Thursday, March 28, 2024
Home » கோப் 28 மாநாடும் காலநிலை மாற்றத்தில் இந்தியாவின் வகிபாகமும்

கோப் 28 மாநாடும் காலநிலை மாற்றத்தில் இந்தியாவின் வகிபாகமும்

by Rizwan Segu Mohideen
December 13, 2023 2:26 pm 0 comment

காலநிலை மாற்றத்தின் தாக்கம் இன்று பிரதான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக உலகம் மிகப்பெரும் சவால்களை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினை முழுமையாக தவிர்க்க முடியாது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவற்றை தணிப்பதற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கும் என பல்வேறு திட்டங்களும் முயற்சிகளும் உலகலாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தேசிய, சர்வதேச மட்டங்களில் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இதற்கென தனியான உலகளவிலான பல்தேசிய திட்டங்களையும் பொறிமுறைகளையும் வருடாந்தம் செயற்படுத்தி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் உலக தலைவர்களின் பங்களிப்புடன் மாநாடுகள் நடாத்தப்பட்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுகின்றன. காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு உலகளாவிய திட்டங்கள் கொள்கைகளின் அடிப்படையில் இந்தியா உட்பட ஆசிய நாடுகள் கொள்கையையும் திட்டங்களையும் வகுத்து வருகின்றன.

காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினை மனித சமூக இருப்பிற்கும் அபிவிருத்திக்குமான மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது. அதிக வெப்பநிலை, கடல் நீர் மட்டத்தின் உயர்வு அனைத்து உயிரினங்களினதும் வாழ்வியலை மிகக் கடுமையாக பாதிக்கும் என பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. புயல், சீரற்ற பருவமழை, வெள்ளம், வறட்சி, என தீவிர காலநிலை தாக்கங்கள் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இதில் பல நிகழ்வுகள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதை எதிர்கொள்ள போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP ) ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்முறை மாநாடு கடந்த நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் உலகத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்துஜீவிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றது.

காலநிலை மாற்றம் மற்றும் நாடுகள் அதை எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளன என்பது குறித்த உரையாடலுக்கான முன்னணி சர்வதேச தளமாக காலநிலை மாற்ற உச்சிமாநாடு செயல்படுகிறது.மாற்றத்திற்கான கூட்டு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அனைத்து பங்குதாரர்களுக்கும் புதிய, சமமான தீர்வுகளுக்கு பங்களிப்பைப் பெறுவதும், சமமான வாய்ப்புகளை வழங்குவதும் இந்த மாநாட்டின் குறிக்கோளாகும்.உலகளவில் நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைப் பேணுவதற்கும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கும் அனைத்து உறுப்பு நாடுகளின் கூட்டு அர்ப்பணிப்பின் முக்கியத்துவமும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது விசேட அம்சமாகும்.

காலநிலை மாற்றத்தை தடுப்பதில் ஆசியாவில் பலம் வாய்ந்த நாடான இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருவதோடு அது தொடர்பில் பல முக்கிய யோசனைகளை இந்திய பிரதமர் ரரேந்திர மோடி முன்வைத்திருந்தார். காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை இந்தியாவின் பிரதமர் மோடி இங்கு எடுத்துரைத்திருந்தார். அதற்காக இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் பற்றியும் எதிர்கால இலக்குகள் பற்றியும் அவர் விளக்கியிருந்தார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் தலைமை வகிக்க இந்தியா காட்டும் ஆர்வத்தையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அவரின் கருத்து உலக அளவில் கவனிக்கப்பட்டது முக்கியமானதாகும்.

காலநிலை மாற்ற விவகாரத்தில் இந்தியாவில் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இதன் பாதிப்புகளை தணிக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இந்தியா பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

” இந்தியா உலக அளவில் 4 % குறைவான அளவே கார்பன் உமிழ்தலில் பங்கு வகிக்கிறது. உலக நலனுக்காக அனைவரது நலன்களையும் பாதுகாப்பது அவசியம். உறுதியளிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்குகளை இந்தியா எட்டியுள்ளது” என கோப் 28 இல் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

எதிர்வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாசு உமிழ்வை 45 சதவீதம் குறைக்கவும், புதைபடிவமற்ற (பெட்ரோலிய எரிபொருள் அல்லாத) எரிபொருட்களின் பங்கை 50 சதவீதம் அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டின் தவறுகளை சரி செய்ய நமக்கு அதிக நேரம் இல்லை. வரும் 2028-ம் ஆண்டில் நடக்க இருக்கும் கோப்-33 உலக பருவநிலை உச்சி மாநாட்டை இந்தியா ஏற்று நடத்த விரும்புகிறோம்” என்றும் அவர் இங்கு தெரிவித்திருந்தார்.
இந்த மாநாட்டின் போது அவர் பல உலகத் தலைவர்களை சந்தித்து கருத்துப் பரிமாறியிருந்ததோடு அடுத்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்திருந்தார்.

இந்தியாவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பசுமைக் கடன் திட்டம் முழு உலகமும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று . சுற்றுச்சூழல் அமைச்சினால் தொடங்கப்பட்ட திட்டம், சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் உதவும் திட்டங்களுக்கு பசுமைக் கடன்களை வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் ஒரு வழியாகும். அதன் முதல் சுற்றில், நீர் பாதுகாப்பு மற்றும் காடு வளர்ப்பு நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ளப்படும்.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிப்பதில் காடுகளின் முக்கியத்துவம் மிகவும் பிரதான பங்கு வகிக்கும் நிலையில் இந்தியா தனது வனப்பகுதியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதற்கும் பசுமை இல்ல வாயுவை கட்டுப்படுத்துவதற்கும் “பசுமை இந்தியா மிஷன்” மற்றும் “காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணைக்குழு” போன்ற திட்டங்களை இந்தியா ஆரம்பித்துள்ளது.

இந்தியா சர்வதேச காலநிலை பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக செயற்பட்டு வரும் அதேவேளை பாரிஸ் ஒப்பந்தத்தின் குறிக்கோள்களுக்கும் உறுதியளித்துள்ளது. சூழலை பாதுகாக்கின்ற தூய்மையான ஆற்றலை மேம்படுத்துவதற்கு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்வதற்கும், அதற்கான நிதியை திரட்டுவதற்கும் இந்தியா சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைத்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு முகம் கொடுக்கும் வேலைத்திட்டங்களில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள நிலையில், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சமாளிக்க இன்னும் பல பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. சூழல் மாசற்ற, நிலையான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு தூய்மையான ஆற்றல் சக்தி உற்பத்திற்கான திட்டங்களில் இந்தியா தொடர்ந்தும் முன்னுரிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மித்ரா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT