Friday, March 29, 2024
Home » இதுவரை பதிவு செய்திருந்த சிறந்த காலாண்டு நிதிப் பெறுபேறுகளை எய்தியுள்ள அமானா வங்கி

இதுவரை பதிவு செய்திருந்த சிறந்த காலாண்டு நிதிப் பெறுபேறுகளை எய்தியுள்ள அமானா வங்கி

- 9 மாத கால வரிக்கு முந்திய இலாபம் 78% இனால் உயர்வு

by Rizwan Segu Mohideen
December 8, 2023 3:55 pm 0 comment

அமானா வங்கி பிஎல்சி, இதுவரை காலத்தில் பதிவு செய்திருந்த சிறந்த காலாண்டு நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்து, 2023 ஆம் ஆண்டில் உறுதியான இலாபகரத் தன்மையை வெளிப்படுத்தியிருந்தது. 2023 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் ஒன்பது மாத காலப்பகுதியில், வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 1.68 பில்லியன் பதிவு செய்யப்பட்டிருநு்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 940.0 மில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில் 78% வருடாந்த நிதியளிப்பு வருமான அதிகரிப்பாகும். மூன்றாம் காலாண்டில் மாத்திரம் வங்கி இதுவரை பதிவாகியிருந்த உயர் காலாண்டு வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 874.0 மில்லியனை பதிவு செய்திருந்தது. 2022ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 383.0 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 128% வளர்ச்சியாகும்.

சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள், கூட்டாண்மை மற்றும் சில்லறை வர்த்தக துறைகளுக்கு வங்கியினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் நாட்டில் பொருளாதார மீட்சி பதிவாகியிருந்த முக்கிய காலகட்டத்தில் பொருளாதாரத்துக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் செயலாற்றியிருந்ததன் பெறுபேறாக இந்த உயர் பெறுமதியை வங்கி பதிவு செய்திருந்தது. 

65% வரிக் கொடுப்பனவை வங்கி மொத்தமாக பதிவு செய்திருந்த நிலையில், 9 மாத வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 891.5 மில்லியனை வங்கி எய்தியிருந்தது. கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ. 600.5 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 48% அதிகரிப்பாகும். வங்கியின் மூன்றாம் காலாண்டு வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 238.5 மில்லியனிலிருந்து ரூ. 471.9 மில்லியனாக 98% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இந்த சிறந்த பெறுபேற்றின் காரணமாக, வங்கியின் பங்கின் மீதான வருமதி 2023 மூன்றாம் காலாண்டில் 8% ஐ கடந்திருந்தது. 2022 நிதியாண்டில் இந்தப் பெறுமதி 5.6% ஆக பதிவாகியிருந்தது.

நிதி வழங்கலை வினைத்திறனாக முன்னெடுத்திருந்தமை மற்றும் கடனுக்கான கேள்வி அதிகரித்திருந்தமை போன்றவற்றினூடாக உறுதியான நிதிப் பெறுபேறுகளை வங்கி பேணியிருந்ததுடன், 60% வருடாந்த வளர்ச்சியையும் பதிவு செய்திருந்தது. ஒரு வருடத்துக்கு முன்னர் பதிவாகியிருந்த ரூ. 8.09 பில்லியனிலிருந்து ரூ. 12.97 பில்லியனாக பதிவாகியிருந்தது.  3.6% இலிருந்து 4.5% ஆக தனது நிதியளிப்பு எல்லைப் பெறுமதியை மேம்படுத்தியிருந்ததுடன், தேறிய நிதியளிப்பு வருமானமாக ரூ. 4.85 பில்லியனை பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 56% அதிகரிப்பாகும்.

தேறிய தரகு மற்றும் கட்டண வருமானம் மற்றும் தேறிய வர்த்தக வருமானம் ஆகியன முறையே ரூ. 701.4 மில்லியன் (36% வருடாந்த வளர்ச்சி) மற்றும் ரூ. 1.17 பில்லியன் (83% வருடாந்த வளர்ச்சி) பெறுமதியை பதிவு செய்திருந்தன. இதனூடாக வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் 58% இனால் அதிகரித்து ரூ. 6.74 பில்லியனாக பதிவாகியிருந்தது. பெருமளவு தொகையை மதிப்பிறக்கத்துக்கு ஒதுக்கீடு செய்திருந்த போதிலும், வங்கியின் தேறிய தொழிற்பாட்டு வருமானம் 51% இனால் அதிகரித்து ரூ. 5.29 பில்லியனாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ. 3.49 பில்லியனாக பதிவாகியிருந்தது. வரிக்கு முந்திய தொழிற்படு இலாபம் 92% அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 2.54 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ. 1.32 பில்லியனாக பதிவாகியிருந்தது.

சந்தையில் நெருக்கடியான திரள்வு நிலை காணப்பட்ட சூழலில், அமானா வங்கியின் மக்களுக்கு நட்பான வங்கி மாதிரிக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்ந்தும் அதிகரித்த ஏற்றுக் கொள்ளல் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதனூடாக வாடிக்கையாளர் வைப்புகள் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் ரூ. 15.8 பில்லியனினால் அல்லது 14% இனால் அதிகரித்திருந்தது. காலாண்டில் ரூ. 128.3 பில்லியனை பதிவு செய்திருந்தது. இதனூடாக ஆரோக்கியமான CASA விகிதமான 40% ஐ பேணியிருந்தது. தனியார் துறையின் கடன் வளர்ச்சி படிப்படியாக உயர்வடைந்திருந்ததுடன், இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், வங்கியின் முற்பண பிரிவு 5% வளர்ச்சியை எய்தி ரூ. 87.1 பில்லியனை பதிவு செய்திருந்தது. உரிய காலப்பகுதியில் வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் வினைத்திறனான இலாகா முகாமைத்துவம் ஆகியவற்றினூடாக, வங்கி தொடர்ந்தும் துறையில் மிகக் குறைந்த நிலை 3 மதிப்பிறக்க நிதியளிப்பு விகிதமான 1.6% ஐ கொண்டிருந்தது.

வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 2023 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று, ரூ. 148.3 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், பங்காளர்களின் நிதி ரூ. 15 பில்லியனை விட உயர்வாக பதிவாகியிருந்தது. 

வங்கியின் காலாண்டு வினைத்திறன் தொடர்பில் தவிசாளர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியின் வரலாற்றில் பதிவாகியிருந்த சிறந்த காலாண்டு நிதிப் பெறுபேறுகளை நாம் பதிவு செய்துள்ள நிலையில், சிறப்புக்கான எமது அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எமது பிரத்தியேகமான மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரியை கட்டியெழுப்பும் வங்கியின் பயணத்தில் கிடைத்த சிறந்த வளர்ச்சியாக இது அமைந்துள்ளது. எமது பயணத்தில் முக்கிய பங்காளர்களாக இணைந்துள்ள அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்றார்.

வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “மூன்றாம் காலாண்டில் அமானா வங்கி பதிவு செய்திருந்த நிதி பெறுபேறுகளினூடாக, சவால்கள் நிறைந்த சூழலிலும் எமது மீட்சிப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெறுமதி அடிப்படையிலான தீர்வுகள் மற்றும் மக்களுக்கு நட்பான வங்கியியல் கொள்கைகள் போன்றவற்றை நாடிச் செல்லும் கொள்கைகளினூடாக, சிறந்த வளர்ச்சியை எய்த முடிந்ததுடன், சகல பங்காளர்கள் மத்தியிலும் அர்த்தமுள்ள தாக்கத்தை எமது அர்ப்பணிப்பினூடாக ஏற்படுத்தவும் முடிந்திருந்தது. எனது சக பணிப்பாளர்கள், நிர்வாகத்தினர், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் வழங்கும் தொடர்ச்சியான ஆதரவு, கொண்டுள்ள நம்பிக்கை போன்றவற்றுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். உத்வேகத்துடன் 2023 ஆம் ஆண்டை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதுடன், வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது மற்றும் வாழ்வுக்கு வளமூட்டும் எமது பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் நிலையில், மேலும் சிறந்த பெறுபேறுகளை எய்தக்கூடியதாக இருக்கும் எனவும் கருதுகின்றோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. 2023 ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட தேசிய நீண்ட கால தரப்படுத்தலில் BB+(lka) எனும் உறுதியான தோற்றத்தை வழங்கியிருந்தது. 

OrphanCare அமைப்பின் ஸ்தாபக அனுசரணையாளர் என்பதற்கு அப்பால், எவ்விதமான துணை, இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT