மரணித்த சீனியர் புஷ்ஷுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி | தினகரன்

மரணித்த சீனியர் புஷ்ஷுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி

அரசு மரியாதை உடன் வொஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபுள்யூ புஷ்ஷின் இறுதிச் சடங்கில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி சடங்கில் கண்ணீர் மல்க பேசிய சீனயர் புஷ்ஷின் மகன் ஜோர்ஜ் புஷ், தனது தந்தையை “ஒரு நல்ல மனிதர், சிறந்த தந்தை” என்று வர்ணித்தார்.

அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதியாக 1989 முதல் 1993 வரை பணியாற்றிய சீனியர் புஷ், தனது 94ஆவது வயதில் கடந்த வெள்ளியன்று காலமானார்.

அவரது சொந்த மாகாணமான டெக்ஸாசில், அவரது மனைவி பார்பராவிற்கு அருகில் அவரது உடல் புதைக்கப்படும். தேசிய கதீட்ரலில் புதனன்று நடந்த இறுதிச் சடங்கில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா, பில் கிளின்டன், ஜிம்மி கார்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதன்கிழமையன்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு, பல அரசு நிறுவனங்களும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனைகளும் மூடப்பட்டன.

பொதுமக்களுக்காக நேற்றுக் காலை வரை அவரது சவப்பெட்டி, புனித மார்டின் எபிஸ்கோபல் தேவாலயத்தில் வைக்கப்பட்டது.


Add new comment

Or log in with...