Thursday, March 28, 2024
Home » காசாவெங்கும் இஸ்ரேல் தொடர்ந்து உக்கிர தாக்குதல்: உயிரிழப்பு 20,000ஐ நெருங்கியது

காசாவெங்கும் இஸ்ரேல் தொடர்ந்து உக்கிர தாக்குதல்: உயிரிழப்பு 20,000ஐ நெருங்கியது

by gayan
December 20, 2023 8:02 am 0 comment

போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் சூழலில் காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் நேற்றும் (19) பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு காசாவின் ரபா பகுதியில் இஸ்ரேல் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் மூன்று வீடுகள் மீது நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து பாதுகாப்புப் பெற ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையிலேயே இஸ்ரேல் அந்தப் பகுதி மீதும் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தெற்கு காசாவின் பிரதான நகராக கான் யூனிஸில் நேற்றுக் காலை இஸ்ரேலிய துருப்புகளுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் விமானங்கள் நகரின் மையப்பகுதிக்கு அருகில் தாக்குதல்களை நடத்தியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இஸ்ரேலிய துருப்புகள் சுற்றிவளைத்த வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை தொடர்ந்தும் இயங்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அங்குள்ள சிறுவர்கள் உட்பட நோயாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக அது குறிப்பிட்டது.

“அவர்களுக்கு எம்மால் எந்த மருத்துவமனையையும் வழங்க முடியாதுள்ளது” என்று காசாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரிச்சர்ட் பீபர்கோன் தெரிவித்தார்.

இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வரும் நிலையில் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தில் அடைக்கலம் பெற்றிருக்கும் சுமார் 4,000 இடம்பெயர்ந்த மக்களும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் பீபர்கோன் குறிப்பிட்டார்.

மறுபுறம் இஸ்ரேலிய போர் விமானங்கள் வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாம் மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டு மேலும் 75 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இந்த அகதி முகாம் அடிக்கடி இலக்காகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக காசா மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 20,000ஐ நெருங்கியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர். மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம் அடைந்தபோதும் போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தமும் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி நீடித்த போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருப்பதோடு பணயக்கைதிகளை விடுப்பதற்கு பேச்சுவார்த்தைக்குச் செல்லுபடி அரசுக்கு அழுத்தம் கொடுத்து இஸ்ரேலில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

மறுபுறம் கட்டாரின் மத்தியஸ்தத்தில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. போலந்து தலைநகர் வார்சோவுக்கு சென்றிருக்கும் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் தலைவர் வில்லியம் பார்ன், அங்கு இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவுத் தலைவர் மற்றும் கட்டார் பிரதமரை சந்தித்து பேசி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஒருவாரம் நீடித்த போர் நிறுத்தத்திற்குப் பின்னர் இந்த மூவரும் முதல் முறையாகவே சந்தித்துள்ளனர். முன்னதாக இடம்பெற்ற போர் நிறுத்தத்தில் சுமார் 100 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதோடு அதற்கு பகரமான இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் சுமார் 240 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இஸ்ரேலுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில், வெள்ளை டீசேர்ட் அணிந்த மூன்று வயது முதிர்ந்த பயணக்கைதிகளின் வீடியோ ஒன்றை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தம்மை உடன் விடுவிக்கும்படி அவர்கள் இஸ்ரேல் அரசிடம் கேட்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்பிடம் தொடர்ந்தும் 129 பணயக்கைதிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரையில் எந்த பணயக்கைதியும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT