போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தீவிரமடையட்டும்! | தினகரன்

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தீவிரமடையட்டும்!

இலங்கை தனித்துவமிக்க சமூக, கலாசார பாரம்பரிய விழுமியங்களுக்கு உரிமை கொண்டாடும் நாடாகும். இந்நாட்டில் மனித ஆரோக்கியத்திற்கும், சமூக, கலாசாரத்துக்கும் கெடுதல்களை ஏற்படுத்தக் கூடிய போதைப்பொருட்கள் அண்மைக் காலம் முதல் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன.

போதைப்பொருட்களின் கடத்தல், விற்பனை, பாவனை என்பன அதிகரித்துக் காணப்படுகின்றன. போதைப்பொருள் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களின் அளவும் அதிகரித்து விட்டன.

போதைப்பொரு-ட்கள் மனிதனின் உடல் உள ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை.அது மாத்திரமல்லாமல் சமூக கலாசார சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கின்றன. இவை தொடர்பான அறிவும் தெளிவும் மக்கள் மத்தியில் போதியளவில் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.

போதைப்பொருள் கடத்தல், விற்பனை, பாவனை உள்ளிட்ட அனைத்தும் கடும் குற்றச்செயற்பாடுகளாகும். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரணதண்டனையே உச்சபட்ச தண்டனையாக உள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் மரண தண்டனை பெற்றுத் தரக் கூடியதாக விளங்கிய போதிலும் அதன் குற்றங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல், விற்பனை என்பன அதிக பணம் ஈட்டக் கூடியவை என்பதால் குற்றவாளிகள் இதில் ஈடுபடுகின்றனர். போதைப்பொருள் குற்றம் தொடர்பாக சட்டத்தின் பிடிக்குள்ளானால் அதிலிருந்து தப்புவது முடியாத காரியம்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களின் செயற்பாடுகளால் சில வேளைகளில் அப்பாவிகளும் பாதிக்கப்படவே செய்கின்றனர். அதாவது- வாடகைக்கு ஆட்டோ வண்டி உள்ளிட்ட வாகனம் செலுத்துபவர்கள் மிகுந்த விழிப்புடன் செயற்பட வேண்டிய காலமிது. முன்பின் அறிமுகமற்றவர்களை பொதிகளுடன் வாகனத்தில் கொண்டு செல்லுதல், ஓரிடத்திலிருக்கும் பொருளை எடுத்து வருமாறு அல்லது குறித்த பொதியை மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று ஒப்படைக்குமாறு வாகனத்தை வாடகைக்கு அமர்த்துதல் போன்றவை விடயத்தில் மிகுந்த விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்பொதிகளில் அல்லது அவ்வாறான நபர்கள் வழங்கும் பொறுப்புக்களின் பின்னால் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் அல்லது விற்பனை நடவடிக்கைகள் மறைந்திருக்கலாம். அதனால் சட்டம் விழிப்போடு இருப்பதை ஒரு போதும் மறந்து செயற்படக் கூடாது.

அதேநேரம் இந்நாட்டின் எதிர்கால சமுதாயத்தினரான மாணவர்களையும், வளமான வயதினரையும் இப்போதைப்பொருட்கள் இலக்காகக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிகவும் பயங்கரமானதும் மோசமான செயற்பாடாகும். அதன் காரணத்தினால் போதைப்பொருட்களின் பாதிப்பு, தாக்கங்கள் குறித்து மாணவர்கள் உள்ளிட்ட முழு சமூகத்திற்கும் அறிவூட்ட வேண்டும். இதற்காக வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்படுவது அவசியம். குறிப்பாக ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளையின் செயற்பாடுகள், நடத்தைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அவர்களது நடத்தை மற்றும் செயற்பாடுகளில் திடீரென மாற்றங்கள், வித்தியாசங்கள் ஏற்பட்டிருந்தால் அல்லது புதிய நட்புக்கள் உருவாகியிருந்தால் அவை குறித்தும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் போதைப்பொருளுக்கு அடிமையான எத்தனையோ பேர் குட்டிச்சுவராகியுள்ளனர். அவர்களது பெற்றோரும், உறவினர்களும், மனைவி பிள்ளைகளும் வறுமைக்குள்ளாகி நிர்க்கதி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறான நிலைமை எவருக்கும் ஏற்படக் கூடாது. அதனால் போதைப்பொருளுக்கெதிரான விழிப்புணர்வு மிகவும் அவசியமானது. அதேநேரம் ஊர் மட்டத்தில் சமய சமூக நிறுவனங்களும் தமது பிரதேச மக்களின் நடத்தைகள், செயற்பாடுகள் குறித்தும் பிரதேசத்தில் புதிய நடமாட்டங்கள், செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவது அவசியம். அத்தோடு போதைப்பொருள் பாவனை, விற்பனை,கடத்தல் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் வழங்குவதில் பொதுமக்களும் ஆர்வம் காட்ட வேண்டும். இது இந்நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலன்களுக்காக ஆற்றப்படும் நடவடிக்கையாக கருதப்பட வேண்டும்.

என்றாலும் அவ்வாறு தகவல் வழங்கும் போது பாதுகாப்பு உத்தரவாதம் இல்லையென்ற அச்சமும் மக்கள் மத்தியில் காணப்படவே செய்கிறது. இது தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் கவனம் செலுத்தி மக்களின் பீதியை நீக்க வேண்டும். அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். முப்பது வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு போதைப்பொருள் குற்றங்களை ஒழித்துக்கட்டுவதென்பது ஒரு பெரிய விடயமல்ல.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருளின் பேராபத்திலிருந்து நாட்டையும், மக்களையும் மீட்டெடுப்பதற்காக 'போதையற்ற நாடு' என்ற தேசிய திட்டத்தை அறிவித்து முன்னெடுத்து வருகின்றார். அத்திட்டத்தை மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். இந்நடவடிக்கைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும். போதையற்ற நாட்டை உருவாக்குவதற்கான பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வரும் பொலிஸாருக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கும் ஊக்கமளிக்கப்பட வேண்டும். அவர்களது பணிகள் கௌரவிப்பட வேண்டும். அவற்றினூடாக இப்பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்.

ஆகவே இந்நாட்டில் சமூக கலாசார சீர்குலைவுகளைத் தவிர்ப்பதையும், மக்களின் ஆரோக்கிய நலன்களைப் பாதுகாப்பதையும் நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைகள் மூலம் உச்ச பிரதிபலன்களை அடைந்து கொள்ளவென பொதுமக்களும் சமூகநல ஆர்வலர்களும் முழுமையான ஒத்துழைப்புக்களை நல்குவது அவசியம்.


Add new comment

Or log in with...