200 டெஸ்ட் விக்கெட்டுகள் புதிய உலக சாதனை படைத்த யாசிர் ஷா | தினகரன்

200 டெஸ்ட் விக்கெட்டுகள் புதிய உலக சாதனை படைத்த யாசிர் ஷா

அபுதாபியில் கடந்த 3-ம் திகதி ஆரம்பமாகிய 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, முதல் இன்னிங்ஸில் 116.1 ஓவர்களில் 274 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தலைவர் கேன் வில்லியம்சன் 89 ஓட்டங்கள் பெற்றார்.

பாகிஸ்தான் தரப்பில் பிலால் ஆசிஃப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 348 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 74 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள நியூஸிலாந்து அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது.

4-வது நாளான நேற்று வில்லியம் சோமர்வில்லியின் விக்கெட்டை பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா வீழ்த்தினார்.

இது அவருடைய 200-வது டெஸ்ட் விக்கெட். 33-வது டெஸ்டிலேயே 200-வது விக்கெட்டை எடுத்ததன் மூலம் 82 வருடச் சாதனையைத் தகர்த்துள்ளார் யாசிர் ஷா. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி கிரிம்மெட் 36 டெஸ்ட்களில் நிகழ்த்திய சாதனையை அதைவிடவும் குறைவான டெஸ்ட்களில் நிகழ்த்தி சாதித்துள்ளார்.

200 விக்கெட்டுக்கள் எடுத்த இவர், 100 டெஸ்ட் விக்கெட்டுகள் (17 டெஸ்டில்) மற்றும் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை (ஒன்பது டெஸ்ட் போட்டிகளில்) வேகமாக வீழ்த்தியவர்தான் பாகிஸ்தான் வீரர் யாசீர் ஷா.

 


Add new comment

Or log in with...