Home » மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீண்டும் திறக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்

மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீண்டும் திறக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்

ரிஷாட் எம்.பி கோரிக்கை

by Gayan Abeykoon
December 21, 2023 7:05 am 0 comment

மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலில் ஐவேளைத் தொழுகை உள்ளிட்ட இறைவழிபாடுகள் மீண்டும் இடம்பெற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிவகை செய்ய வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து மூடப்பட்ட நிலையிலுள்ள மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள பள்ளிவாசலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டதோடு இக்கோரிக்கையையும் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, ‘மஹர பிரதேசத்தில் பல கிராமங்களில் வாழும் முஸ்லிம்கள், 1903 இல் இப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்காக கட்டப்பட்ட இப்பள்ளிவாசலில் தான் தொழுகை உள்ளிட்ட இறைவழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர். கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இப்பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. ஆனால் 100 வருட காலத்துக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட இப்பள்ளிவாசலிலே இப்பிரதேச முஸ்லிம்கள் தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்றி வந்தனர். தற்போது இங்கு வாழ்கின்ற சுமார் 350க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தமது மார்க்கக் கடமைகளில் ஈடுபட முடியாமல் கஷ்டப்படுகின்றனர். ஐவேளை தொழுகைக்காக பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

ஜும்ஆ தொழுகை மற்றும் ஒருவர் மரணித்துவிட்டால் அவருக்காக மார்க்க கடமைகளை முன்னெடுக்க முடியாத ஒரு துரதிஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பல கஷ்டங்களுக்கு அவர்கள் நாளாந்தம் முகங்கொடுத்துள்ளனர்.

அதனால் இப்பள்ளிவாசலை மீண்டும் முஸ்லிம்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன். இப்பள்ளிவாசலை அம்மக்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும். இல்லாவிடில், அப்பிரதேச மக்கள் தொழுகை நடாத்துவதற்காகப் பள்ளிவாசல் ஒன்றை கட்டுவதற்குப் பொருத்தமான காணியை வழங்க வேண்டும். இரண்டில் ஒன்றை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கேட்டுள்ளார்.

(கொழும்பு கோட்டை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT