Friday, March 29, 2024
Home » உள்நாட்டு வளங்களை மின்னுற்பத்திக்கு பயன்படுத்துவது சிறப்பான திட்டம்

உள்நாட்டு வளங்களை மின்னுற்பத்திக்கு பயன்படுத்துவது சிறப்பான திட்டம்

by Gayan Abeykoon
December 21, 2023 1:00 am 0 comment

மின்கட்டண திருத்தம் கடந்த சில மாதங்களாக பேசுபொருளாகியுள்ளது. அதிலும் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மின்கட்டணம் செலுத்தத் தவறிய ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பாவனையாளரின் மின்இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டன. அத்தோடு ஜனவரியில் அதிகரிக்கப்படவிருக்கும் வற்வரி, மின்கட்டணமும் உயர வழிவகை செய்யும் என்ற ஐயமும் இதற்கு வலுசேர்ப்பதாக உள்ளது. இவ்வாறான நிலையில் மின்கட்டணத் திருத்தம் மக்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக விளங்குகிறது. மின்சக்தி இன்றி நாடொன்று பெரும்பாலும் இயங்க முடியாது என்றளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அந்த வகையில் இந்நாட்டில் மின்சாரம் நீர், காற்று, சூரிய சக்தி மற்றும் டீசல், நிலக்கரி என்ற மூலங்களைப் பயன்படுத்திப் பெற்றுக்கொள்ளப்படுகிறது. அதன் பயனாக 24 மணித்தியாலயங்களும் நாட்டு மக்களுக்கு தொடராக மின்சக்தி பெற்றுக்கொடுக்க முடிகிறது. சூரிய சக்தி, காற்று உள்ளிட்ட சக்தி முதல்களும், நீர் வளமும் இந்நாட்டில் இயற்கையாகவே கிடைக்கப்பெறுகின்ற போதிலும் நிலக்கரி, டீசல் என்பன வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்பட்டு மின்னுற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனாலும் உள்நாட்டில் கிடைக்கப்பெறும் சக்தி மூலங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மின்னுற்பத்திக்கான செலவை விடவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தப்படும் மூலங்கள் ஊடான மின்னுற்பத்திக்கான செலவு அதிகமாகும். இந்நிலையில் மின்கட்டணத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய நிலைமைகள் ஏற்படுகின்றன.

அந்த வகையில் வருடத்தில் வருடத்திற்கு இரண்டு தடவை மின்கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு ஏற்ப கடந்த வருடம் தீர்மானம் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும் கடந்த செப்டம்பரில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் மின்கட்டணம் செலுத்தாத ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் மின்இணைப்புக்களைத் துண்டிப்பதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

கடந்த சில மாதங்களாக நாட்டில் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது. இதன் பயனாக மின்னுற்பத்திக்கு தேவையான நீரை நாடு போதியளவில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.

இவ்வாறான சூழலில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, ‘நாட்டில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலையின் பயனாக நீர் மின்னுற்பத்தி அதிகரித்துள்ளதோடு அனல் மின்னுற்பத்திக்கான செலவும் குறைவடைந்துள்ளது. உற்பத்தி செலவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால் மின்சார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ள இலாபத்தின் பயனை மக்களும் அனுபவிக்கும் வகையில் ஜனவரியில் விலைத் திருத்தத்தை மேற்கொள்ளும் போது மின்கட்டணத்தை குறைக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மின்கட்டண அதிகரிப்பு பேசுபொருளாக இருக்கும் சூழலில் அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். இது வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த போது மக்கள் பல அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் முகம்கொடுத்தார்கள். பொருளாதார மறுமலர்ச்சிப் பாதையில் நாடு பிரவேசித்துள்ள சூழலில் அவர்கள் நிவாரணங்களை எதிர்பார்த்தவர்களாக உள்ளனர். அதனைப் பெற்றுக்கொடுப்பதும் அவசியமானது.

இவ்வாறான நிலையில் ஜனவரி முதல் நாட்டில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக மின்கட்டணம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

ஆனால் அமைச்சர் கஞ்சன விஜேசேகர அந்த அச்சத்திற்கும் உரிய பதிலளிக்கவும் இச்செய்தியாளர் மாநாட்டைப் பயன்படுத்திக் கொண்டார். ‘ஜனவரி முதல் வற் வரி அதிகரிக்கப்பட்டாலும் அதனுள் மின்கட்டணம் உள்வாங்கப்பட்வில்லை. அதனால் வற் வரி அதிகரிப்பு மின் கட்டணத்தில் தாக்கம் செலுத்தாது. எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தலாம். அதனால் அது தொடர்பில் நிவாரணங்ளை வழங்குவது குறித்து நிதியமைச்சில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன’ என்றுள்ளார்.

ஆகவே ஜனவரியில் வற் வரி அதிகரித்தாலும் அது மின்கட்டணத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. மழையுடன் கூடிய காலநிலை அதற்கு பெரிதும் உதவக்கூடியதாக உள்ளது. அதேநேரம் அமைச்சரின் கூற்றுப்படி, உள்நாட்டில் கிடைக்கப்பெறும் வளங்களை மின்னுற்பத்திக்கு அதிகம் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டக் கூடியதாக உள்ளது. அதனால் நீர், காற்று, சூரிய சக்தி மூலமான மின்னுற்பத்தியை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த ​வேண்டும். மக்களின் விருப்பமும் அதுவேயாகும். இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட தரப்பினரின் பொறுப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT