ரஷ்யாவிலிருந்து இரண்டு தரமற்ற புற்றுநோய் மருந்துகள் இறக்குமதி | தினகரன்

ரஷ்யாவிலிருந்து இரண்டு தரமற்ற புற்றுநோய் மருந்துகள் இறக்குமதி

- ரூ.3.8 பில். இழப்பு
- நிதி நட்டத்தை விடவும் மரணங்கள் மதிப்பிட முடியாதவை

ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற புற்றுநோய் மருந்துகளால் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டுக்கு 3.8 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் சங்க தலைவர் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.

மேற்படி இரண்டு மருந்துகளும் உலகின் எந்த பரிசோதனைக்கூடங்களிலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லையென்றும் இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நிதி தொடர்பான நட்டத்தையும் விட மரணங்களை மதிப்பிடமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு நிதி மற்றும் மரணங்களை ஏற்படுத்திய நபர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் நாரஹேன்பிட்டி அபயராமயவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் தகவல் அறிந்த உடனேயே முன்னாள் சுகாதார அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் அறிவித்ததாகவும் அதனையடுத்து அவர் அமைச்சின் செயலாளரை அழைத்து டென்டர் முறைமை அல்லாமல் இனிமேல் எந்தவொரு மருந்தையும் இறக்குமதிசெய்யக்கூடாது என பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.

மேற்படி மருந்து மாபியாவை இலகுவாக கையாள்வதற்கு வசதியாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ரூமி முஹம்மட் என்பவரை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக நியமித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு மேலாக நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 23 மருந்துகளில் 20 மருந்துகளை உற்பத்திசெய்வதை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தடைசெய்திருந்தார்.

அவர் தமக்கு தேவையானவர்களின் நலன் கருதி தனியார் நிறுவனங்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுத்து அவர்களுக்கூடாக வருமானங்களை பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

புற்றுநோயாளர்களுக்காக வழங்கப்படும் மருந்தான ட்ரஸ்டு சுமெப் ஊசி மருந்து மூலமே இந்த மருந்து மாபியா முதலில் ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹர்ட்கேட் என்ற வர்த்தக பெயரில் பர்மாஏஸ் தனியார் நிறுவனத்திற்கு ரஷ்ய பயோகேற் நிறுவனம் சார்பாக வழங்குவதற்கு டென்டர் வழங்கப்பட்டிருந்தது. அச்சமயம் அந்த டென்டருக்காக ஆறு நிறுவனங்கள் விலை தெரிவுகளை முன்வைத்திருந்தன. இதற்கிணங்க பார்மாஏஸ் நிறுவனம் – ரஷ்ய பயோகேற் சர்பாக குறைந்த விலை முன்வைக்கப்பட்டிருந்தது.

ஹர்ட்கேட் வர்த்தக பெயரில் குறிப்பிடப்படும் ட்ரஸ்டு சுமெப் ஊசி மருந்து ஹர்ட்கேட் என்ற பெயரிலான மருந்துக்கு ரஷ்யாவின் சுகாதார அமைச்சு 2016 ஜனவரி 20 ஆம் திகதியிலேயே அங்கீகாரம் வழங்கியிருந்தது. அது தொடர்பான விபரம் அந்த மருந்தை உற்பத்திசெய்யும் பயோகேற் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரணமாகவே புற்றுநோய் மருந்து தொடர்பாக டென்டரின் போது புற்றுநோய் டாக்டர்களின் கழகத்தில் அது முன்வைக்கப்பட்டு இம் மருந்தின் ஆய்வு பெறுபேறுகளுடன் சிபாரிசு அறிக்கை பெற்றுக்கொள்வது அவசியம். இதற்கிணங்க மேற்படி டென்டர் முறையில் அதுபோன்ற ஒரு செயற்பாடு இடம்பெற்றிருக்கவில்லை. எனினும் அவ்வாறு செயற்படாமல் அமைச்சினால் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பரிந்துரைக்கமைய மட்டும் மேற்படி மருந்தை பதிவுசெய்து ஹர்ட்கேட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பார்மாஏஸ் தனியார் நிறுவனத்திற்கு மருந்து டென்டர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேற்படி டென்டர் தொடர்பில் முன்வந்த பல்வேறு வர்த்தக பெயர் கொண்ட ட்ரஸ்டு சுமெப் ஊசி மருந்து தொடர்பில் பரிசீலனை செய்து அமைச்சின் செயலாளரிடம் அது தொடர்பில் கடிதமொன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

இதற்கிணங்க ஹர்ட்கேட் மருந்து நோயாளிகளுக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டாக்டர்கள் இதுபோன்று தெரிவித்திருந்த எதிர்ப்புகளை கருத்தில் எடுக்காமல் முஹம்மட் ரூமி என்பவர் மூலம் அதிகாரிகளின் தேவைக்கேற்ப ஹர்ட்கேட் ஊசி 5,000 பெற்றுக் கொள்வதற்காக 990 மில்லியன் பெறுமதியான டென்டரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிணங்க 2012 மே மாதம் முதல் இதுவரை 2,800 ஊசி மருந்துகள் 40,34,80,000 ரூபாவுக்கு கொண்டுவரப்பட்டது. புற்றுநோய் தொடர்பான டாக்டர்கள் கழகம் ஹர்ட்கேட் ஊசி மருந்து தொடர்பில் எதிர்ப்பை தெரிவித்ததால் முஹம்மட் ரூமி, அவர்களை பழிவாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார். அவரது அழுத்தம் காரணமாக மருந்தை சிபார்சு செய்யாத டாக்டர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சின் மூலமாக அறிவிப்பொன்றை வெளியிடவும் செய்தார்.

அதுமட்டுமன்றி பார்மாஏஸ் தனியார் நிறுவனத்துக்கு வேறு புற்றுநோய் மருந்துகள் உட்பட 2,250 மில்லியனுக்கான டென்டரையும் பெற்றுக்கொடுப்பதற்கு முஹம்மட் ரூமி நடவடிக்கை எடுத்தார் என்றும் அவர் தெரிவித்தார். (ஸ)


Add new comment

Or log in with...