Thursday, March 28, 2024
Home » நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் செல்லும் வழியைத் தவிர வேறு வழியில்லை

நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் செல்லும் வழியைத் தவிர வேறு வழியில்லை

– IMF உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு இன்றேல் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும்

by Rizwan Segu Mohideen
December 13, 2023 6:06 pm 0 comment

– பல அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெற மக்கள் மத்தியில் உருவாக்கும் கற்பனைக் கதைகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்
– பொருளாதாரம் வலுவடையும் போது, நிவாரணப் பணிகளை மேலும் செயல்படுத்த முடியும்
– வரி செலுத்துபவரைப் பாதுகாத்து, வரி மோசடியில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்
– இன்று சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்பவர்கள் நாட்டின் எதிர்கால சந்ததியையே அழிக்கிறார்கள்

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பை இல்லாதொழித்தால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தனார்.

அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் உருவாக்கும் கற்பனைக் கதைகள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும், இவ்வாறான கற்பனைக் கதைகளில் சொல்லப்படும் விடயங்களை நிறைவேற்ற முயற்சிப்பதன் மூலம் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்..

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகிய இரண்டு அடிப்படைக் காரணிகளை உரிய முறையில் கையாள்வதன் மூலம் நல்ல பலன்களைப் பெற முடிந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்த வேலைத்திட்டத்தை தொடர்வதன் மூலம் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையின் அங்கீகாரத்துடன், இலங்கையின் நிதித்துறையை பெரிதும் பலப்படுத்தும் வைப்புத்தொகை காப்புறுதிக்காக உலக வங்கியில் இருந்து 150 மில்லியன் டொலர்கள் கிடைப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அதன் மூலம் இந்த நாட்டின் வங்கி மற்றும் நிதித்துறை 100% பாதுகாப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

VAT உட்பட பல்வேறு வரிகள் விருப்பத்துடன் விதிக்கப்பட்டதல்ல, ஆனால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அந்த கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த நடவடிக்கைகளினால் பொருளாதாரம் வலுவடையும் போது மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எனவே நாம் இதுவரை வந்த பாதையை கைவிட இடமளிக்க வேண்டாம் என சகலரையும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, சிலர் பேச்சுக்களுடனும் விமர்சனங்களுடனும் நின்றுவிடும் போதும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆதரவைத் திரட்டி இந்நாட்டை வெற்றிப்பாதைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் நினைவு கூர்ந்தார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை ;

“இந்த கௌரவ சபையில் இன்று உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சற்று நேரத்திற்கு முன்னர், நாட்டின் மறுசீரமைப்புக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை அங்கீகரிக்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்போது வங்குரோத்து அரசு என்ற முத்திரையை கழற்றிவிட ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அந்தப் பயணத்தில் ஒரு முக்கிய இடத்தை அடைந்துவிட்டோம் என்று அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த சவாலான மற்றும் வெற்றிகரமான பயணத்திற்கு தலைமை ஏற்றமை குறித்து எனக்கு பணிவான மகிழ்ச்சியே உள்ளது.

நான் கடந்த ஆண்டு வங்குரோத்தான நாட்டையே பொறுப்பேற்றேன். இந்த வங்குரோத்து நாட்டைக் பொறுப்பேற்க இந்த நாட்டில் எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் முன்வரவில்லை. இந்த சவாலை ஏற்க அனைவரும் பயந்தனர். இப்போது பாராளுமன்றத்தில் உரையாற்றும் வீரர்கள் மற்றும் தலைவர்கள் எவருக்கும் நாட்டை ஏற்க தைரியம் இருக்கவில்லை. ஆனால் நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இலங்கை ஆபத்தான கயிற்றுப் பாலத்தை கடக்க நான் என்னை அர்ப்பணிப்பேன் என்று அன்று கூறினேன். என்னிடம் இருந்ததெல்லாம் உறுதியும் திட்டமும் மாத்திரமே. அப்போது எனது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு உறுப்பினர் கூட பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. இந்த கயிற்றுப் பாலத்தின் பயணத்தை சிலர் கேலி செய்தனர். அவமதித்தனர். ஆனால் இந்த பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் என்னை ஆதரித்தனர். அவர்களையும் கேலி செய்தனர்.

நாட்டு மக்கள் எனக்கு ஆதரவளித்தனர். நாட்டின் நலனுக்காகவும், இலங்கையின் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு இந்தப் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர். வியாபாரிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அரச மற்றும் தனியார் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் வாழ்க்கை நெருக்கடிகள் ஏற்பட்டன. நான் எடுத்த சில கடினமான முடிவுகளை நாட்டு மக்கள் சிரமத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து காப்பாற்றுவதற்காகத்தான் அந்தத் துன்பங்கள் அனைத்தையும் எதிர்கொள்ள நேரிட்டது. நாம் அனைவரும் பொறுமையுடன் செய்த அர்ப்பணிப்பாலும் அனுபவித்த துன்பத்தாலும், நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.

நாட்டிற்காக அந்தத் துன்பங்களை அனுபவித்த மக்களும், அதேபோன்று, பாராளுமன்றத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவரும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கும் போராட்டத்தில் பங்கேற்ற பெருமைக்குரியவர்கள். அந்த அனைவரினதும் பங்களிப்பு நமது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என்பதில் சந்தேகமில்லை.
உலகில் வங்குரோத்து அடைந்த நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப எடுத்துக்கொண்டதை விட குறைந்த காலத்தில் நம்மால் மீண்டுவர முடிந்தது. மேலும், மக்கள் மீது குறைந்தளவு சுமையை சுமத்தி இந்த சவாலை வெற்றிகொள்ள முடிந்தது. இது ஒரு பாரிய வெற்றியாகும்.

கிரேக்க நாட்டில் 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. அவர்கள் நெருக்கடியைச் சமாளிக்க தனிநபர் வருமான வரியை 45% ஆக உயர்த்தினார்கள். வரவு செலவுத்திட்ட இலக்குகளை அடைய அனைத்து ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் அதிகளவில் குறைக்கப்பட்டன. இப்படி பல கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டன. நாட்டு மக்கள் தாங்க முடியாத துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. இதுபோன்ற உதாரணங்களை உலகின் பல நாடுகளில் காணலாம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, நான் நாட்டைப் பொறுப்பேற்ற ஆரம்ப கட்டத்தில், நாட்டில் பணவீக்கம் 70%ஐத் தாண்டியது. கடந்த ஒக்டோபர் மாதத்திற்குள், அதை 1.5% ஆகக் குறைக்க முடிந்தது. நமது திறைசேரிப் பத்திர வட்டி வீதம் (Treasury bills) 30% இல் இருந்து 13% ஆக குறைந்துள்ளது. ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையாமல் பாதுகாத்து ஓரளவு ஸ்திரத்தன்மைக்கு அதனைக் கொண்டு வந்தோம். நான் நாட்டைப் பொறுப்பேற்ற போது, ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி 80% வரை அதிகரித்திருந்தது. ஒரு டொலருக்கு 360 ரூபா வரை ரூபாவின் பெறுமதி குறைந்தது. இப்போது ஒரு டொலருக்கு 325 – 330 ரூபா என்ற அளவில் நிலைபெற்றுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லெபனான் இன்னும் அந்நிய செலாவணி விகிதத்தை நிலைப்படுத்த முடியாமல் தவிக்கின்றது.

நான் முன்பே கூறியது போல், நாட்டின் பெரும்பான்மையான மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால், கயிற்றுப் பாலத்தை கடக்க முடிந்தது. கயிற்றுப் பாலம் எனும்போது ஹென்றி ஜெயசேனவின் “ஹூனுவடயே கதை” தான் நம் நாட்டில் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருகிறது. அந்த நாடகத்தில் வருகின்ற கயிற்றுப் பாலத்தின் பாடலைப் பாடும் குரூஷா “எங்களுக்கு வேறு வழியில்லை, மகனே – இந்த வழியில், செல்வோம் மகனே” என்று கூறுகிறார்: இன்றும் நாம் அதனையே கூற வேண்டும். இந்த வழியைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

அன்றிலிருந்து இன்று வரை நான் இதே கதையைத்தான் கூறி வருகிறேன். இந்த வழியைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இந்தப் பாதையில் இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது மற்றும் கடன் மறுசீரமைப்பு. அந்த இரண்டு காரணிகளையும் நாங்கள் சரியாகக் கையாண்டோம். அதனால் நல்ல பலன்களைப் பெற முடிந்தது. இந்தப் பாதையில் தொடர்ந்து பயணித்தால் நாம் அபிவிருத்தி அடைந்த நாடாக மாறலாம்.

இது ஒரு நீண்ட பயணம். ஓரிரண்டு நாட்களில் முடிக்கும் பயணம் அல்ல. 2048 வரை செல்ல வேண்டிய பயணம். ஆனால் நமக்கு இந்த வழியைத் தவிர வேறு வழியில்லை. நாம் வேறு வழியில் சென்றால், நமக்கு எதிர்காலம் இல்லை. நான் முன்பு சொன்ன இரண்டு முக்கிய காரணிகளை உடைத்தால், முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும். மீண்டும் நாம் வங்குரோத்து நாடாக முத்திரை குத்தப்படுவோம்.

உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிடுகிறேன். நமது நாட்டு அரசாங்கங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக 11 ஆண்டுகளாக நீர் கட்டணத்தை அதிகரிக்கவில்லை. பல ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. நீர் வழங்கல் சபை மற்றும் மின்சார சபையின் நட்டங்களை வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுத்தான் பூர்த்தி செய்தனர். இந்த தவறை மீண்டும் எம்மால் செய்ய முடியாது.

அன்றாடச் செலவுகளுக்காக அன்றி, முதலீட்டிற்காகவே கடன் பெற வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடன் வாங்கி நுகர்வுக்குச் செலவழித்தால் வீழ்ச்சி அடைவோம் என்று புத்த பெருமான் உபதேசித்திருக்கிறார். எனவே, அந்த பழைய தவறுகளைக் களைந்து, இந்தப் பாதையில் தொடர வேண்டும். புதிய கருத்தியல்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்தப் பாராளுமன்றத்தின் அரச நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ த சில்வாவினால் நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், இலங்கை இதுவரை எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் பின்னணியிலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிக் கட்டுப்பாடுகள், நாணய மதிப்பிழப்பு, செலவு-பிரதிபலிப்பு பயன்பாட்டு விலை நிர்ணயம், புதிய வரி மற்றும் வரி விகிதங்கள் மற்றும் வைப்பு விகிதங்களை உயர்த்துவதன் மூலம் நிதிக் கொள்கை இறுக்கம் உள்ளிட்ட கொள்கை நடவடிக்கைகள் ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்தன. பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ குறிப்பிட்டது போல், தற்போது நாம் குறிப்பிட்ட அளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடிந்துள்ளது.

உண்மையைச் சொல்வதானால், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாம் செயல்படுத்தும் கொள்கைகள் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு நாம் செய்திருக்க வேண்டியவை. ஆனால் சில அரசியல் குழுக்கள் தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்டு இவற்றைப் புறக்கணித்தன.

நான் பிரதமராக இருந்தபோது 2003 இல் நிறைவேற்றப்பட்ட அரச நிதி முகாமைத்துவப் பொறுப்புக்கூறல் சட்டத்தை பலர் புறக்கணித்தனர். பொருளாதார நோக்கங்கள் நசுக்கப்பட்டு அரசியல் நோக்கங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதால் அந்தச் சட்டம் 100% நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்தத் தவறுகளுக்கான தண்டனையையே நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசியல் வாதிகள் தோற்றுவிக்கும் மாயைகள் தொடர்பில் முழு நாடும் கவனமாக செயற்பட வேண்டும். அவ்வாறான மாயைகளாக கூறப்படும் விடயங்களினால் நாம் மீண்டும் படுகுழியில் விழுவது மட்டுமன்றி வங்குரோத்து நிலைக்கும் செல்வோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தொகைக்கு அனுமதி கிடைத்துள்ளமையோடு எமக்கு பல நன்மைகள் கிட்டும். எமது நிதித்துறையில் பெரும் சக்தியாக அமையும் வகையில் வைப்பு காப்பீட்டுத் தொகையாக உலக வங்கி 150 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது. அதனால் வங்கி மற்றும் நிதித்துறைகள் 100% பாதுகாக்கப்படும். அதேபோல் ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெயிக்கா நிறுவனம் போன்ற நிதி நிறுவனங்களிடத்திலிருந்து அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக பெருந்தொகை பணம் எமக்கு கிடைக்கவுள்ளது. குறைந்த வட்டி மற்றும் சலுகை அடிப்படையிலான நிபந்தனைகளுடனேயே அந்த நிதி எமக்கு கிடைக்கவுள்ளது.

அதேபோல் தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சமின்றி இலங்கையில் முதலீடு செய்ய முடியும். எமது கடன் பத்திரங்களை மீண்டும் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும். எமது சந்தைகளை மீண்டும் இலகுவாக விரிவுபடுத்த முடியும். சர்வதேச வரவேற்பைப் பெறுவதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பதில் முழுமையாக பயனடைய வேண்டும். இவற்றினால் மாத்திரம் நாம் முழுமையான வெற்றி கண்டுவிட்டதாக எண்ணக்கூடாது. முழுமையான பொருளாதார சுதந்திரத்திற்காக நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

அதனால் நாம் இதுவரையில் பயணித்த சரியான பாதை மூழ்கடிக்க முயற்சிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். சிலர் கதைகளை கூறி விமர்சனங்களை மாத்திரமே முன்வைக்கும் வேளையில் நான் செயற்பாட்டு ரீதியான பலன்களை காண்பித்துள்ளேன். உலகத்தினதும், இலங்கையிலும் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்று வெற்றிப் பாதைக்குள் கொண்டுச் சென்றுள்ளேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, ஹர்ச டி சில்வா அறிக்கையின் முக்கிய விடயமொன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

“2023 செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது நீடிக்கப்பட்ட கடன் தொகை அனுமதிக்கப்பட்டதால் பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்படுள்ளது. ஓரளவு மகிழ்ச்சிக்குரிய விடயங்கள் நடந்திருந்தாலும், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த நீண்ட பயணம் ஒன்று அவசியம்” எமக்கு நீண்ட தூரம் பயணம் உள்ளது என்பது உண்மையாகும். ஆனால் கயிற்றுப் பாலத்தை கடந்த பின்னர் சிறந்த பாதை உருவாகும். சரியான வழியில் செல்லத் தவறினால் திக்கற்று நிற்போம்.

இந்த பயணத்தில் இரு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இதே வழியில் பயணிப்பது முதலவாது முறையாகும். கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாதிருத்தல் அடுத்த படிமுறையாகும். வங்குரோத்து நாடாக மாறியமைக்கான விடயங்களை மீண்டும் செய்யாதிருக்க வேண்டும்.

அதற்கு தயார் எனில் எதிர்காலம் சிறக்கும். அதற்கு எவரும் தயாரில்லை எனில் நாட்டின் எதிர்காலம் ஆபத்தானதாக அமையும். இந்த பயணத்தில் நாம் அடைய வேண்டிய பல இலக்குகள் உள்ளன. வெளிநாட்டு வருமானத்தின் இடைவெளியை குறைத்தல். வர்த்தக சமநிலையை பேணல், வரவு செலவு இடைவெளியை முடிந்த வரையில் குறைத்தல், வரவு செலவு திட்ட அடிப்படை கணக்குகளில் தன்னிறைவை ஏற்படுத்தல், நிதி ஒழுக்கத்தை வலுவாக பேணுதல் உள்ளிட்ட விடயங்களுக்காக நாம் புதிய பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும்.

புதிய உலகின் சவால்களுக்கு ஈடுகொடுக்கூடிய பொருளாதாரம், வலுவான டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம் என்பவற்றை உருவாக்கினால் புதிய தொழில் மற்றும் வருமான வழிமுறைகளையும் நாம் ஏற்படுத்திக்கொள்ள முடியும். முதலீடுகளை அதிகளவில் இலங்கைக்குள் கொண்டுவரவும் முடியும். வரிச்சுமையை படிப்படியாக குறைக்கும் இயலுமையும் கிட்டும்.

வற் வரி உள்ளிட்ட வரிகளால் சமூகத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளமை தெரிகிறது. விருப்பத்துடன் நாம் வரி விதிக்கவில்லை. மாற்று வழிகள் எவையும் இல்லாமையே வரி விதிப்புக்கு காரணமாகும். அது கடினமான தீர்மானமாகும். நாட்டின் எதிர்காலத்திற்காக அதனை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பொருளாதாரம் வலுவடையும் போது மக்களுக்கு தேவையான சலுகைகளை வழங்கவும் எம்மால் முடியும்.

அதேபோல் எமது வரிச் சட்டத்தில் பல்வேறு குறைப்பாடுகள் காணப்படுகின்றன. நான் வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிட்டிருந்ததை போல, பலர் ஆவணங்களை பதிவு செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். அவர்கள் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதே அதற்கு காரணமாகும். அந்த நிலைமையை நாம் மாற்றுவோம். வரிப் பத்திரமுள்ள பிரஜைகளை நசுக்கும் திட்டத்திற்கு மாறாக அவர்களை மதிக்கும் முறைமையொன்றை நாம் ஏற்படுத்துவோம்.

வரிச் சட்டத்தில் காணப்படும் இடைவெளிகள் காரணமாக பல வருடகாலமாக வரிச் செலுத்தாமல் இருப்பதற்கான வழி ஏற்பட்டுள்ளது. அந்த நிலையை மாற்ற வேண்டும். வரி செலுத்துவோரை நாம் பாதுகாப்போம். வரி செலுத்தாதவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்துவோம்.

புதிய பொருளாதாரத்தின் வாயிலாக மாத்திரமே இவ்வாறான நடைமுறை மாற்றங்களை ஏற்படுத்த முடியும். காலோசிதமான திட்டங்கள், புதிய வழிமுறைகள், சிறந்த அணுகுமுறைகள் மற்றும் புதிய நிறுவனச் சட்டதிட்டங்களும் அதற்கு அவசியப்படும்.

மேற்படி அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய புதிய பொருளாதாரத்தை கட்டமைக்காமல் பழமையான திட்டங்கள் மீது தங்கியிருந்தால், நாம் மீண்டும் நெருப்பில் விழுவோம்.

எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை, மீண்டும் உருவாகும். வரிச்சுமை கடுமையாக அதிகரிக்கும். அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளம் குறைக்கப்படும். தொழில்கள் அற்றுப் போகும். 25 வருடங்களானாலும் நாட்டை மீட்க முடியாத நிலைமை உருவாகும். இவற்றைத் தவிர்க்க வேண்டுமாயின் புதிய சிந்தனைகளும் எண்ணக்கருக்களும் அவசியம்.

அதற்குரிய பின்புலத்தை ஏற்படுத்துவதற்காக எதிர்கால சந்ததிகளின் கல்வி வாய்ப்புக்களை அதிகரிக்க வேண்டும். உயர்கல்வியில் சித்தி பெறும் அனைவருக்கும் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

முன்னைய காலத்திலிருந்தே நாம் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளோம். மீண்டும் அந்த நிலையை உருவாக்க வேண்டும். அதற்காக முழுமையான விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

புதிய வலுசக்தி ஆற்றல் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். மீள் புதுப்பிக்கத்தக்க மற்றும் பசுமை சக்தியை அதிகளவில் பயன்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும்.

அடுத்த வருடத்தின் முதற் பகுதியில் இலங்கையின் பெருமளவான மக்களை வீட்டு உரிமையாளர்களாகும் வேலைத்திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துவோம்.
இதுபோன்ற பல பணிகளை 2024 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாம் முன்னெடுக்க இருக்கிறோம்.

எமது தவறுகளினால் சுமார் 50 ஆண்டுகால அபிவிருத்திப் பாதை வீணடிக்கப்பட்டது. இந்த தவறுகளை யார் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுகளை பேசுவதால் தீர்வு ஏற்படாது. அடுத்த 10 ஆண்டுகளில் நாம் இழந்த 50 வருட குறைபாடுகளையும், விடுபட்டவைகளையும் சீர்செய்வோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாக இருந்தால் நாட்டை ஆட்சி செய்வதற்கு அரசாங்கம் எதற்கு என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். தாம் ஆட்சிக்கு வந்ததும் ஐ.எம்.எப்.க்கு தாங்கள் நிபந்தனைகள் விதிப்பதாக கதை சொல்கிறார்கள். இவை உண்மையில் முட்டாள்தனமான கதைகள். பொருளாதாரம் பற்றி முன்பள்ளி அறிவு உள்ளவர்கள் கூட இதுபோன்ற கதைகளைச் சொல்ல மாட்டார்கள்.

தற்போதைய நிபந்தனைகளுடன் இதே பாதையில் தொடர்ந்து சென்று வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினால் மட்டுமே ஜஎம்எப் நிபந்தனைகளில் இருந்து நாம் வெளியேற முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இப்படித்தான் ஏனைய ஆசிய நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் தங்கள் நாடுகளை கட்டியெழுப்பியுள்ளன.
1991இல் இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. தாய்லாந்து 1997 இல் கடுமையான பொருளாதார சரிவைச் சந்தித்தது. அந்த நாடுகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு கிடைத்தது. ஜஎம்எப் உம் கடன் வழங்குநர்களும் முன்வைத்த கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவர்கள் தங்கள் பொருளாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்பினார்கள். பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களை கண்டறிந்தார்கள். பாரிய மற்றும் புரட்சிகரமான பொருளாதார சீர்திருத்தங்கள் அந்த நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன.

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் சில ஒப்பீடுகளைச் செய்ய விரும்புகிறேன். 1960 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 01 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. தாய்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 02 பில்லியன்கள். 2022 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 74 பில்லியனாக இருந்தது. தாய்லாந்தில் 495 பில்லியன்களாக இருந்தது.

1960 இல், தாய்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எமது நாட்டை விட இரட்டிப்பாக இருந்தது. 2022இல் எமது நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி போல் 06 மடங்காக அதிகரித்திருந்தது. இந்த இரு நாடுகளின் தனிநபர் வருமானத்தை ஒப்பிட்டால் 1960இல் நமது நாட்டின் தனிநபர் வருமானம் 144 டொலராகவும், தாய்லாந்தில் 103 டொலராகவும் இருந்தது. 2022இல் நமது நாட்டின் தனிநபர் வருமானம் 3,474 டொலர்களாகவும் தாய்லாந்து நம்மை விட இரண்டு மடங்கு அதிகமாக 6,908 டொலர்களாகவும் உள்ளது. தாய்லாந்தினால் முடியுமானால், நம்மால் ஏன் முடியாது?

இந்த பொருளாதார பலத்தை அடைய தாய்லாந்து முழுமையான மறுசீரமைப்புகளை செயல்படுத்தியது. நெருக்கடியைச் சந்தித்த அனைத்து நாடுகளும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்குநர்களினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றே வெற்றி பெற்றுள்ளன. அவர்கள் அதே பாதையை பின்பற்றி தமது பொருளாதாரத்தை உருவாக்கினர். இவற்றை மீறிய நாடுகள் மீண்டும் பாதாளத்தில் விழுந்தன.

எனவே இந்த நிபந்தனைகளைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நாம் இந்த நிலைமைகளிலிருந்து விடுபட முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவ்வளவு சிரமமானதாக இருந்தாலும் அந்த நிபந்தனைகளைப் பின்பற்றி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், தென் கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் எவ்வாறு அந்தந்தப் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளன என்பதை நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். இந்த ஆசிய நாடுகளின் உடன்பாடுகளின் ஊடாக நமது பயணம் தொடர வேண்டும்.

ஆனால் சில குழுக்கள் இந்த பயணத்திற்கு இடையூறாக உள்ளன. இந்தப் பயணத்தை சீர்குலைக்க வேலை நிறுத்தங்கள் நடத்தப்படுகின்றன. பத்தாயிரம், இருபதாயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்பவர்கள் நாட்டின் எதிர்கால சந்ததியை தான் நாசமாக்குகிறார்கள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த குழந்தையிலிருந்து, இந்த உலகத்தின் ஒளியைக் கண்ட அனைத்து குழந்தைகளின் எதிர்காலத்தையும், அவர்கள் பத்தாயிரம் ரூபாய்க்காக நாசமாக்குகினறனர். பத்தாயிரம் ரூபாயினால் கருவில் இருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருக்கலைப்பு செய்கின்றனர்.

அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் இந்தியா உருவானதை பாருங்கள். அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் தாய்லாந்து கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் ஆசிய நாடுகள் மீண்டுள்ளன. அந்த நாடுகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தங்கள் நிகழ்காலத்தை தியாகம் செய்தனர். ஆனால் நம் நாட்டின் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தங்கள் நிகழ்காலத்திற்காக அழிப்பதற்காக வேலை நிறுத்தம் செய்கிறார்கள். நாசகார வேலைகள் செய்கின்றனர். இது வருந்தத் தக்கவிடயமாகும்.

ஆனால் நாட்டின் நிலை, பொருளாதார நெருக்கடி மற்றும் நமது பயணத்தின் சரியான தன்மை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் இந்த நாட்டில் உள்ளனர். சிரமங்களுக்கு முகங்கொடுத்து இதே பாதையில் தொடர்ந்தால், சிரமங்களை படிப்படியாக குறைக்க முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். பொருளாதாரம் ஸ்திரமாகவும் வலுவாகவும் இருந்தால், மக்கள் மீதான சுமையைக் குறைக்க முடியும். இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பலருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். எதிர்காலத்தில் அந்தச் சலுகைகளை முழு நாட்டிற்கும் வழங்க முடியும்.

எனவே அரசியல் கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இன்னும் நான்கைந்து வருடங்கள் சிரமங்களையும் தடைகளையும் எதிர்கொண்டு முன்னேறிச் சென்றால், அடுத்த தலைமுறைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் காணி உரிமையாளர்களாகவும், வீட்டு உரிமையாளர்களாகவும் மாறுவதை விரும்பாதவர்கள் மட்டுமே நாம் செல்லும் பயணத்தை எதிர்க்க முடியும். விவசாய நவீனமயமாக்கலைக் கொண்டு வந்து மூன்று வேளையும் சாப்பிட விரும்பாதவர்கள்தான் இந்தப் பயணத்தை எதிர்க்க முடியும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதை விரும்பாதவர்களே இந்தப் பயணத்தை எதிர்க்க முடியும். புதிய தொழில்வாய்ப்புகள் மற்றும் வருமான வழிகளை உருவாக்க விரும்பாதவர்கள் மட்டுமே இந்த நடவடிக்கையை எதிர்க்க முடியும். இலங்கை சரியான பாதையில் தொடர்ந்து முன்னேறி, அபிவிருத்தியடைந்த நாடாக மாறுவதை விரும்பாதவர்களே இந்தப் பயணத்தை எதிர்க்க முடியும். நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படுவதை விரும்புபவர்களால் மட்டுமே இந்த நடவடிக்கையை எதிர்க்க முடியும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, நாங்கள் எங்கள் மனசாட்சிக்குக் கீழ்ப்படிகிறோம். அரசியல் அதிகாரத்தின் மீதான பேராசையை, தேர்தல் நேரத்திற்கு மட்டும் மட்டுப்படுத்துவோம். நாட்டின் எதிர்காலம் மற்றும் தேசத்தின் எதிர்காலம் பற்றி சிந்திப்போம். நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நம்மை அர்ப்பணிப்போம். நம் நாட்டில் பிறந்த மற்றும் பிறக்காத குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தியாகம் செய்ய நீங்கள் தயாரா? என்ற கேள்வியை இந்த கௌரவ சபையில் முன்வைக்கிறேன். அதனை வார்த்தைகளால் அன்றி செயல்களால் நீங்கள் நிரூபிக்க வேண்டும். நன்றி.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT