Friday, April 26, 2024
Home » இலக்கியமும், கல்வியும் இரு கண்களென்று போற்றி வாழ்ந்தவர் பேராசிரியர் யோகராசா

இலக்கியமும், கல்வியும் இரு கண்களென்று போற்றி வாழ்ந்தவர் பேராசிரியர் யோகராசா

by Rizwan Segu Mohideen
December 17, 2023 4:28 pm 0 comment

கண்டியிலிருந்து கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை என்னைத் தொடர்பு கொண்ட எழுத்தாளர் நொயல் நடேசன், ‘எங்கள் இலக்கிய நண்பர் பேராசிரியர் செ. யோகராசா மறைந்துவிட்டார்’ என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார்.

உடனே கொழும்பிலிருக்கும் பேராசிரியை சித்திரலேகா மௌனகுருவை தொடர்புகொண்டு அந்தச் செய்தியை ஆழ்ந்த கவலையுடன் உறுதிப்படுத்தினேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னர், மகரகமக மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்ததாகவும், கவலைக்கிடமான நிலையில் அவர் இருந்ததாகவும் சித்திரலேகா சொன்னார்.

கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப் பயணத்தில் இணைந்து வந்திருக்கும் எமது அருமை நண்பர் செ. யோகராசாவின் அருமைத் துணைவியார் விஜயதிலகிக்கும் ஏகபுதல்வி சுவஸ்திகாவுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் துயரத்திலும் பங்கெடுத்து கொள்கின்றேன்.

வடமராட்சி, கரணவாய் கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு,செல்லையா – இலட்சுமி தம்பதியரின் புதல்வனாக பிறந்த யோகராசா, தனது ஆரம்பக்கல்வியை கரணவாய் வித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் தொடர்ந்தவர்.

பாடசாலைப் பருவத்திலேயே கவிதைகள் எழுதத்தொடங்கிய யோகராசா, முதலில் ‘கருணையோகன்’ என்ற புனைபெயரிலேயே இலக்கியப்பிரதிகள் எழுதினார்.

தமிழில் கலைமாணி பட்டத்தினையும், அதனையடுத்து இளந்தத்துவமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டு தபால் நிலையத்தில் தனது தொழில் வாழ்வைத் தொடங்கினார்.

‘கருணை யோகன்’ என்ற பெயரிலேயே யோகராசா முதலில் எனக்கு 1972 ஆம் ஆண்டளவில் அறிமுகமானார். அக்காலப்பகுதியில் நானும் இலக்கியப்பிரவேசம் செய்திருந்தமையால், இவரது எழுத்துக்களை மல்லிகையில் படித்துவிட்டு கொழும்பு சென்று அறிமுகமாகி நண்பனானேன்.

அக்காலப்பகுதியில் அவர் கொழும்பு -07 இல் நகரமண்டபத்திற்கு அருகிலிருந்த கறுவாக்காடு தபால் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அன்றுமுதல் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான இலக்கிய நண்பராக விளங்கியவர்.

தபாலகத்தில் பணியாற்றிய கருணை யோகன், தனது திசையை பின்னர் மாற்றிக்கொண்டார். கொழும்பிலும் அதன்பின்னர் மாஹோவிலும் தபால் நிலையங்களில் பணியாற்றிவிட்டு, பட்டதாரி ஆசிரியராக நுவரேலியா மாவட்டத்தில் புதிய பணியேற்றார். கல்வி தொடர்பாக மேலதிக தகைமைகளை வளர்த்துக்கொள்வதில் பேரார்வம் காண்பித்தார்.

நான் 1987 இல் அவுஸ்திரேலியா வந்தபின்னரும் என்னுடன் கடிதத் தொடர்பிலிருந்தவர். எனது கடிதங்கள் நூலிலும் அவரது கடிதம் இடம்பெற்றுள்ளது. அவருக்கு அவரது குடும்பம் மாத்திரமல்ல, அவரது மாணவர்களும் முக்கியமானவர்கள். நெருக்கடிக்கு மத்தியில் நிதானமாகப் பேசுவார். பதற்றமின்றி இயங்குவார். அதிர்ந்து பேசத்தெரியாத பண்புகளே அவரது பலம். எளிமையே அவரது வலிமை!

ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமன்றி புகலிட இலக்கிய உலகிலும் மிகுந்த கவனிப்புக்குள்ளான திறனாய்வாளர். அவரால் எழுதாமலும் வாசிக்காமலும் இருக்கவே முடியாது. அவருக்காக அல்ல, மற்றவர்களுக்காக எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டுமிருப்பவர். மாணவர்களுக்காகவும் இலக்கிய உலகிற்காகவும் தன்னை அவ்விதம் வடிவமைத்துக் கொண்டவர்.

கொவிட் பெருந்தொற்றுக்காலத்திலும் பல மெய்நிகர் அரங்குகளில் தோன்றி உரையாற்றியவர்.

வடமராட்சியில் பிறந்து வளர்ந்து, கிழக்கிலங்கையில் காலூன்றியிருந்த இந்த இனிய இலக்கிய நண்பர், ஈழத்தின் அனைத்துப்பிரதேச தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களிடம் மட்டுமன்றி சிங்கள எழுத்தாளர்களிடமும் நன்மதிப்பு பெற்றவர். ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்தபின்னர் தோன்றிய புலம்பெயர் இலக்கியம் – புகலிட இலக்கியம் தொடர்பாகவும் திறனாய்வு செய்திருப்பவர்.

நான் இலங்கையிலில்லாத காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரில் நடந்த இலக்கியக்கருத்தரங்கில் தனது உரையின் தொடக்கத்தில் என்னை நினைவுபடுத்தியே பேசியிருக்கிறார்.

நாம் அவுஸ்திரேலியாவில் 1988 இல் ஆரம்பித்து இன்றுவரையில் தொடர்ந்து இயங்க வைத்துக்கொண்டிருக்கும் ‘இலங்கை மாணவர் கல்வி நிதியம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்திய மாணவர் கண்காணிப்பாளராகவும் யோகராசா சமூகத்தொண்டுணர்வோடு இணைந்திருந்தார்.

கிழக்கிலங்கையை 2004 இறுதியில் சுனாமி கடற்கோள் அனர்த்தம் கோரமாக பாதித்திருந்த வேளையில் மட்டக்களப்பு, செங்கலடி, கல்முனை, பெரியநீலாவணை, பாண்டிருப்பு முதலான பிரதேசங்களுக்கெல்லாம் சென்றிருந்தேன். கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ரவீந்திரநாத் துணைவேந்தராக அச்சமயம் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அவர் முன்னிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இருபத்தைந்து மாணவ மாணவியரை எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் பொறுப்பெற்று தொடர்ச்சியாக நிதியுதவி வழங்கியது. இச்சந்தர்ப்பங்களிலும் நண்பர் யோகராசா எமக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார்.

இறுதியாக 2017 ஆம் ஆண்டும், 2019 ஆம் ஆண்டும் கிழக்கிலங்கைக்கு பயணித்தவேளையிலும் யோகராசா எம்முடன் மட்டக்களப்பு, கன்னன் குடா, கல்முனை, பெரியநீலாவணை முதலான பிரதேசங்களுக்கும் வந்தார்.

இறுதியாக கடந்த ஜூலை மாதம் இலங்கை சென்றவேளையில் அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போய்விட்டது. நான் கிழக்கிற்கு சென்றபோது, அவர் யாழ்ப்பாணத்தில் நின்றார்.

2005 – 2009 காலப்பகுதியில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெற்ற கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் பேராசிரியர் யோகராசாவை பெரிதும் மதித்துப் போற்றியதையும் அவதானித்திருக்கின்றேன்.

நாம் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொழும்பில் நான்கு நாட்கள் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் கலந்துகொண்டு கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பித்திருக்கும் யோகராசா, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலரையும் தன்னுடன் அந்த மாநாட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.

மாணவர்களும் இலக்கியத்தின்பால் திரும்பவேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டிருந்தவர். இலக்கியமும் கல்வியும்தான் அவரது கண்கள். அதனால் இலக்கியவாதிகளும் மாணவரும் பெற்ற நன்மைகள் ஏராளம்.

உடுப்பிட்டி கல்வி வலயத்தின் சிறந்த ஆசிரியருக்கான விருது, கலாநிதி பட்ட ஆய்விற்காக பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஞாபகார்த்த விருது, இலங்கை இலக்கியப்பேரவையின் விருது, தேசிய சாகித்திய விருது, வடமாகாண சபை விருது, கலைவாருதி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றிருக்கும் நண்பர் யோகராசா, தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் முதலான நாடுகளிலும் பல இலக்கியக் கருத்தரங்குகளில் பங்குபற்றியிருப்பவர்.

எழுத்துலகில் தொடக்கத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் படைத்துக் கொண்டிருந்தவர், பின்னர் விமர்சகராகவும் திறனாய்வாளராகவுமே பரவலாக அறியப்பட்டார். அவரது ‘அகதிகள்’ என்னும் சிறுகதை சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்வையும் பணிகளையும் பாராட்டி மட்டக்களப்பில் பெருவிழா எடுத்தனர். அத்தருணம் வெளியிடப்பட்ட, ‘கருணையோகம்’ சிறப்புமலரில் பல இலக்கிய ஆளுமைகளும் பேராசிரியர்களும் அவரது சிறப்பியல்புகளையும், இலக்கிய மற்றும் கல்விக்கான பங்களிப்புகள் குறித்தும் விரிவாக பதிவுசெய்துள்ளனர்.

அந்த மலர் ஆவணமாகவே திகழுகின்றது. பேராசிரியர் யோகராசா தொடர்ந்தும் ஆசிரிய கலாசாலைகளில் விரிவுரையாற்றிக்கொண்டும் இலக்கியத்திறனாய்வு செய்து கொண்டுமிருந்தவர். அவருடை நீண்ட பயணத்தில் நானும் ஒரு பார்வையாளனாக இணைந்திருந்தேன்.

இன்று அவரில்லையே என்பது அறிந்து, அந்தத் துயரத்தைக் கடக்க முயற்சிக்கின்றேன். பேராசிரியர் யோகராசாவின் திடீர் மறைவினால் ஆழ்ந்த துயரத்திலிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், மற்றும் இலக்கிய நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் தொலை தூரத்திலிருந்து எனது இரங்கலைத் தெரிவிக்கின்றேன்.

இம்மாதம் 17 ஆம் திகதி அவரது 74 ஆவது பிறந்த தினம். அதனை தமது இனிய குடும்பத்தினருடன் இருந்து கொண்டாட முடியாமலேயே திடீரென நிரந்தரமாக விடைபெற்று விட்டார்.

இனி எம்மிடம் எஞ்சியிருக்கப்போவது யோகராசாவின் நினைவுகளும், அவர் எழுதிவிட்டுச்சென்ற திறனாய்வு இலக்கியப்பிரதிகளும்தான்.

லெ. முருகபூபதி
அவுஸ்திரேலியா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT