ஐ.நாவின் மத்தியஸ்தத்தில் யெமன் அமைதிப் பேச்சு சுவீடனில் ஆரம்பம் | தினகரன்

ஐ.நாவின் மத்தியஸ்தத்தில் யெமன் அமைதிப் பேச்சு சுவீடனில் ஆரம்பம்

யெமனில் நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஐ.நா மத்தியஸ்தத்திலான அமைதிப் பேச்சுவார்த்தை சுவீடனில் நேற்று ஆரம்பமானது.

ஸ்டொக்ஹோமுக்கு வெளியில் உள்ள ஜொஹனஸ்பேர்க் கோட்டையில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் யெமன் அரசு பிரதிநிதிகளுடன் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக ஐ.நா குழு முயற்சிக்கவுள்ளது.

யெமன் யுத்தம் அண்மைய ஆண்டுகளில் உலகின் மிக மோசமான மனிதாபிமாக நெருக்கடியை ஏற்படுத்திய யுத்தமாக மாறியுள்ளது. இந்த மோதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு மில்லியன் கணக்கான மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னரே இரு தரப்புக்கும் இடையில் முதல் முறையாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கடைசியாக இடம்பெற்ற அமைதி முயற்சி ஜெனிவாவுக்கு ஹூத்திக்கள் வருகைதர தவறியதால் கடந்த செப்டெம்பரில் முறிந்தது.

தற்போதைய பேச்சு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. யெமன் எதிர்பார்க்கும் எதிர்கால அரசியல் தீர்வு குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்படுவதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

சவூதி அரேபியா தலைமையிலான இராணுவ கூட்டணி ஆதரவளிக்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற யெமன் அரச பிரதிநிதிகள் கடந்த புதன்கிழமை சுவீடனை வந்தடைந்தனர். இதற்கு ஒருநாள் முன்னதாக யெமனுக்கான ஐ.நா விசேட தூதுவர் மார்டின் கிரிப்பிட் மற்றும் ஈரான் ஆதரவு ஹூத்திக்களின் பிரதிநிதிகள் ஸ்டொக்ஹோமை அடைந்தனர்.

இது அமைதிக்கான உண்மையான சந்தர்ப்பம் என்று அரசு பிரதிநிதி அப்துல்லாஹ் அல் அலிமி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் பேச்சுவார்த்தையின் வெற்றிக்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று ஹூத்தி தூதுக்குழுவின் தலைவர் முஹமது அப்தல்சலாம் உறுதி அளித்துள்ளார். எனினும் தமது போராளிகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

இந்த அமைதி முயற்சியின் முன்னெற்றமாக, காயமடைந்த 50 ஹூத்திக்களை சிகிச்சைக்கு ஓமானுக்கு அழைத்துச் செல்ல கிரிப்பிட்டினால் முடிந்தது.

இது சுவீடன் பேச்சுவார்த்தையில் நம்பிக்கையை அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஷியா ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கு யெமனின் கணிசமான பகுதியை கைப்பற்றியதை அடுத்து நாட்டு ஜனாதிபதி அப்துத்ரப்பு மன்சூர் ஹதி வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில் 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்த யுத்தம் ஆரம்பமானது.

ஹுத்திக்களின் பின்னால் ஈரான் இருப்பது குறித்து குற்றம் சுமத்திய ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபியா மற்றும் ஏழு அரபு நாடுகள் யெமன் அரசை மீட்கும் முயற்சியில் தலையிட்டதை அடுத்து நிலைமை மோசமடைந்தது.

மோதல் காரணமாக குறைந்து 6,600 பொதுமக்கள் கொல்லப்பட்டு 12,560 பேர் காயமடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் தடுக்க முடியுமான போசாக்கின்மை, நோய் மற்றும் மோசமான சுகாதாரம் காரணமாக மரணமடைந்தனர்.


Add new comment

Or log in with...