாலையுடன் இணைந்ததாக அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன் பேணுதல் நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் திறந்து வைத்தார். இவ்வைபவத்தில் உரையாற்றிய அவர் “சிறுநீரக நோய் நிவாரணத்துக்காக முன்னெடுத்து வருகின்ற விரிவான வேலைத் திட்டங்களின் பயனாக கடந்த இரு வருடகாலப் பகுதியில் சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரும் ஆறுதலான செய்தியாகும். ஜனாதிபதி அமைத்த செயலணியும், அவரது அழைப்பும், இனங்காணப்படாத சிறுநீரக நோய்க்கான சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறையில் திருப்புமுனையை ஏற்படுத்தியதன் வெளிப்பாடே இந்நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இலங்கை மக்கள், குறிப்பாக இரண்டு வகையான சிறுநீரகப் பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கின்றனர். அவற்றில் ஒன்று நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களால் தோற்றுவிக்கப்படும் சிறுநீரகப் பாதிப்பு. மற்றையது இனங்காணப்படாத நாட்பட்ட சிறுநீரகப் பாதிப்பு. இவற்றில் இனங்காணாத நாட்பட்ட சிறுநீரகப்பாதிப்புத்தான் இலங்கைக்குப் பெரும் பிரச்சினையாக விளங்குகின்றது.

ஆரம்பத்தில் வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்பட்ட இப்பாதிப்பு தற்போது வடமேல், கிழக்கு, தெற்கு, வடக்கின் சில பிரதேசங்கள் ஆகிய மாகாணங்களுக்கும் பரவியுள்ளது. இந்த இனங்காணப்படாத நாட்பட்ட சிறுநீரகப் பாதிப்பைக் கண்டறிவதற்காக ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. இருந்த போதிலும் இப்பாதிப்புக்குத் துணை புரியும் காரணிகள் சரியான முறையில் இனங் காணப்படாத போதிலும் சில காரணிகள் மீது அதிக சந்தேகங்கள் நிலவுகின்றன.

அந்த வகையில் '1960 ,70களில்தான் இலங்கையில் விவசாய இரசாயனப் பாவனை அதிகரிக்கத் தொடங்கியது. இதன் பின்பே இந்நாட்டில் இனங்காணப்பாடாத சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாவோரின் எணிக்கையில் அதிகரிப்பு ஏற்படத் தொடங்கியதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை இப்பாதிப்புக்கு அதிகம் முகங்கொடுத்துள்ள பிரதேசங்களின் தண்ணீரிலும் நிலத்திலும் கட்மியம், ஆசனிக் போன்ற இரசாயனங்கள் அதிகம் காணப்படுவதன் விளைவாகவே இப்பாதிப்பு ஏற்படுகின்றது என்ற கருத்துகளும் காணப்படுகின்றன.

இருந்த போதிலும் கடந்த இரு தசாப்த காலத்தில் மாத்திரம் இச்சிறுநீரகப் பாதிப்பினால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், நான்கு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் மாதமொன்றுக்கு 1100 பேர் இப்பாதிப்புக்கு உள்ளானவர்களாக புதிதாக மருத்துவமனைகளில் பதிவாவதாகவும், வருடமொன்றுக்கு குறைந்தது 300 பேர் உயிரிழப்பதாகவும் அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்த இனங்காணப்படாத நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்பு பெரிதும் தீவிரமடைந்திருந்த பின்புலத்தில்தான் ஜனாதிபதி இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் முக்கியத்துவம் அளித்து ஆரம்பித்தார். அதன் பிரதிபலன்களை நாடும், நாட்டு மக்களும் அனுபவிக்கத் தொடங்கி விட்டனர் என்பதற்கு ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு நல்ல சான்றாகவுள்ளது.

என்றாலும் இச்சிறுநீரகப் பாதிப்புக்கு இலங்கை மக்கள் உள்ளாவதை தவிர்க்கவும் அதற்குள்ளானவர்களுக்கு முறையான சிகிசையளிப்பதோடு அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் என தொடர்ந்தும் விழிப்புணர்வும் அறிவூட்டல்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. அதனுடாக இப்பாதிப்புக்கு உள்ளாவதைக் குறைத்துக் கொள்ள முடிவதோடு அதனால் பாதிக்கப்பட்டோருக்கும் சிறந்த நிவாரணங்களை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும்.


Add new comment

Or log in with...