விச ஊசிக்கு பதில் மின்சார கதிரையில் மரண தண்டனையை விரும்பிய கைதி | தினகரன்

விச ஊசிக்கு பதில் மின்சார கதிரையில் மரண தண்டனையை விரும்பிய கைதி

விச ஊசி மூலம் மரண தண்டனை வேதனை தருவதாக கூறிய அமெரிக்காவின் டென்னிசீ மாநில கைதி ஒருவருக்கு மின்சார கதிரை மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

36 ஆண்டுகள் மரண தண்டனை கைதியாக இருந்த டேவிட் ஏர்ல் மில்லர் என்பவர் மீதே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. விச ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவங்கள் அண்மைக்காலத்தில் தவறுகளை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் பயன்படுத்தப்படும் விச மருந்து நீண்டது மற்றும் வேதனை தரும் மரணத்தை ஏற்படுத்துவதாக 61 வயது மில்லர் கூறியுள்ளார். இதே நிலைப்பாட்டை கூறிய மற்றொரு கைதியான எர்முண்ட் சகோர்ஸ்கி மீது கடந்த மாதம் மின்சார கதிரை மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மனநலம் பாதிக்கப்பட்ட 23 வயது பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மில்லருக்கு 1981 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் 1890கள் வரை தூக்கிலிடப்பட்டே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதோடு அதனைத் தொடர்ந்து மின்சார கதிரை பரவலாக பயன்படுத்தப்பட்டது. 1982 டெக்சாஸ் மாநிலத்திலேயே முதல் முறை விச ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அது தொடக்கம் அந்த முறை பழக்கத்திற்கு வந்தது.


Add new comment

Or log in with...