சிறு ஒலியைக் கேட்டதும் ஏற்படும் மிரட்சி, அச்சம்! | தினகரன்

சிறு ஒலியைக் கேட்டதும் ஏற்படும் மிரட்சி, அச்சம்!

'மிசோபோனியா' என்ற வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் ஒன்றி வாழ்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பொது இடங்களுக்குச் செல்வது மற்றும் அதிக ஒலி உள்ள நிகழ்ச்சிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள்.

பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். திடீரென ஒருவர் தும்முகிறார். என்ன செய்வீர்கள்? கடையில் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஒருவர் கையிலிருக்கும் சில்லறைக் காசுகளைக் கீழே சிதற விடுகிறார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அமைதியான ஒரு சூழலில் அமர்ந்திருக்கிறீர்கள். திடீரென ஒருவர் சத்தம் போட்டுச் சிரிக்கிறார். அப்போது சற்று எரிச்சலாக இருக்கும். அத்தோடு அதைக் கடந்து சென்று விடுவோம். அத்துடன் அதனை மறந்தும் விடுவோம்.

சிலர் இதையெல்லாம் அவ்வளவு எளிதாக ஜீரணித்துக் கொள்ள மாட்டார்கள். கடும் கோபமும் எரிச்சலும் அடைவார்கள். சம்பந்தப்பட்டவரிடம் சண்டை போடுவார்கள். பதற்றமடைவார்கள். ஏன், தற்கொலை வரை கூட செல்வார்கள். இவர்களின் நிலையை 'மிசோஃபோனியா' (Misophonia) என்கிறது மருத்துவம்.

1990-ம் ஆண்டளவில் மருத்துவ உலகம் இதைக் கண்டறிந்தது.'மிசோஃபோனியா' என்பது சிக்கலான ஒரு மனநிலை. இதுபற்றி மருத்துவ நிபுணர்கள் பின்வருமாறு விளக்கம் தருகின்றனர்.

தும்முவது, சத்தம் போட்டுச் சிரிப்பது, 'கறுக் மொறுக்' என்று கடித்துத் தின்பது போன்ற சாதாரணமான சத்தங்கள் கூட 'மிசோஃபோனியா' பிரச்சினை இருப்பவர்களுக்கு அதிபயங்கர கோபத்தை ஏற்படுத்தும்.

சிலர் ஒலிகளைக் கண்டு அஞ்சுவார்கள். அந்த நிலைக்கு 'போனோஃபோபியா' (Phonophobia) என்று பெயர். நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் சத்தம் சிலருக்கு அதிபயங்கரமாகக் கேட்கும். அந்த நிலையை 'ஹைபெராகியூசிஸ்' (Hyperacusis) என்கிறார்கள். இவை இரண்டுமே'மிசோஃபோனியா'விலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.

சில குழந்தைகள் பட்டாசு வெடிச் சத்தத்தைக் கேட்டால் அலறத் தொடங்கும். பயப்படும். புத்தாண்டு வந்தாலேயே அக்குழந்தைகள் அச்சம் கொள்ளும்.இப்படி ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் ஒலியின் அதிர்வு அல்லது வீச்சு ஏற்படுத்தும் தாக்கம் அல்லது வெளிப்படும்விதம் ஆளுக்குஆள் மாறுபடலாம்.

இதுபோன்று பாதிப்பு உள்ள குழந்தைகள் பெரும்பாலும் இத்தகைய சத்தம் ஏற்படும் இடத்திலிருந்து வேறு இடத்துக்குச் செல்ல முயல்வார்கள். சத்தத்துக்கான எதிர்வினை குழந்தைகளின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். இது அந்த இடத்திலிருந்து விலகிச் செல்வதில் தொடங்கி தற்கொலை முயற்சிவரை அவர்களை இழுத்துச் செல்லலாம்.

மிசோபோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் ஒன்றி வாழ்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் உணவகங்களுக்குச் செல்வது, அதிக ஒலி உள்ள நிகழ்ச்சிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள். ஆனால், 'மிசோஃபோனியா'வுக்கென எந்த ஒரு முழுமையான சிகிச்சையும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நிலையை உறுதி செய்வதில் தொடங்கி சிகிச்சை, தீர்வு என அனைத்து நிலைகளிலும் செவித்திறன் வல்லுநர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். மிசோஃபோனியாவுக்கான தீர்வு இரண்டு முனைகளைக் கொண்டது. ஒரு முனையில் செவித்திறன் வல்லுநர்களும் மறுமுனையில் மனநல மருத்துவர்கள் அல்லது உளவியலாளர்களும் இருக்கின்றனர். செவித்திறன் வல்லுநர்கள் குழந்தைகளுக்குச் சத்தங்களை இயல்பாக்குதலிலும் சமன்படுத்துவதிலும், அவர்களைப் பாதிக்கும் சத்தங்களுக்குப் பழக்கப்படுத்துவதிலும் உதவுகின்றனர்.இம்மருத்துவமெல்லாம் மேற்கு நாடுகளில்தான் உன்னிப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.இலங்கை போன்ற நாடுகளில் இவ்வியாதி உள்ளதைக் கண்டறிவதிலேயே கவனம் செலுத்தப்படுவதில்லை.

மனநல மருத்துவர்களும் உளவியலாளர்களும் சத்தத்தின் விளைவாக ஏற்படும் பதற்றம், மனஅழுத்தம் போன்றவற்றைச் சீர் செய்ய உதவுகின்றனர். ஒலிக்கான எதிர்வினை அதிவேகமாக, மிகத் தீவிரமாக காணப்படும்போது, அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மருந்துகளும் வெளிநாடுகளில் பரிந்துரைக்கப்படுகின்றன.


Add new comment

Or log in with...