Wednesday, April 24, 2024
Home » நாட்டில் சாதகமான பொருளாதார மேம்பாடு

நாட்டில் சாதகமான பொருளாதார மேம்பாடு

by sachintha
December 22, 2023 1:00 am 0 comment

இலங்கை கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. அதன் ஊடாக நாடே வங்குரோத்து நிலையை அடைந்தது. அதனால் உலகில் தனிமைப்படும் நிலைக்கு நாடு உள்ளானது. அதன் விளைவாக மக்கள் பல்வேறு விதமான பாதிப்புக்களுக்கும் தாக்கங்களுக்கும் முகம்கொடுத்தனர்.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியுடன் ​சேர்த்து அரசியலும் கொதி நிலை அடைந்தது. அது ஆட்சி மாற்றத்திற்கும் வித்திட்டது. அத்தோடு நாட்டின் அன்றைய தலைவரும் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் பதவி விலகும் நிலைமை உருவானது.

இவ்வாறான சூழலில் நாட்டின் தலைமையை ஏற்க எவரும் முன்வராத நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்றார். அவர் இப்பதவியை ஏற்றதும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். அவை கட்சி அரசியல் பேதங்கங்களுக்கு அப்பாலான வேலைத்திட்டங்களாகும். கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவதே இத்திட்டங்களின் இலக்காக உள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறுகிய காலம் முதல் பயனளிக்கத் தொடங்கின. அதனால் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் நாட்டில் மக்கள் முகம்கொடுத்த அசௌகரியங்களும் பாதிப்புக்களும் கட்டம் கட்டமாக நீங்கத் தொடங்கின.

இப்பொருளாதார வேலைத்திட்டங்கள் உதவி வழங்கும் நிறுவனங்களுக்கும் நாடுகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்நிலையில் உலகின் பல நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு உதவ முன்வரலாயின. இது ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்படும் பொருளாதார மீட்சிக்கான திட்டங்களுக்கான அங்கீகாரமாக அமைந்துள்ளது. அத்தோடு இத்திட்டங்கள் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியும் ஆகும்.

அவ்வாறு நிதியுதவி புரிய முன்வந்துள்ள சர்வதேச நிதி நிறுவனங்களில் சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும் குறிப்பிடத்தக்கவையாகும்.

அந்த வகையில் உலக வங்கி இலங்கையின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்கக் கூடிய மீழெழுச்சி, ஸ்தீரத்தன்மை, மற்றும் பொருளதாதார மீட்சிக்கான அபிவிருத்திக் கொள்கை செயற்றிட்டத்திற்கு உதவியளிக்க உலக வங்கி முன்வந்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தை கடந்த ஜுன் மாதம் 18 ஆம் திகதி அளித்தது.

வறிய மற்றும் நலிவுற்ற சமூகங்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்தல், அனைவரையும் உள்ளடக்கிய தனியார்த்துறை மீட்சிக்கு ஒத்துழைத்தல், பொருளாதார ஸ்தீரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்கு உதவக்கூடிய வகையிலான தொடர் உதவித்திட்டங்களில் முதலாவது திட்டமே இதுவாகும். இத்திட்டத்திற்கு வழங்கவென இணக்கப்பாடு எட்டப்பட்ட நிதி விடுவிக்கப்படுவதற்கு முன்னர் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளும் அடையப் பெற வேண்டிய இலக்குகளும் உள்ளன.

அதற்கு ஏற்ப இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் முன்னெடுக்கும் முன்னேற்றகரமான பரந்தடிப்படையிலான மறுசீரமைப்புக்கள் குறித்த மதிப்பீட்டை அடுத்து இரண்டாம் கட்டமாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க உலக வங்கி தீர்மானித்துள்ளது. இது பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்பவென முன்னெடுக்கப்படும் பொருளாதார திட்டங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள வெற்றியாகும்.

நாட்டின் பொருளாதாரத்தை நிலைபேறான வகையில் கட்டியெழுப்புவதற்கு பொருளாதார மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்கள் இன்றியமையாதவையாகும்.

அந்த வகையில் உலக வங்கியின் இவ் உதவித் திட்டம் பொருளாதாரத்தின் முழுமையான மீட்சியை உறுதிப்படுத்தல், பொருளதாதார வளர்ச்சியின் இயலுமையை மேம்படுத்தல், தனியார்த்துறை முதலீடுகளை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள அரசுக்கு உதவக்கூடியதாகுமென உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்பவென முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னேற்றப் பாதையில் பயணிப்பதன் பின்புலத்தில் தான் உலக வங்கி இரண்டாம் கட்ட நிதி விடுவிப்புக்கும் அங்கீகாரம் அளித்துள்ளது. அதேபோன்று சர்வதேச நாணய நிதியமும் இரண்டாம் கட்ட நிதி விடுவிப்புக்கு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.

ஆகவே நாட்டைக் கட்டியெழுப்பவதற்கான பொருளாதார வேலைத்திட்டங்களுக்கு சகலரும் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அது வளமான பொருளாதார தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அளிக்கப்படும் பங்களிப்பாக அமையும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT