Friday, March 29, 2024
Home » காசா போரை பல மாதங்கள் தொடர திட்டமிடும் இஸ்ரேல்

காசா போரை பல மாதங்கள் தொடர திட்டமிடும் இஸ்ரேல்

ஹமாஸும் நீண்ட போருக்குத் தயார்

by gayan
December 16, 2023 6:00 am 0 comment

ஹமாஸ் அமைப்பை வீழ்த்துவதற்கு மேலும் பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்று இஸ்ரேல் தனது நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவிடம் கூறியிருக்கும் நிலையில் காசா பகுதி மீது தாக்குதல் நேற்றும் (15) தீவிரமடைந்திருந்தது.

இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் விமானங்கள் வடக்கு காசா அதேபோன்று தெற்கில் கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்ததாக குடியிருப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கான் யூனிஸில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றுக் காலை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று கான் யூனிஸில் இருக்கும் பாடசாலை ஒன்றின் மீது நேற்றுக் காலை இடம்பெற்ற வான் தாக்குதலில் குறைந்தது 12 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்று அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோன்று கடந்த வியாழக்கிழமை இரவு கான் யூனிஸ் மற்றும் ரபாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் பத்துப் பேர் காயமடைந்து அல்லது கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது. ரபாவில் உள்ள குவைட்டி மருத்துவமனைக்கு அருகில் வீட்டுத் தொகுதி ஒன்றின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

மறுபுறம் கிழக்கு ரபா பகுதியில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் பலஸ்தீன போராளிகளுக்கு இடையே நேற்று கடும் மோதல் வெடித்துள்ளது. காசாவின் வடக்கும் மற்றும் தென் பகுதிகள் அதேபோன்று கான் யூனிஸில் கடும் மோதல்கள் நீடித்தபோதும் ரபா பகுதியில் இவ்வாறான மோதல் ஒன்று ஏற்பட்டிருப்பது அரிதான சம்பவம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை மாலை எகிப்து எல்லைக்கு அருகில் உள்ள ரபா நகரின் தென் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து, மின் விளக்குகளின் உதவியோடு இடிபாடுகளில் பலஸ்தீனர்கள் தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.

“இது ஒரு குடியிருப்புப் பகுதியில், இங்கு பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருப்பதை பார்க்க முடியும். இந்த குடியிருப்புகள் இடிபாடுகளாக மாற்றப்பட்டிருக்கின்றன” என்று ரபாவில் வசிக்கும் அபூ ஒமர் குறிப்பிட்டுள்ளார். “எந்த ஒரு இராணுவ செயற்பாட்டிலும் தொடர்பில்லாத குடியிருப்புப் பகுதி மீது மூன்று ஏவுகணைகள் விழுந்தன” என்றும் அவர் கூறினார்.

காசா நகரின் இரு இடங்களில் வியாழக்கிழமை மாலை பலஸ்தீன போராளிகளுடன் கடும் மோதலில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் டனியேல் ஹகரி தெரிவித்தார். “எதிர்வரும் நாட்களில் மேலும் கடுமையான மோதலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்” என்று அவர் குறிப்பட்டுள்ளார்.

காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது.

ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேலிய பணயக்கைதிகள் இருவரின் உடல்களை இஸ்ரேலிய சிறப்புப் படையினர் நேற்று மீட்டுள்ளனர். இதில் 19 வயது நிக் பெய்சர் மற்றும் 19 வயது ரொன் ஸ்கெர்மன் ஆகிய இரு இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் உடல்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

40 கிலோமீற்றர் நீளம் கொண்ட காசா பகுதி மீது எந்த ஒரு தணிவும் இன்றி இஸ்ரேல் சரமாரியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்கு அடிப்படைத் தேவைகளுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதோடு அதனை விநியோகிப்பதிலும் இடையுறு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி 1,200 பேர் கொல்லப்பட்டு 240 பேர் வரை பயணக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் காசாவில் போர் தொடுத்தது. இதனால் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 19,000 நெருங்கியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது.

நீண்ட போருக்கு தயார்

இஸ்ரேலின் போருக்கு அமெரிக்கா வலுவான ஆதரவை வெளியிட்டு வருகின்றபோதும் பொதுமக்களின் உயிரிழப்பை மட்டுப்படுத்தும் படி அது இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேன் சுலிவன் கடந்த வியாழனன்று டெல் அவிவில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்டை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு கணிசமான காலம் தேவைப்படுவதாகவும் பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்றும் ஆனால் நாம் வெற்றியீட்டுவோம், நாம் அவர்களை ஒழிப்போம் என்றும் கலன்ட் தெரிவித்தார்.

வொஷிங்டனில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜொ பைடன், காசாவில் பொதுமக்களை பாதுகாப்பதில் மேலும் அவதானம் தேவை என்றார்.

“ஹமாஸைப் பின்தொடர்வதை நிறுத்தாது, பொதுமக்களின் உயிர்களை எப்படி காப்பாற்றுவது என்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும், ஆனால் மேலும் அவதானத்துடன் இருக்க வேண்டும்” என்று பைடன் குறிப்பிட்டார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா பல பில்லியன் டொலர் இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என்று குறிப்பிட்ட வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, போருக்கு எடுத்துக் கொள்ளும் காலம் பற்றி இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறியது, முன்னர் கூறிய கருத்துடன் ஒத்துப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி வரை போரைத் தொடரப்போவதாக நெதன்யாகு வியாழனன்று கூறிதோடு, சர்வதேச ஆதரவுடனோ அல்லது ஆதரவு இன்றியே போர் தொடரும் என்று வெளியுறவு அமைச்சர் எலி கொஹன் கூறியிருந்தார்.

எனினும் இஸ்ரேலுடன் நீண்ட போர் ஒன்றுக்கு ஹமாஸ் ஆயுதப் பிரிவு தயாராக இருப்பதாக அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் மூத்த தலைவரான காலித் மஷால் துருக்கி பத்திரிகை ஒன்றுக்கு நேற்று தெரிவித்திருந்தார். ஹமாஸின் 35,000 போராளிகள் பல மாதங்கள் நீடிக்கக் கூடிய போருக்கு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

“முஜாஹிதீன்கள் (போராளிகள்) வெள்ளைக் கொடியை உயர்த்தி சரணடைவதை இஸ்ரேலால் எதிர்பார்க்க முடியாது. இஸ்ரேலிய சமூகத்தின் நிலையும் மோசமடைந்து வருகிறது.

காசாவில் அதற்கு எதிர்மறையான நிலை உள்ளது. தடங்கல்களை சந்தித்தபோதும், கஸ்ஸாம் போராளிகள் முதல் நாள் போன்றே தொடர்ந்து போரிட்டு வருகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு விஜயம் மேற்கொண்ட சுலிவன் பலஸ்தீன அதிகாரசபையின் தலைவர்களை சந்தித்திருந்தார். பலஸ்தீன அதிகார சபையில் ஆட்சியில் உள்ள மேற்குக் கரை பகுதியிலும் வன்முறை அதிகரித்துள்ளது. ஜெனின் அகதி முகாமில் இஸ்ரேலிய படை தொடர்ந்து நடத்தும் சுற்றிவளைப்புகளில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT