Thursday, April 25, 2024
Home » பட்ஜட்: முன்மொழிவு அபிவிருத்திகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் பணிப்பு

பட்ஜட்: முன்மொழிவு அபிவிருத்திகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் பணிப்பு

ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களுக்கும் ஆலோசனை

by Gayan Abeykoon
December 21, 2023 8:03 am 0 comment

புதிய வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகளின் கீழ் நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு, பிரதமர் தினேஷ் குணவர்த்தன சகல ஆளுநர்களுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுடன் (19) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலிலே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில், நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு, கடற்றொழில்,புதுப்பிக்கத்தக்க சக்தி வளம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

மாகாண சபைகளுடன் இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் இடமாற்றம், வெற்றிடங்களை நிரப்புதல், புதிய ஆட்சேர்ப்பு மற்றும் மாகாண சபைகளின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் குறித்த திருத்தம் தொடர்பான விடயங்களும் கவனத்திற்கொள்ளப்பட்டன.

பல்நோக்கு ஊழியர்களை பணியிடங்களில் அமர்த்துதல் மற்றும் மாகாண மட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. சில மாகாணங்கள் கூட்டுறவுச் சாசனத்தை இன்னும் நிறைவேற்றத் தவறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். கூட்டுறவு முறைமை தொடர்பில் அமைச்சரவை உபகுழுவும், பாராளுமன்றத்தின் விசேட செயற்குழுவும் உள்ள போதிலும் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான சில சொத்துக்கள் ஏலத்தில் விடப்படும் நிலைமைக்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பொதுமக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தும் வகையில் கூட்டுறவுச் சொத்துக்களில் கைவைப்பதைத் தவிர்க்குமாறு பிரதமர் இங்கு வலியுறுத்தினார். கூட்டுறவு நடைமுறையின்படி, 2024 ஆம் ஆண்டில் பால் உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டம் முதன்மையான திட்டமாக செயற்படுத்தப்ப டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாகாணங்களில் அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஆளுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கிடையில் கருத்து முரண்பாடு உருவாவது தொடர்பான விடயங்களை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் பிரதமரிடம் முன்வைத்தனர்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், புதிய வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவாக முன்னோக்கிச் செல்லும் பாதை குறித்து அறிவித்துள்ளதாகவும், ஆளுநர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் இணைத் தலைவர்களாக மாவட்ட மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT