மகா சிவராத்திரி | தினகரன்

மகா சிவராத்திரி

இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. பக்தர்கள்  மனமுருகி இறைவனை வேண்டித் தமது துயரமிக்க சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும்படி வேண்டுகிறார்கள். அவ்வாறு வேண்டுகின்ற அவ்வேளையில் இறைவன் மனமிரங்கி பிட்டுக்கு மண் சுமந்ததையும் தாய்ப்பன்றியை இழந்த பன்றிக் குட்டிகளுக்குத் தாயாக வந்து பாலூட்டியதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன.'எப்போது அதர்மம் அரசாட்சி செய்து தர்மம் அழிகின்றதோ அப்போது தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை அழிப்பதற்கு நான் அவதாரம் செய்கின்றேன்' என பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.

சிவபெருமான் படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்று ஐந்தொழில்களைப் புரிவதாகவும் அறிந்துள்ளோம் இவ்வாறு இறைவன் எம்மை படைத்து எம்மில் இருக்கும் தீய குணங்களை அழித்து எமக்கு அருள் புரிந்து வாழ்வாங்கு வாழவைக்கின்றார். தர்மம் என்றால் என்ன? அதர்மம் இருள் சூழ்ந்து மக்கள் இன்னலில் இருக்கின்ற போது அவர்களை காப்பாற்ற இறைவன் மீண்டும் அவதாரம் எடுப்பார் என்றும் மக்கள் நம்புகிறார்கள். உலகில் இவ்வாறு குழப்பம் மிகுந்த சூழ் நிலையே இருள் என்று கூறலாம். இதை அறியாமை எனக்கூட கூறலாம்.இறைவன் கர்மவினைகளினால் சிக்குண்டு தவிர்க்கின்ற எம்மைக் காத்து காப்பாற்றுகின்ற தகுதி அவருக்கே உள்ளது.  இவ்வாறு காப்பாற்றுகின்ற இறைவன் சிவன் எனப் பெயர் பெறக்காரணம் என்ன? சிவன் என்றால் விதை வடிவமானவர் என்றும் மங்களகரமானவர் என்றும் கூறலாம். இவ்வாறு ஜோதி வடிவமாக இருந்தவாறு ஆத்மாக்களாகிய அனைவரையும் காப்பாற்றுகின்றார். நாம் பிறவிகள் தோறும் செய்த பாவங்களை அழிப்பது மட்டுமல்ல நாம் புண்ணியங்களைச் செய்து எமது வருங்காலப் பிறவிகளுக்குச் சேர்ப்பதற்கும் உதவி செய்கிறார்.இப்பண்டிகை பரம்பரையாக கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு சடங்காகவே நடைபெறுகின்றது.

இந்த ஆன்மீகம்  மறைந்து விடக்கூடாது என்பதற்காகவே குறித்த காலங்களில் உற்சவங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. நாம் கொண்டாடுகின்ற சிவன் யார்?அவர் நமக்காக என்ன செய்கிறார்? செய்திருக்கின்றார் என்றால் எப்போது செய்தார்? இதனை அறிந்தோமானால் சிவராத்திரி பூஜை பாராயணம் என்பதோடு நின்றுவிடாமல் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கும். அராஜகம், கலகம, சண்டை, சச்சரவு, பல்வேறு பிரச்சினைகள், துக்கம், சாந்தி ஆகியவற்றை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் காரியங்களைச் செய்திருப்போம். மகாசிவராத்திரி என்ற பெயர் அகத்துவம் உடையதாக இருப்பதைப் போலவே அந்த காலம் முழு உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு பரமபிதா சிவபரமாத்மாவை நினைவுபடுத்துவதாகவும் உள்ளது. பாரததேசத்தில் சிவபகவானின் ஞாபகார்த்தமாக ஆயிரக்கணக்கில் கோவில்கள் உள்ளன. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படாத கோவில்களே இல்லை என்னும் அளவிற்கு சிவனுடைய பெயர் பிரசித்தமாக உள்ளது. எனினும் சிவபகவான் யார்? என்ற உண்மையை அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

பாரததேசத்தின் ஒவ்வொரு நகரம் அல்லது கிராமங்களிலும் கூட ஜோதி பிந்துவான பரமாத்மாவின் ஞாபகார்த்தமாக சிவலிங்கமும் வெவ்வேறு பெயர்களில் ஆராதனைகளும் நடந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். உதாரணமாக இவை அமர்நாத், விஷ்வநாத், சோமநாத், பபூல்நாத், பசுபதிநாத்,  என்று அழைக்கப்படுகின்றன.

இது தவிர வெளிநாடுகளிலும் கூட விதவிதமான பெயர்களில் சிவலிங்கத்திற்கு ஆராதனைகள் நடந்து வருவதாகவும் அறிகின்றோம்.

சிவராத்திரி பண்டிகை சிவபரமாத்மாவின் திவ்ய ஜன்ம நினைவுதினமாகும். உலகில் யாருடைய பிறந்த தினத்தை கொண்டாடினாலும் அதை பிறந்த தினம் என்றே அழைக்கின்றோம். ஒருவேளை யாராவது இரவு 12.00 மணிக்கு பிறந்திருந்தாலும் கூட பிறந்தராத்திரி என்று சொல்வதில்லை.

பிறந்த தினம் என்றே குறிப்பிடுகின்றோம். ஆனால் சிவனுடைய ஜன்ம தினத்தை மட்டும் சிவராத்திரி என்று கூறுவது ஏன்?ராத்திரி என்ற வார்த்தை தினமும் வந்து போய் கொண்டிருக்கின்ற இரவை குறிப்பதல்ல.மாசி மாதம் கடைசி இரவு நேரம். இந்தக்கடும் இரவு காலத்தில் தான் சிவராத்திரி தினம் வருகிறது.

இக்காலத்தில் சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் காரணம் அஞ்ஞான இருள் முழுமையாகவே சூழ்ந்திருப்பதைக் குறிப்பதாகும். எப்போது சிருஷ்டியில் காமம், கோபம் ஆகிய அஞ்ஞான இருள் காரணத்தால் மனித வர்க்கம் முழுவதுமே துன்பப்படுகின்றதோ அப்போது தர்மம் அதர்மமாகி ஒழுங்கீனம் எங்கும் தலைவிரித்தாடும். ஆந்த சூழ்நிலையிலே தான் ஞானசூரியனாகிய சிவபரமாத்மா அஞ்ஞான இருள் அகற்றுவதற்காக அவதாரம் செய்து ஞானம் என்னும் ஒளிக்கிரணங்களால் அஞ்ஞானமாகிய இருள் பகலாக மாறிவிடுகிறது.

தீய குணங்களுடன் காணப்படுகின்ற உலகைத் தூய்மையாக மாற்றுவது விகாரங்கள் நிறைந்த உலகத்தை சத்திய சிவாலயமாக மாற்றுவது. கலியுக துக்கமான உலகை மாற்றி சாத்யுக சுகமான உலகை ஸ்தாபனை செய்வது எல்லாம் வல்ல பரமபிதா சிவபரமாத்வாவினுடைய கடமையாகும். கல்ப்பத்தில் இப்போதைய சங்கமயுகத்தில் சிவபரமாத்மா மீண்டும் அவதரித்து  அவருடைய கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்.

பரமபிதா பரமாத்மாவாகிய சிவன் ஒளிப்புள்ளியாக விளங்குபவர்.

இதன் காரணமாக பக்தர்கள் பெரிய வடிவில் சிவலிங்கம் தயாரித்திருக்கிறார்.  சிவலிங்கத்தின் மீது பால் தயிர் வில்வயிலை எருக்கம் பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்கின்றார்கள். அநேக முறை ஸ்நானம் செய்து உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். விரதம் அனுஷ்டிக்கிறார்கள். இரவு கண் விழிக்கிறார்கள். சிவராத்திரி தினம் அவ்வளவு புனிதமானது. வில்வ இலை அர்ச்சிப்பது ஆத்மாவானது சாலிகிராம் உருவம் என்பதன் அடையாளமாகும்.அதாவது ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் தன்னை அர்ப்பணிப்பதாகும்.

இதன் உள்ளார்ந்த பொருள் பரமாத்மா அருளிய ஞானத்தின் வழி நடப்பது என்பது. எருக்கம் பூ தங்களிடமுள்ள விடயத்திற்கு சமனான விகாரங்களை அர்ப்பணித்து விட்டு தூய்மையாக வாழ்வது என்ற விரதம் அனுஷ்டிக்கிறார்கள். உடல் சுத்தத்தோடு ஆத்மா சுத்தமாக இருக்கவேண்டும். இவ்வாறாக உண்மையான பேரானந்த சுகம் அனுபவிக்க வேண்டும் என்பதாகும். இப்போது தான் ஆத்மாக்கள் அனைவரையும் புனிதமாக்கி பரந்தாமம் அழைத்துச் செல்வதற்கு தகுதியுடையவராக்குகிறார்.

இந்தச் சமயத்தில் தான் ஆத்மாக்கள் பரமாத்மாவுடன் இனிமை யான தொடர்பு கொள்வதோடு அனுதினமும் வாழ்க்கையானது அவரது அருளினால் நிரம்புவதோடு துன்பங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகின்றன.  


Add new comment

Or log in with...