உலகக்கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெல்லும் | தினகரன்

உலகக்கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெல்லும்

பயிற்றுவிப்பாளர் ரிக்கி பொண்டிங்

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெல்லும் என அவுஸ்திரேலிய அணியின் உதவி பயிற்றுவிப்பாளரான ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கான உதவிப் பயிற்றுவிப்பாளராக இருந்த டேவிட் சாகர் பதவி விலகியதை அடுத்து 44 வயதான ரிக்கி பொண்டிங், அவுஸ்திரேலிய அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியா அணியின் எதிர்கால நகர்வுகள் குறித்து கருத்து தெரிவித்த பொண்டிங்,

“கடந்த முறை நாங்கள் உலக கிண்ணத்தை வென்றோம். இந்த முறையும் எங்களால் உலக கிண்ணத்தை நிச்சயம் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். தற்சமயம் உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பில் இந்தியாவும், இங்கிலாந்தும் முன்னணியில் இருக்கின்றன.

ஆனால் ஸ்டீவ் ஸ்மித்தும், டேவிட் வோர்னரும் திரும்பியதும், எங்கள் அணியும் பலம் வாய்ந்ததாக உருவெடுத்து விடும். ஸ்மித்தும், வோர்னரும் உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள். அனுபவசாலிகள். நெருக்கடியான சூழலை திறம்பட கையாளக்கூடியவர்கள். அவர்கள் வந்ததும் உடனடியாக எங்கள் அணியை பார்க்க வலுமிக்கதாக தெரிய தொடங்கி விடும்.

உலகக் கிண்ண தொடர் நடக்கும் இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை, எங்களது துடுப்பாட்ட பாணிக்கு சாதகமானது. அதனால் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளில் ஒன்றாக அவுஸ்ரேலியாவும் இருக்கும்.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயத்தால் அவதிப்படுவது குறித்து கேட்கிறீர்கள். பொதுவாக, அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தெரியும்.

அதனால் அது பற்றி எங்களுக்கு அதிகமாக கவலையில்லை. எங்களது கவலை ஸ்மித், வோர்னர், ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகிய வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து ஒருங்கிணைப்பதில் தான் இருக்கிறது. திட்டமிட்டப்படி எல்லாமே சரியாக அமைந்து விட்டால் எங்கள் அணி சவால்மிக்க அணியாக விளங்கும்” கூறினார்.

10 அணிகள் பங்கேற்கும் 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றது.

ரிக்கி பொண்டிங் தலைமையில் அவுஸ்திரேலிய அணி 2003ஆம் மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...