Home » ஐ.பி.எல். ஏலம்: அதிக விலைபோன வீரராக மிச்சல் ஸ்டார்க் சாதனை

ஐ.பி.எல். ஏலம்: அதிக விலைபோன வீரராக மிச்சல் ஸ்டார்க் சாதனை

மும்பையில் இணைந்தார் டில்ஷான் மதுஷங்க

by gayan
December 20, 2023 7:16 am 0 comment

இந்திய பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விலை உயர்ந்த வீரராக அவுஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது.

டுபாயில் நேற்று (19) நடைபெற்ற ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் இந்திய நாணயப்படி 24.75 கோடி ரூபாவுக்கு விலைபோன ஸ்டார்க் எட்டு ஆண்டுகளின் பின் அந்தத் தொடரில் ஆட களமிறங்கவுள்ளார்.

முன்னதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் பட் கம்மின்ஸை 20.5 கோடி ரூபாவுக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியதே சாதனையாக இருந்த நிலையில் ஸ்டார்க்கை வாங்குவதற்கு அதிக போட்டி ஏற்பட்டது. 2 கோடி ரூபா அடிப்படை விலைக்கு ஏலம் விடப்பட்ட ஸ்டார்க்கை வாங்க ஆரம்பத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் போட்டியிட்ட நிலையில் கொல்கத்தா அணி போட்டியில் குதித்தது.

தொடர்ந்து குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

33 வயதான ஸ்டார்க் கடைசியாக 2015 ஆம் ஆண்டிலேயே ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றதோடு, றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிய அவர் 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேவேளை இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணியால் 4.6 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்டார். 50 இலட்சம் ரூபா அடிப்படை விலைக்கு ஏலம் விடப்பட்ட அவரை வாங்குவதற்கு லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் போட்டியிட்டது.

டில்ஷான் மதுஷங்க அண்மையில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ணத்தில் ஒன்பது போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார்.

எனினும் இலங்கை அணியின் சுழற்பந்து சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க தனது அடிப்படை விலையான 1.5 கோடி ரூபாவுக்கே சன்ரைசஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். அவரை வாங்க வேறு எந்த அணியும் முன்வரவில்லை.

இது அவருக்கு பெரும் சம்பள இழப்பாக உள்ளது. கடந்த பருவத்தில் அவர் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்காக 10.75 கோடி ரூபா விலைக்கே ஆடியிருந்தார். எனினும் பெங்களூர் அணி இந்தப் பருவத்தில் அவரை விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட குசல் மெண்டிஸை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. இந்திய நாணயப்படி 50 இலட்சம் ரூபா அடிப்படை விலைக்கே அவர் ஏலம் விடப்பட்டிருந்தார்.

இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் சோபித்த நியூசிலாந்தின் டரில் மிட்சல் மற்றும் ரச்சின் ரவிந்திரா, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ட்ரவிஸ் ஹெட், தொன்னாபிரிக்க சகலதுறை வீரர் கெரால்ட் கொட்சீ ஆகியோர் ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோயினர்.

முதல்முறை இந்தியாவுக்கு வெளியில் நடைபெற்ற இந்த ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் 10 அணிகளிலும் உள்ள 77 இடங்களுக்காக மொத்தம் 332 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT