Saturday, April 20, 2024
Home » T20 கிரிக்கெட் போட்டி; இந்தியா – தென் ஆபிரிக்கா மோதல்

T20 கிரிக்கெட் போட்டி; இந்தியா – தென் ஆபிரிக்கா மோதல்

- தொடரின் முதல் ஆட்டம் இன்று

by Prashahini
December 10, 2023 7:11 pm 0 comment

இந்தியா – தென் ஆபிரிக்கா அணிகள் இடையிலான முதல் T20 கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி 3 T20 ஆட்டம்,3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் T20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு டர்பன் நகரில் நடைபெறுகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி சமீபத்தில் உள்நாட்டில் ஆஸி. அணிக்குஎதிராக நடைபெற்ற T20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற உற்சாகத்துடன் தென் ஆபிரிக்க தொடரை சந்திக்கிறது. துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளங்கள், அவுஸ்திரேலிய அணியில் வலுவான பந்து வீச்சாளர்கள் இல்லாதது, துடுப்பாட்டத்தில் பெரிய அளவிலான நட்சத்திர வீரர்கள் பங்கேற்காதது ஆகியவை இந்திய அணிக்கு சற்று சாதகமான விஷயங்களாக இருந்தன.

ஆனால் தென் ஆபிரிக்க தொடர் இளம்வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணிக்கு கடும் சவால்தரக்கூடும். ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் வலுசேர்க்கக்கூடும். தொடக்க வீரராக ஷுப்மன் கில்லுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கக்கூடும். இதனால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். 3ஆவது இடத்தில் ஸ்ரேயஸ் ஐயர், 4ஆவது இடத்தில் சூர்யகுமார் யாதவ், 5ஆவது இடத்தில் ரிங்கு சிங் களமிறங்கக்கூடும்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெறுவதில் இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி நிலவக்கூடும். இதில் பினிஷர் பணியை ஜிதேஷ் சிறப்பாக மேற்கொள்ளக்கூடியவர் என்பதால் அவரே விளையாடும் லெவனில் இடம் பெற அதிகவாய்ப்புகள் உள்ளன. 7ஆவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக ரவி பிஷ்னோய் அல்லது குல்தீப் யாதவ் இடம் பெறுவார். மீதம் உள்ள 3 இடங்களை வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர் அல்லது அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நிறைவு செய்வார்கள்.

தென் ஆபிரிக்க அணியை பொறுத்தவரையில் உலகக் கோப்பை தொடரின் அரைஇறுதிக்கு பின்னர் சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. பேட்டிங்கில் கேப்டன் எய்டன் மார்க்ரம், ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சவால் அளிக்கக்கூடும்.

பந்து வீச்சில் காகிசோ ரபாடாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் காயம் காரணமாக அன்ரிச் நோர்க்கியா, லுங்கி நிகிடி ஆகியோர் விளையாடவில்லை. எனினும் மார்கோ யான்சன், ஜெரால்டு கோட்ஸி, ஆண்டில் பெலுக்வாயோ, கேசவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் வலுவானவர்களாகவே திகழ்கின்றனர்.

அணிகள் விவரம் – இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் ஷாகர்.

தென் ஆபிரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஓட்னியேல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நந்த்ரே பர்கர், ஜெரால்டு கோட்ஸி, டோனோவன் ஃபெரைரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ யான்சன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், டேவிட் மில்லர், ஆண்டில் பெலுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லிசாத் வில்லியம்ஸ்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT