Friday, April 19, 2024
Home » இந்தியாவுக்கு ஐரோப்பாவுக்கான நுழைவாயிலாக கிரீஸ் விளங்கும்

இந்தியாவுக்கு ஐரோப்பாவுக்கான நுழைவாயிலாக கிரீஸ் விளங்கும்

- தூதுவர் டிமிட்ரியோஸ்

by Rizwan Segu Mohideen
December 15, 2023 5:35 pm 0 comment

கிரீஸ் நாட்டுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிவரும் இந்தியாவுக்கு ஐரோப்பாவுக்கான நுழைவாயிலாக கிரீஸ் (கிரேக்கம்) விளங்குகின்றது என்று இந்தியாவுக்கான கிரீஸ் நாட்டுத் தூதுவர் டிமிட்ரியோஸ் ஐயோனோவ் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மிகவும் சிறப்பான முறையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியர்கள் கிரீஸில் முதலீடு செய்ய நிறைய வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் ஏதென்ஸ் மற்றும் தெசலோனிகி போன்ற கிரேக்க நகரங்கள் இந்தியர்களுக்கு அடுத்த டுபாயாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேரள இலக்கிய விழாவில் கலந்து கொண்டிருந்த இந்தியாவுக்கான கிரீஸ் நாட்டு தூதுவர் ஏ.என்.ஐ க்கு வழங்கிய விஷேட நேர்காணலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஆகஸ்ட் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கிரீஸுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டிருந்தார். கடந்த 40 வருட காலப்பகுதியில் கிரீஸுக்கு விஜயம் செய்த ஒரே இந்தியப் பிரதமர் இவரேயாவார். இவ்விஜயத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையில் புதிய வாய்ப்புக்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியர்கள் முதலீடு செய்வதற்கும், கிரேக்க பொருளாதார, சமூக வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் நிறைய வாய்ப்புக்களை கிரீஸ் வழங்குகின்றது.

எனது பதவிக்காலம் இங்கு குறுகியதாக இருப்பதால் இந்தியாவின் வளமான பாரம்பரியம் மற்றும் நாகரீகத்தைப் பெரிதாக அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இந்தியா ஒரு அற்புதமான நாடு. அதன் கலாசாரமும் பாரம்பரியமும் இதனை வெளிப்படுத்தி நிற்கின்றன. நான் இங்கு பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்கள் என் வாழ்நாளிலேயே மறக்க முடியாதவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT