Home » சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு தருகின்ற நம்பிக்கை

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு தருகின்ற நம்பிக்கை

by gayan
December 16, 2023 6:00 am 0 comment

வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்குள் வரவழைப்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. நாடு தற்போது சுமுகநிலைமையில் உள்ளதனால், வெளிநாடுகளில் இருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரத் தொடங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உலகில் சுற்றுலாத்துறை ஊடாக பிரதான வருமானம் பெற்று வருகின்ற நாடுகள் பல உள்ளன. தாய்லாந்து, துருக்கி, மாலைதீவு, இந்தோனேசியா போன்ற பல நாடுகளை இதற்கான உதாரணங்களாகக் கூறலாம். இந்நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், புதுமையான அனுபவத்தையும் தரக் கூடியனவாக உள்ளன. இயற்கை அழகும் வளங்களும் நிறைந்த இடங்களாக அந்நாடுகள் உள்ளன. ஆகவே அந்நாடுகளுக்கு உலகின் பல பாகங்களிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர்.

சுற்றுலாத்துறைக்குப் பிரபல்யம் பெற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை மிகவும் சிறப்பு வாய்ந்த நாடாக உள்ளது. சிறியதொரு நாட்டுக்குள் இயற்கை அழகு நிறைந்த மத்திய மலைநாடு, வனப்பு நிறைந்த கடற்கரையோரங்கள், வரலாற்றுத் தொன்மை மிகுந்த பண்டைய இடங்கள் என்றெல்லாம் இலங்கையில் நிறைந்துள்ள மனம் கவரும் பிரதேசங்கள் ஏராளம் எனலாம். சிறியதொரு நாட்டுக்குள் அத்தனை வித்தியாசமான இயற்கைப் பிரதேசங்களைக் கண்டுகளிப்பதற்காகவும், சில நாட்கள் இங்கேயே தங்கியிருப்பதற்காவும் உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

அவர்கள் எமது நாட்டுக்கு வெறுமனே வந்துவிட்டு திரும்பிச் சென்று விடவில்லை. எமக்கு நன்மையையும் தந்து விட்டுத்தான் செல்கின்றனர். அதாவது எமது நாட்டுக்கு அவர்களால் அதிக வருமானம் கிடைக்கின்றது. அவர்களது வருகையினால் எமது நாட்டுக்கு அந்நிய செலாவணி வருமானம் அதிகளவில் கிடைக்கின்றது. அவர்கள் இலங்கைக்கு அதிகளவில் வருகின்ற போது எமது நாட்டுக்குரிய வருமானமும் பெருகிக் கொண்டே வருகின்றது.

எனவே சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டியது அவசியம். சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதானால் இலங்கையில் சுமுகநிலைமை நிலவ வேண்டியது முதலில் முக்கியமாகும். பொருளாதார நெருக்கடி குறைவாக உள்ளதுடன், அச்சமற்ற நிலைமையும் நிலவினாலேயே சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இலங்கைக்கு வருகை தருவரென எதிர்பார்க்க முடியும். அதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் தற்போது அதிகம் ஈடுபட்டு வருகின்றது.

இலங்கையில் கடந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பலவித காரணங்களால் பெருவீழ்ச்சியடைந்திருந்தது. ஈஸ்டர் திருநாளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களால் இலங்கையின் சுற்றுலாத்துறை முற்றாகவே முடங்கிப் போயிருந்தது. வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கே அஞ்சினர். அந்த நிலைமையானது சில வருடங்களாக நீடித்தது. அதன் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் பூச்சிய நிலைமைக்குச் சென்றிருந்தது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் அச்சநிலைமை படிப்படியாக நீங்கியதும், மற்றொரு நெருக்கடி உருவெடுத்தது. பொருளாதார நெருக்கடியே அதுவாகும். பொருளாதார நெருக்கடி உச்சநிலைமையை அடைந்தமை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை அடையவில்லை.

ஆனால் தற்போது அந்த வீழ்ச்சி நிலைமை பெருமளவில் நீங்கி வருவதனால் இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வருடம் (2023) ஜனவரியில் 1,00,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்திருந்தது. அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,02,545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சபை தெரிவித்திருந்தது.

ஜனவரி 2022 இல் பதிவாகிய 82,327 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் 20,218 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு கூடுதலாக வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிலிருந்து 25,254 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 13,759 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,483 பேரும் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

சுற்றுலாப் பயணிகளின் இந்த எண்ணிக்கையானது எதிர்வரும் காலத்தில் மேலும் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை தனது பொருளாதார நெருக்கடியிலிருந்து துரிதமாக மீண்டு வருகின்ற இவ்வேளையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவது நம்பிக்கை தருகின்ற அறிகுறியாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT