ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு நாளை வரை தடை நீடிப்பு | தினகரன்

ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு நாளை வரை தடை நீடிப்பு

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இன்றைய தினம் வரை உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நாளை எட்டாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை இன்றைய தினமும் விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன் மேற்படி தடையுத்தரவு நாளை வரை நீடிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை நேற்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்ற நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட ஏழு நீதியரசர்கள் குழு முன்னிலையில் நேற்றும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட, புவனேக்க அலுவிஹார, முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையிலேயே மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நீதிமன்ற வளாகத்தில் நேற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழுவின் முன்னிலையில் நேற்றைய தினம் காலை 10.00 மணிக்கு விசாரணைகள் ஆரம்பமாகின.

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான ஐ. தே. கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ், மாற்றுக்கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் உள்ளிட்டவற்றால் 13 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேற்படி மனுக்கள் மீதான விவாதம் கடந்த 4ம் திகதி ஆரம்பமானதுடன் முதலாவது நாளில் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி இருந்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தனர்.

நேற்று முன்தினம் மேற்படி மனுக்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் கருத்துக்களை முன்வைத்தார். அத்துடன் நேற்று முன்தினம் பிற்பகலில் விசாரணைகள் ஆரம்பமானதுடன் மனுதாரர்களின் சார்பில் சட்டத்தரணிகள் விடயங்களை முன்வைத்தனர்.

அதனடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன கருத்துக்களை முன்வைத்தார். அரசியலமைப்பின் 62 (2) சரத்தின் கீழ் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதியால் அதனை கலைப்பதற்கு உள்ள அதிகாரம் தொடர்பில் அவர் விடயங்களை முன்வைத்தார்.

1978ம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த பாராளுமன்றங்கள் தவிர ஏனைய பாராளுமன்றங்கள் அனைத்தும் அதன் ஆட்சிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னமே அதனை கலைப்பதற்கு ஜனாதிபதிகளுக்குள்ள அதிகாரங்கள் அரசியலமைப்பின் 62 (2) சரத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இது பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது சரத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடையீட்டு மனுதாரரான உதய கம்மன்பிலவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, ஜனாதிபதியின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்துவதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் செல்லுபடியற்றதாக்கப்படவேண்டும் என நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு மனுதாரர்கள் தவறிவிட்டார்கள் என்றும் இதனால் மேற்படி மனுக்களை விசாரிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)


Add new comment

Or log in with...