Home » வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நிலாம், தில்லைக்கு பாராட்டு
பத்திரிகையாளர் விருது வழங்கும் விழா 2022

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நிலாம், தில்லைக்கு பாராட்டு

தினகரன் ஆசிரியர் பீடத்தில் கௌரவம்

by gayan
December 14, 2023 6:00 am 0 comment

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து நேற்றுமுன்தினம் கல்கிசை மவுண்ட் லவினியா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான அதியுயர் விருது வழங்கும் விழாவில், வாழ்நாள் சாதனையாளர் உயர்விருது பெற்றுக் கொண்ட தினகரனின் மூத்த ஊடகவியலாளர்களான எம்.ஏ.எம். நிலாம், கரவெட்டி எஸ். தில்லைநாதன் ஆகிய இருவரும் நேற்று தினகரன் ஆசிரியபீடத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டனர். தினகரன் பத்திரிகைக்கு

பல தசாப்த காலமாக பெரும் பங்களிப்பு நல்கி வருகின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம்.ஏ.எம். நிலாம், எஸ். தில்லைநாதன் ஆகிய இருவருக்கும் ‘வாழ்நாள் சாதனையாளர்’ அதியுயர் விருது வழங்கப்பட்டுள்ளது. தினகரனின் மற்றொரு சிரேஷ்ட பத்திரிகையாளராக விளங்கிய பி. பாலசிங்கம் இவ்விழாவில் விசேட கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தினகரனில் அக்காலத்தில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய பாலசிங்கம், லேக்ஹவுஸ் டெய்லி நியூஸ் பத்திரிகையின் இணையாசிரியராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவராவார். அவர் கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறியின் போதனாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆலோசகராகப் பணியாற்றிய எம்.ஏ.எம். நிலாம் மற்றும் தினகரன் பத்திரிகையின் கரவெட்டி பிரதேச ஊடகவியலாளராக பல தசாப்த காலமாக கடமையாற்றி வருகின்ற எஸ். தில்லைநாதன் ஆகிய இருவரும் நேற்று தினகரன் ஆசிரிய பீடத்துக்கு விசேட விருந்தினர்களாக அழைக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி, சந்தனமாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அவ்விருவரையும் கௌரவிக்கும் வகையில் சிற்றுண்டி விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருது பெற்ற இவ்விருவருக்கும் தினகரன்/ வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் தலைமையில் கௌரவிப்பு விழா நேற்று நடத்தப்பட்டது. மூத்த ஊடகவியலாளர்களான இவ்விருவரும் சுமார் நான்கு தசாப்த காலத்துக்கு மேலாக தினகரனுக்கு வழங்கி வருகின்ற பங்களிப்பு குறித்து தினகரன் ஆசிரியபீடத்தினர் நேற்று பெரிதும் பாராட்டி கருத்துத் தெரிவித்தனர்.

தினகரனுக்கு இவ்விருவரும் வழங்கி வருகின்ற பணி மென்மேலும் தொடர வேண்டுமென்று பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் இந்நிகழ்வின் போது கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT