சிறப்பாக பிரகாசிக்கும் குசல் மெண்டிஸ் | தினகரன்

சிறப்பாக பிரகாசிக்கும் குசல் மெண்டிஸ்

ஒப்சேவர்- மொபிடெல் பாடசாலை விளையாட்டு வீரர் விருதை வென்ற மற்றொரு வீரர் குசல் மெண்டிஸ் இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு அருகில் இலங்கையை கொண்டு வந்த குசல் மெண்டிஸ் துரதிஷ்டவசமாக வெற்றிக்கனியை சுவைக்க முடியாமற்போய்விட்டது.

ரன் அவுட் மூலம் அவர் ஆட்டமிழக்கும் வரை வெற்றி வாய்ப்பு இலங்கையின் பக்கமே இருந்தது. அவர் சதத்தைப் பெற இன்னும் 14 ஓட்டங்களே இருந்தன. ஆனால் 2 ஓட்டங்களை எடுக்க முயன்ற இவரும் மற்றைய துடுப்பாட்ட வீரர் ரொசேன் சில்வாவும் முதல் ஓட்டத்தை கொஞ்சம் மெதுவாக ஓடியதால் சிக்கலாக்கியது.

இரண்டாவது ஓட்டத்துக்காக திரும்பி வந்துகொண்டிருந்தவர் கோட்டை எட்ட முன்னர் இங்கிலாந்து வீரர் வீசிய பந்து விக்கெட்டை சரித்திருந்தது. ஒரு ஓட்டத்துடன் நிறுத்தியிருக்கலாம் அல்லது இரண்டு ஓட்டங்களையும் வேகமாகவே ஓடி முடித்திருக்கலாம். இரண்டும் அல்லாத இக்கட்டான நிலை போட்டியின் முடிவையே மாற்றிவிட்டது. ரன் அவுட் மூலம் வெளியேற்றப்பட்டபோது குசல் மெண்டிஸ் 129 பந்துகளில் 86 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதில் ஒரு சிக்ஸரும் 8 பவுண்டரிகளும் உள்ளடங்கியிருந்தன.

அதேநேரம் பள்ளேகல மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்ற சதம் வெற்றிக்கு வழி வகுத்தது. டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பவான்களான அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி திறமைகாட்ட குசல் மெண்டிஸ் பெற்ற இந்த சதம் தொடரையே வெல்லும் அளவுக்கு அடிப்படையை இலங்கைக்கு பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. மேற்படி டெஸ்ட் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவாகவும் மேற்படி சதம் குசால் மெண்டிஸுக்கு வழி வகுத்தது.

இதேபோல் பங்களாதேஷுக்கு எதிராக டாக்காவில் நடைபெற்ற ரி 20 போட்டியும் குசால் மெண்டிஸின் துடுப்பாட்டத்திறமைக்கு சான்று பகரும் ஒருபோட்டியாகும். அப்போட்டியில் முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்களை பெற்றது.

இலங்கையைப் பொறுத்தவரை ரி 20 போட்டியொன்றில் 160 ஓட்டங்களை பெறுவது கொஞ்சம் சிரமமான காரியமாகும். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த குசல் மெண்டிஸ் ஆரம்பம் முதலே அதிரடியில் ஈடுபட்டார் 27 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றார். இதில் இரண்டு சிக்ஸர்களும் 8 பவுண்டரிகள் அடங்கும். குசலின் இந்த அதிரடி ஆரம்பம் 20 பந்துகள் மிகுதியிருந்த நிலையில் இலங்கைக்கு 6 விக்கெட் வெற்றியை பெற்றுக்கொடுத்தது. இந்தப் போட்டியிலும் சிறப்பாட்டக்காரர் விருது குசால் மெண்டிஸுக்கே கிடைத்தது.

இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குசல் மெண்டிஸ் 2239 ஓட்டங்களை பெற்றுள்ளார். ஒரு போட்டியில் அவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 196. சராசரி 36.11.

அத்துடன் 54 ஒரு நாள் போட்டிகளில் 1386 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 16 ரி 20 போட்டிகளில் 333 ஓட்டங்கள் பெற்றுள்ளார். ஒரு போட்டியில் பெற்ற அதிகபட்ச ஓட்டம் 70. டெஸ்ட் போட்டிகளில் குசால் ஒரு பந்து வீச்சாளராகவும் இருந்திருக்கிறார். ஆனால் வெறும் 78 பந்துகளை மட்டும் வீசியுள்ள அவர் ஒரேயொரு விக்கெட்டை மட்டும் எடுத்துள்ளார்.

குசல் மெண்டிஸ் மொறட்டுவை பிரின்ஸ் ஒப்வேல்ஸ் கல்லூரியில் படிக்கும்போதே கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் காட்டி வந்தார். 2012/2013 பருவ காலத்தில் இவர் காட்டிய திறமை காரணமாக 2013 ஆம் ஆண்டு ஒப்சேவர் – மொபிடெல் சிறந்த பாடசாலை வீரராக தெரிவானார்.

2002 இல் அதே பாடசாலைக்காக விளையாடிய சாஹன் விஜேரட்ண சிறந்த பாடசாலை வீரர் ஒவ்சேவர் – மொபிடெல் விருதை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒப்சேவர்- மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வென்ற சில வருடங்களிலேயே 2015 இல் குசல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் அறிமுகம் பெற்றார்.

அதேநேரம் 2015 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இளையோருக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்கு தலைவராக குசல் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்துக்கு எதிராக 2016 ஜூன் மாதம் டப்ளினில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் குசல் ஒருநாள் போட்டி அறிமுகத்தைப் பெற்றார்.

அப்போட்டியில் 59 பந்துகளில் அவர் 51 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணிக்கு நம்பிக்கையுடன் கூடிய உயர் நிலை வீரர் தேவைப்பட்ட நேரத்தில் குசல் மெண்டிஸ் கிரிக்கெட் விளையாட்டில் அறிமுகம் பெற்றது இலங்கை அணிக்கு பெரும் வரப்பிரசாதமாகியது.

இலங்கை அணியினர் துடுப்பாட்ட வரிசையில் மூன்றாவது வீரரின் இடத்தில் இருந்த குமார் சங்கக்கார ஓய்வுபெற்ற பின் குசல் மெண்டிஸ் அந்த இடத்துக்கு சரியாகப் பொருந்தினார்.

பங்களாதேஷுக்கு எதிராக காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் விளையாடி 156 ஓட்டங்களை பெற்றமை குசல் மெண்டிஸின் வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்றாகும்.

இரட்டை சதத்தை அவர் ஒருசில ஓட்டங்கள் மூலமே இழந்தார். ஆறு ஓட்டங்களைப் பெற்று இரட்டை சதத்தை எட்ட முடியன்றபோதே அவர் துரதிஷ்டமாக அவரது விக்கட்டை இழந்தார்.

அவரது 15 ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் 194 ஒட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

23 வருடங்களை எட்டும் மூவாயிரம் டெஸ்ட் ஓட்டங்களுக்குமேல் பெற்ற மூன்றாவது இலங்கை வீரர் இவராவார். இந்த இலக்கை எட்டிய நான்காவது இலங்கை வீரர்கள் அர்ஜுண ரணதுங்க மற்றும் மஹேல ஜெயவர்தன ஆவார்.


Add new comment

Or log in with...