மறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...? | தினகரன்

மறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...?

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'. இப்படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா மற்றும் வர்ஷாவும் நடிக்கிறார்கள்.

மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார் எழுதிய "சுடல மாட சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட சொல்லு புள்ள " என்ற பாடல் யூ டியூப் ரசிகர்களால் 2மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பாராட்டு மழையால் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே நிறைய தேசிய விருதுகளை நா.முத்துகுமார் பெற்றிருந்தாலும் அவருக்கு  இந்த பாடலுக்காகவும் தேசிய விருது கிடைக்கும் என்று படக்குழு சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. படம் வரும் 22ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.

நா.முத்துக்குமார் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார்.

இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் முதல் திரைப்படபாடல் எழுதினார். இதுவரை சுமார்1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர்,2016வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார்.

நா.முத்துகுமார் மஞ்சள்காமாலை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 14, 2016 இல் தனது 41வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...