Thursday, March 28, 2024
Home » வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் மேலும் ஒரு தொழிலாளரின் சடலம் மீட்பு

வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் மேலும் ஒரு தொழிலாளரின் சடலம் மீட்பு

- 4 நாட்களின் பின்னர் இருஉடல்களும் மீட்பு

by Prashahini
December 8, 2023 4:53 pm 0 comment

சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மற்றுமொரு தொழிலாளர் ஜெயசீலனின் சடலம் இன்று (08) பிற்பகல் 2.00 மணியளவில் மீட்கப்பட்டது.

சடலத்தை பெட்டியில் வைத்து பேரிடர் மீட்புக் குழுவினர் வெளியே கொண்டுவந்தனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, இன்று அதிகாலையில் நரேஷ் என்ற இளைஞரின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை கிண்டி 5 பர்லாங் சாலை – வேளச்சேரி சாலை இணைப்பில் கட்டுமான வேலைக்காக தனியார் நிறுவனம் சார்பில் சுமார் 50 அடி ஆழத்துக்கும் மேல் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் தங்கி பணி செய்வதற்கு வசதியாக, அருகே கேரவன் போன்ற கன்டெய்னர் வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக, தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 3ஆம் திகதி முதலே சென்னையில் பலத்த புயல் காற்றுடன், கனமழை கொட்டிய நிலையில், 4ஆம் திகதி அதிகாலை கட்டுமான நிறுவனம் தோண்டியிருந்த ராட்சத பள்ளத்தின் பக்கவாட்டில் மழை நீரால் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில், அருகே இருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தற்காலிக ஜெனரேட்டர் அறை, தொழிலாளர்கள் தங்கும் கன்டெய்னர் வாகனம் ஆகியவையும் அந்த பள்ளத்தில் சரிந்து மூழ்கின.

இதில், மழை பாதிப்புகளை பார்வையிட வந்த கட்டுமான நிறுவனத்தின் பணிதள பொறியாளரான வேளச்சேரியை சேர்ந்த 29 வயதான ஜெயசீலன் , எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஜெனரேட்டர் அறையில் இருந்த ஊழியரான வேளச்சேரியை சேர்ந்த 24 வயதான விஜயநகரை சேர்ந்த நரேஷ் உட்பட அப்பகுதியில் இருந்த 5 ஊழியர்கள் ராட்சத பள்ளத்தில் விழுந்தனர்.

அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பொலிஸார் ஓடிவந்து, பள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 3 ஊழியர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். ஜெயசீலன், நரேஷ் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினர். அவர்களை மீட்கும் பணி 4ஆவது நாளாக நேற்றும் நடந்தது. என்எல்சி நிறுவனத்திடம் இருந்து ராட்சத பம்ப் வரவழைக்கப்பட்டு, தண்ணீரை விரைந்து வடியவைப்பதற்கான பணி தீவிரமாக நடந்தது.

இந்நிலையில் நரேஷின் உடல் இன்று காலை மீட்கப்பட்டது. மற்றொருவரான ஜெயசீலனின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT