ஹுவாவி நிறுவனர் மகள் கனடாவில் திடீர் கைது | தினகரன்

ஹுவாவி நிறுவனர் மகள் கனடாவில் திடீர் கைது

சீன ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகியைக் கனடிய அதிகாரிகள் வான்கூவர் நகரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் சீனா தொலைத் தொடர்பு நிறுவனத்தின் நிறுவனரின் மகளான மெங் வென்சு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படக்கூடும் என்று கனடாவின் நீதித்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. இம்மாதம் 1ஆம் திகதியே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கனடிய நீதிமன்றத்தில் இன்று அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

கைது செய்யப்பட்ட மெங்கை விடுவிக்குமாறு சீனத் தூதரகம் கோரியது. இந்தச் சம்பவத்தால் அமெரிக்காவுடனான தனது உறவில் விரிசல் அதிகமாகலாம் என்று சீனா அஞ்சுகிறது.

அமெரிக்க ஏற்றுமதி தடைச் சட்டத்தை மீறி வொஷிங்டனின் தயாரிப்புகளை ஈரானுக்கும் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ததாக 2016 ஆம் ஆண்டிலிருந்து ஹுவாவி நிறுவனத்திடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில நெருக்கடியான உறவொன்று நீடித்து வரும் நிலையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் அவரை உடன் விடுவிக்கும்படி சீனா கோரியுள்ளது. இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த கைதுக்கான காரணம் தொடர்பில் தெளிவு பெறுவதற்கு மற்றும் அவரது சட்ட உரிமையை பாதுகாத்து உடன் அவரை விடுக்க கோரி கனடா மற்றும் அமெரிக்காவுக்கு பிரிதிநிதிகளை அமைத்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹுவாவி உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். அந்த நிறுவனம் அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தை பின் தள்ளி சம்சுங்கிற்கு அடுத்து உலகின் இரண்டாவது ஸ்மார்ட் போர்ன் உற்பத்தியாளராக பெயர்பெற்றது.

சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி போதிய விபரங்கள் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் ஹுவாவி, மெங் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...