Friday, March 29, 2024
Home » சகோதரத்துவம்: ஓர் இஸ்லாமிய நோக்கு

சகோதரத்துவம்: ஓர் இஸ்லாமிய நோக்கு

by sachintha
December 15, 2023 6:44 am 0 comment

மனித சமூகம் சார்ந்த மிக முக்கியமான ஒரு பண்புதான் சகோதரத்துவமாகும். இஸ்லாம் இதன்பால் அழைப்பு விடுக்கிறது. சமூகத்தில் மனிதர்கள் தமக்கிடையே பரஸ்பரம் நேசிப்பவர்களாகவும் தொடர்பு கொள்கின்றவர்களாகவும் உதவி செய்து கொள்கின்றவர்களாகவும் இருப்பதனையே சகோதரத்துவம் என்பது குறித்து நிற்கிறது. இதன் மூலம் ஒரு குடும்பம் போன்றதொரு உணர்வை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் தமக்குள்ளால் அன்புடன் நடந்துகொள்வார்கள். ஒருவரின் சுமையை அடுத்தவர்கள் சுமப்பார்கள். அடுத்தவனின் பலம் தனது பலம் என்பதாக உணர்வார்கள். அடுத்தவனின் பலவீனம் தனது பலவீனம் என்று பார்ப்பார்கள்.

இன்று நாம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரியதொரு பிரச்சினைதான் சகோதரத்துவம் என்பதனை மிகவும் சுருக்கமாக விளங்கியுள்ளமையாகும். நாம் எமக்கு மத்தியில் எவ்வாறு நடந்துகொள்கிறோம்? நாம் எவ்வாறு ஏனையவர்களை புரிந்துகொள்கிறோம்? நாம் எவ்வாறு அடுத்தவர்களின் நியாயங்களை தேடுகிறோம்? நாம் மற்றவர்களை நேசிக்கிறோமா? ஏனையவர்களுடன் முரண்படும்போது எவ்வாறு நடந்துகொள்கிறோம்? அன்பு என்ற நிழலின் கீழ் நாம் இணைந்துள்ளோமா?

சகோதரத்துவம் என்பது உயர்த்தப்படுகின்ற ஒரு வெற்றுக் கோஷமல்ல. மீட்டி மீட்டி சொல்லப்படுகின்ற வார்த்தைகளுமல்ல. மாற்றமாக இது ஒரு செயல்பாடும், வாழ்வொழுங்கும், பரஸ்பர ஒத்துழைப்பும் ஒருவர் அடுத்தவரை பூரணப்படுத்துவதும் ஒருவர் பிரச்சினைகளை அடுத்தவர்கள் தீர்த்துவைப்பதும் ஆகும்.

சகோதரத்துவம் என்பது கண்ணாடியை போன்றது. நாம் ஒவ்வொருவரும் அதில் நம்மை தெளிவாகவும் வெளிப்படையாகவும் கண்டுகொள்ள முடியும். இது இரு கைகளை போன்றது. ஒரு கையிலுள்ள அழுக்கை மற்றக்கை அகற்றுகின்றது. இது உடலில் ஒரு பகுதியில் நோய் ஏற்பட்டால் துக்கத்தை வெளிப்படுத்துவதற்காக உஷ்ணத்தை வெளிப்படுத்தும் உடம்பை போன்றது.

உள்ளங்கள் இணைய வேண்டும். சகோதரத்துவம் என்பது ஈமானின் சகோதரன் ஆவான். பிரிவினை என்பது இறைமறுப்பின் சகோதரன் ஆகும். ஒரு முஃமினின் முதற் பலம் ஒற்றுமைதான். இது அன்பின் மூலம் மாத்திரம்தான் ஏற்பட முடியும். சகோதரத்துவம் என்பது மார்க்கமாகும்.

ஒரு சகோதரன் தவறிழைக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம். அவன் தவறை ஏற்று சத்தியத்தை நோக்கி திரும்பும்வரை அதனை பறையடிக்காது பறப்பாது பொறுமை காப்பதே நற்பண்பாகும். இது ஒரு சகோதரனின் உரிமையும்தான்.

அபூ தர்தா (ரழி) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள். ‘உங்கள் சகோதரர் ஒரு தவறு செய்தால் அதற்காக வேண்டி அவரை நீங்கள் புறத்தொதுக்கி விட்டுவிட வேண்டாம். ஏனெனில் அவர் ஒருமுறை தவறுவிட்டால் அடுத்தமுறை தன்னை சீர்செய்துகொள்ள சாத்தியமுள்ளது’ என்று குறிப்பிடுகிறார். (ஆதாரம்: நபிமொழி)

இதுபற்றி இமாம் இப்றாஹீம் நகஈ (ரஹ்) அவர்கள் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார். ‘சகோதரன் ஒரு தவறிழைக்கும்போது உறவை முறித்துக்கொள்ளவோ அவனை வெறுக்கவோ வேண்டாம். இன்று தவறு செய்தவன் நாளை அதனை விட்டுவிடலாம்’ என்று குறிப்பிடுகிறார்.

ஈஸா (அலை) அவர்கள் தனது தோழர்களான ஹவாரிய்யூன்களிடம் தெரிவித்ததாக இப்படி ஒரு கருத்து காணப்படுகிறது. ‘உங்களது சகோதரன் தூங்கியுள்ள நிலையில் காற்று பலமாக வீசி அவரது ஆடை விலகிவிட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று நண்பர்களிடம் கேட்டபோது ‘நாங்கள் அதனை மறைத்துவிடுவோம்’ என்று குறிப்பிட்டார்கள். ‘இல்லை அதனை நீங்கள் இன்னும் வெளிப்படுத்துவீர்கள்’ என்று ஈஸா (அலை) குறிப்பிட்டபோது அவர்கள் ஆச்சரியமாக ‘சுப்ஹானல்லாஹ், யார் இப்படி நடந்துகொள்வார்கள்’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘நீங்கள் உங்கள் சகோதரர் பற்றி ஏதாவது மோசமாக கேள்விப்பட்டால் அதற்கு இன்னும் அதிகமாக சேர்க்கிறீர்கள். மக்கள் மத்தியில் அவற்றை பரப்பி விடுகின்றீர்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.

‘ஒருவன் தனது சகோதரனை அன்புடன் நோக்குவதும் வணக்கமாகும். அவன் ஒன்றிணைகின்றபோது அன்புடன் இணைய வேண்டும். பிரிகின்றபோது உபதேசங்களை பகிர்ந்துகொள்பவனாக புறம்பேசுவதை தவிர்ந்து கொள்கின்றவனாக வாக்குறுதியை நிறைவேற்றுகின்றவனாக நட்புறவை வெளிப்படுத்துகின்றவனாக கடும்போக்கு களையப்பட்டவனாக தனிமை நீங்கியவனாக இருக்க வேண்டும்’ என்று புழைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார். மேலும் ‘புறம் பேசும் நிலை தோன்றிவிட்டால் சகோதரத்துவம் என்ற நிலை நீங்கிவிடும்’ என்று குறிப்பிடுகிறார்.

முரண்பாடான கருத்தைக் கூறுபவனின் குறைகளை தேடுவதும் அவனது சிறப்புகளை குறைத்து மதிப்பதும் அவனது சாதனைகளையும் அடைவுகளையும் இழிவாக நோக்குவதும் ஒரு முஸ்லிமின் பண்பல்ல.

‘ஒருவரை நேசித்தால் அளவுக்கு அதிகமாக நேசிக்காதே, ஒருவரை வெறுத்தால் அழிவு ஏற்படும் விதமாக வெறுக்காதே’ என்று உமர் ரழி அவர்கள் குறிப்பிட்டபோது இது எவ்வாறு நிகழும் என்று வினாத் தொடுக்கப்பட்டது? அதற்கவர் ‘தனக்கு மிக விருப்பமான ஒரு பொருளை ஒரு சிறுவன் அளவுக்கு அதிகமாக நேசிப்பது போன்று நேசிக்காதே, நீ ஒருவனை வெறுத்தால் அவன் அழிந்து போகும்விதமாக வெறுக்காதே’ என்று குறிப்பிட்டார்கள். நேசிப்பதிலும் வெறுப்பதிலும் நடுநிலை பேணுதலை இது குறிக்கிறது.

(ஆதாரம்: புகாரி அதபுல் முப்ரத்)

சகோதரத்துவத்தை பாதுகாக்க வேண்டுமானால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவதுடன் கருத்து முரண்படுவதற்கான ஒழுங்குகளையும் புரிந்துகொள்ள வேண்டும். உடன்பாட்டில் ஒத்துழைக்கின்றவர்களாகவும் முரண்பாட்டில் நியாயம் தேடுபவர்களாகவும் நாம் மாற வேண்டும். கருத்துப்பிடிவாதம் விட்டுக்கொடுக்காமை போன்றவற்றிலிருந்து விலகி நடந்துகொள்ள வேண்டும். எனது கருத்துதான் சரியானது அடுத்தவர் கருத்துக்கள் பிழையானவை என்ற நிலையிலிருந்து எம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர் பற்றிய நல்லெண்ணம் சதாவும் இருக்க வேண்டும். கட்டியெழுப்பக்கூடிய விமர்சனங்களை முன்வைப்பதுடன் சுய விமர்சனத்துக்கும் தன்னை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். கருத்து முரண்பாடு என்ற நிலையிலிருந்து கலந்துரையாடல், கருத்து உடன்பாடு என்ற நிலையை நோக்கிப் போக வேண்டும். அடுத்தவர்களை காயப்படுத்தும் பிரகாரம் எமது அணுகுமுறைகள் இருக்கக்கூடாது.

அஷ் ஷெய்க் யூ.கே றமீஸ்…

எம்.ஏ. (சமூகவியல்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT