Thursday, March 28, 2024
Home » தினகரன் குடும்பத்தில் இருவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

தினகரன் குடும்பத்தில் இருவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

- சிலுமின பத்திரிகைக்கு 4 உயர் விருதுகள் உள்ளிட்ட 5 விருதுகள்

by Rizwan Segu Mohideen
December 12, 2023 9:18 pm 0 comment

தினகரன் பத்திரிகைக்கு பல தசாப்த காலமாக பெரும் பங்களிப்பு நல்கி வருகின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இருவர் இன்று சிறப்பு உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆலோசகராகப் பணியாற்றிய எம்.ஏ.எம். நிலாம், தினகரன் பத்திரிகையின் கரவெட்டி பிரதேச ஊடகவியலாளராகக் கடமையாற்றி வருகின்ற எஸ். தில்லைநாதன் ஆகியோர் இன்று ஊடகத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஊடகத்துறையின் நிபுணத்துவத்தை அங்கீகரிப்பதும், ஊடகத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவதும் இதன் நோக்கமாகும்.

ஊடகத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கும் இந்நிகழ்வு இன்று (12) மாலை கல்கிஸ்ஸை ஹோட்டலில் இடம்பெற்றது.

இவ்விருது வழங்கும் நிகழ்வு 24ஆவது முறையாக இம்முறை இடம்பெற்றது.

இம்முறை 2022 வருடத்திற்காக விருதுகள் வழங்கப்பட்டன.

இங்கு லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிங்கள வார இறுதி பத்திரிகையான சிலுமின பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் 4 சிறந்த விருதுகளையும், ஒரு தகுதி விருதையும் பெற்றனர்.

வருடத்தின் சிறந்த சுற்றுச்சூழல் ஊடகவியலாளராக சுபாஷினி ஜயரத்ன, சமூக பிரச்சினைகளை பதிவு செய்யும் சிறந்த ஊடகவியலாளராக தானியா மோசஸ், சிறந்த செய்திகளை வழங்கிய தாரக விக்ரமசேகர, சிறந்த விளையாட்டுப் ஊடகவியலாளராக பௌஸ் மொஹமட் ஆகியோர் தெரிவானர். வருடத்தின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை வஜிர லியனகே பெற்றார்.

இவ்வருட விருது வழங்கும் நிகழ்வில் 2022 ஆம் ஆண்டு லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிலுமின 4 சிறப்பு விருதுகளையும் ஒரு தகுதி விருதையும் பெற்றுள்ளதுடன், தினமின பத்திரிகை ஒரு தகுதி விருதைப் பெற்றுள்ளது.

இலங்கை ஆசிரியர் மன்றமும் இலங்கை பத்திரிகை நிறுவனமும் இணைந்து சிங்கள, தமிழ், ஆங்கில ஊடகங்களில் 16 பிரிவுகளுக்காக இந்த விருதுகளை வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவிற்கு 7 ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த 354 பேர் விண்ணப்பித்திருந்தனர். இங்கு 13 பேர் கொண்ட நடுவர் குழுவால் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இங்கு மூன்று மொழிகளிலும் சிறந்த 36 ஊடகவியலாளர்களுக்கு பேனா அமைப்பிலான விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT