Friday, March 29, 2024
Home » இந்தியா, பாகிஸ்தானை வெளியேற்றி இறுதிக்கு முன்னேறியது பங்களாதேஷ், ஐ.அ. இராச்சியம்

இந்தியா, பாகிஸ்தானை வெளியேற்றி இறுதிக்கு முன்னேறியது பங்களாதேஷ், ஐ.அ. இராச்சியம்

19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணம்

by gayan
December 16, 2023 7:36 am 0 comment

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணத் தொடரின் அரையிறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வெளியேற்றிய பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய இளையோர் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் நேற்று (15) டுபாயில் நடைபெற்றன. இதில் நடப்புச் சம்பியன் இந்திய இளையோர் அணியை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்்திய பங்களாதேஷ் வீரர்கள் அந்த அணியை 42.4 ஓவர்களில் 188 ஓட்டங்களுக்கு சுருட்டியது. இதன்போது முதல் ஆறு விக்கெட்டுகளையும் 61 ஓட்டங்களுக்கு இழந்த இந்திய அணிக்கு 7ஆவது விக்கெட்டுக்காக முஷீர் கான் (50) மற்றும் முருகன் அபிஷேக் (62) 84 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இதன்போது பங்களாதேஷ் அணிக்காக மரூப் மரிடா 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த பங்களாதேஷ் அணி 34 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்தபோதும் ஆரிபுல் இஸ்லாம் (94) மற்றும் அஹ்ரார் அமீன் (44) இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 138 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு பங்களாதேஷ் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதன்மூலம் பங்களாதேஷ் அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 189 ஓட்டங்களை பெற்றது.

மறுபுறம் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஐக்கிய அரபு இராச்சிய இளையோர் அணி 11 ஓட்டங்களால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஐக்கிய அரபு இராச்சிய அணி 47.5 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு சுருண்டது. உபைத் ஷா 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட வந்த பாகிஸ்தான் அணி மளமளவென்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதனால் அந்த அணி வெற்றி இலக்கை நெருங்கியபோதும் 49.3 ஓவர்களில் 182 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் நாளை (17) நடைபெறும் இளையோர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பங்களாதேஷ் அணிகள் சந்திக்கவுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT